2005 ம் ஆண்டு, பழங்குடி இருளர் சமூகத்தவர் ஒரு தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள், அத்தீர்மானத்தின் முக்கியமான அறிவிப்பு "தேர்தல் புறக்கணிப்பு". 2006 ம் ஆண்டு நடக்கவிருக்கும் மாநில சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அந்த தீர்மானத்தின் நகல்கள் துண்டறிக்கைகளாய் விநியோகிக்கப்பட்டது. தேர்தலை புறக்கணிக்கும் அந்த தீர்மானத்தில் ஒரே ஒரு விதிவிலக்கு அம்சம் இருந்தது.
அது, "தேர்தல் புறக்கணிப்பு, ஆனால் விடுதலைச் சிறுத்தைகளுக்கு விதிவிலக்கு"
ஆம், விடுதலை சிறுத்தைகளை தவிர வேறெந்த கட்சிக்கும் வாக்களிக்கப் போவதாகயில்லை என்று அந்த தீர்மானம் சொன்னது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சட்டங்களும் பாதுகாப்பும் தேர்தல் அரசியலின் மூலம் ஆட்சிக்கு வந்த கட்சிகளால் ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டதை மறுக்க முடியாது. ஆனால் பழங்குடி இருளர் சமூகத்தவரின் அந்த அறிவிப்பின் பின்னணியில் இருக்கும் நியாயத்தை அவர்களாகவே இருந்து உணர்ந்தாலொழிய, இந்த பொதுசமூகத்தால் அந்த வலியை உணரவே முடியாது. அந்த போராட்டங்கள் இன்று வரை தொடர்கிறது, நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இனச்சான்று இல்லாமல் கல்வியை தொடர முடியாத ஒரு தலைமுறைக் கனவு குழியில் தோண்டி புதைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
2005 ம் ஆண்டுக்கு முன்பிருந்து, ஜீன் 2018 தலைவர் தொல். திருமாவளவன் அவர்களது தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் வரை, பழங்குடி சமூகத்துவருக்கான பாதுகாப்பு அரணாகவும், களத்தில் நிற்கும் வீரர்களாகவும் ஒரு நெடிய வரலாறு திருமா அவர்களின் வழிகாட்டுதலின் படி விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தாருக்கு உண்டு. அதன் காரணமாகவே, அந்த பற்றுதலின் வெளிப்பாடாகவே நாம் விடுதலை சிறுத்தைகளை தவிர்த்து வேறு யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என்கிற பழங்குடி மக்களின் அறக் கோவத்தை அணுக வேண்டும்.
அரசியல் அதிகாரத்திலிருந்து சிந்திய கிளை அதிகாரத்தை கூட இன்னும் நுகர்ந்தும் பார்த்திடாத ஒரு இயக்கத்தை, அதன் தலைவரை நோக்கி "நீ தலித் மக்களுக்கு என்ன செய்தாய்?" என்கிற கேள்வியே அபத்தம். ஆனாலும் அந்த கேள்விகளுக்கு பதிலில்லாமல் இல்லை.
எந்தவொரு சமூகத்தையும் அரசியல் ரீதியாக தயார் செய்வதற்கு முன், அவர்களை பண்பாட்டு ரீதியாக தயார் செய்வது முதற்கடமையாகிறது. அதிலும் பிளவு பட்டுக்கிடக்கும் இந்திய தலித் சமூகத்தை ஒருங்கிணைப்பது பிரசவ வலியை விட நூறு மடங்கு வலியும் வேதனையும் கொடுக்கக்கூடிய அயற்சியான முயற்சி என்றால் அது சத்தியமாக மிகையல்ல. தமிழக தலித் சமூகத்திற்கென ஒரு போராட்ட வரலாறு உண்டு. அயோத்திதாசப் பண்டிதர், தாத்தா ரெட்டமாலை ஸ்ரீனிவாசன், LC குருசாமி, எம்.சி.ராஜா என்று இந்த பட்டியல் தொடர்கிறது. பண்பாட்டு தளத்திலும் அறிவு / அரசியல் தளத்திலும் தலித்துகளின் பங்களிப்போடு கூடிய போராட்டம் காலம் காலமாக நடந்துக் கொண்டு தானிருக்கிறது என்றாலும், அடக்குமுறைக்கு எதிராக "அடங்கு மறு, அத்து மீறு, திமிறி ஏழு" என்று வீறுகொண்டு எழுந்த குரலொன்று தமிழகத்தையே தன் பக்கம் திருப்பியது. எந்தவித அரசியல் அதிகாரமும் இன்றி, ஊடகத்துணையும் இன்றி, தனக்கான இடத்தை தானே நிறுவியது, தவிர்க்கப்பட முடியாத தலைவனாய் வளர்ந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான எந்த அநீதி அரங்கேறினாலும் தன் முதல் தடத்தை பதித்து "உங்களுக்கு நான் இருக்கிறேன், நீங்கள் அநாதையல்ல" என்றது அந்தக் குரல். கொடி பிடிக்கவும், ஆள் சேர்க்கவும் சிதறிக்கிடந்த தலித் சமூகத்தை இந்த நூற்றாண்டில் ஒருங்கிணைக்க துணிந்து, அதில் கணிசமான வெற்றியும் கண்டுள்ள இந்தச் சாதனையை தவிர வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள் நீங்கள் திருமாவிடம்? இதை வேறு யார் இங்கே சாத்தியப்படுத்திக்காட்டினார்கள்?
இதன் காரணமாகவோ என்னவோ, திருமா அவர்கள் தலித் தலைவராக அறியப்பட்டார். தலித் தலைவராக அறியப்படுவதில் சிக்கலேதும் இல்லை, ஆனால் தலித்தாய் பிறந்ததனாலவே அவர் தலித்துகளுக்கான தலைவராக மட்டுமே அறியப்படுவது இந்த சாதியச் சமூகத்தின் தோல்வி. அவர் தலித் தலைவராக அறியப்பட்டார், காரணம்; தலித்துகளுக்கு ஒன்றென்றால் வேறெந்த தலைவனையும் விட அவர் முன் வந்து களத்தில் நிற்கிறார், வேறெந்த தலைவனையும் விட அவர் தலித் பிரச்சனைகளை அதிகம் பேசுகிறார், வேறெந்த தலைவனையும் விட தலித் விடுதலை குறித்து அதிகம் சிந்திக்கிறார், அதனாலவே அவர் தலித் தலைவராக அறியப்படுகிறார், இதற்காக அவர் தலித் தலைவராக அறியப்படுவாரெனில் "ஆம் அவர் தலித்துகளின் தலைவர்"
ஈழத்தில் தொடங்கி, அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளுக்கு செய்யும் கொடுமைகளுக்கு எதிராக கண்டனக்குரல்களை பதிவு செய்வதில் நீண்டு, எல்லா மக்களுக்குமான பிரச்சனைகள் என்று உருவகப்படுத்தப்பட்ட அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகள் என்று, திருமாவின் பங்களிப்பை வேறு எந்த இயக்கத்தோடும் ஒப்பிட்டு கூட குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஊடகங்கள் கண்டும் காணாமல் விட்ட எட்டுவழிச் சாலைக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமே சமீபத்திய அத்தாட்சி.
நாடு முழுக்க இந்துத்துவ பாசிச அரசாங்கங்களின் கோரப்பிடியில் சிக்கி சிதிலமாக, 2017 ல் மாநில சுயாட்சி மாநாட்டின் மூலம், வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான அனைத்து தோழமை சக்திகளையும் ஒருங்கிணைத்து, 2019 ம் தேர்தலில் இந்த வகுப்புவாத சக்திகளை விரட்டியடிப்பதற்கு நாம் ஒருங்கிணைவது அவசியம் என்று இந்தியாவிலேயே முதல் அறைகூவல் விடுத்தது தோழர் தொல். திருமாவளவன் அவர்கள் தான்.
திருநங்கைகளும், பெண்களும், சிறுபான்மை மதத்தவரென இம்மண்ணில் ஒடுக்கப்படும் அனைவருமே தலித்துகள் தான் என்று, ஆதிக்கத்துக்கு எதிராய் ஒருங்கிணைக்கும் தலைவன் தலித் தலைவனா அல்லது முற்போக்குச் சமூகத்தை அடையத்துடிக்கும் மானுட விடுதலைக்கான தலைவனா? மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் என இந்தசித்தாந்த கோட்பாட்டின்படி தேசியம் அமைக்காமல் போனால், அது சமத்துவத்துக்கு எதிரான தேசமாகத்தான் இருக்குமென தமிழ் தேசியம் பேசும் தொல். திருமாவளவன், தமிழ் தேசியத்தின் தலைவராக அறியப்படாமல் போவதற்கு தகுதியற்ற நிலையிலிருப்பது இந்த தமிழகமா? தலைவர் திருமாவளவனா?
தலித்துகளை இந்துத்துவ அரசியலை நோக்கி நகர்த்தும் வேட்டையில் வடஇந்திய இந்துத்துவ சக்திகளால் குறிவைக்கப்பட்டவரில் முதன்மையானவரும், முக்கியமானவரும் திருமா தான். அவர் பிடிகொடுக்காமல் விரட்டியதனாலவே அவ்விடத்தை யாரை கொண்டு நிரப்பினார்கள் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்துக்கொள்ள தேவையில்லை. ஒரு வேளை அவர் அதற்கு இசைந்திருந்தால், தலைமுறை தாண்டி பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்துக்கொள்ளுமளவு பின்புலமும், அதிகாரத்தில் பகிர்வும் கிடைத்திருக்கும்.
மாறாக இந்துத்துவ பார்ப்பன சக்திகளுக்கு எதிரான அணித்திரட்டலை மேற்கொண்டார், அதனாலே தான் என்னவோ, பாபர் மசூதி இடிப்பு நாளான அன்று அவர் பேசியதை திரித்துக் கூறி, தலைக்கு விலை வைத்தது தமிழக பாசிசம்.
விசிக வின் வெளிச்சம் தொலைக்காட்சியை நடத்த மாதாந்திர செலவை கூட சமாளிக்க இயலாமல் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் ஒரு இயக்கமும் அதன் தலைவரும், இந்தியாவை ஆளும் நிகழ்கால வர்ண வர்க்கத்தோடு இணைந்தால் இப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்பதையறிந்தும்,வேறந்த தலைமையை காட்டிலும் இந்துத்துவத்தின் முகத்தை தோலுரித்து வருவதிலிருந்து, அவரின் கொள்கைப் பிடிப்பிற்கு வேறெந்த சான்றை சமர்ப்பிப்பது?
"என்னால் முதல்வர் ஆக முடியாதென" தலைவர் திருமா சொல்லியிருப்பது fact அல்ல, நம் நாட்டின் fate . அதை சொல்வது அவர் பெருந்தன்மையல்ல, நம் சமூக அமைப்பின் யோக்கியதை.
பேரன்பு மிக்க தலைவர் தொல். திருமா அவர்களே, உங்களின் அந்த கூற்று பொய்ப்பிக்க வேண்டுமென்பது தான் என் போன்றோரின் ஆசை, ஒருவேளை நீங்கள் சொல்வது போலவே முடியாமல் போனால், தலைமுறைகள் தாண்டி அது சாத்தியப்படும் போது, சாதியை மிதித்து அரசியலுக்கான தளம் அமைத்துக்கொடுத்த உங்கள் தோள்களில் இருந்து தான் அந்த வெற்றி சாத்தியப்பட போகிறது, அமைப்பாத் திரட்டிய நீங்கள் தான் அதற்கும் தாய் மண்ணாக இருக்கப்போகிறீர்கள், போராட்ட வரலாற்றில் மகத்தான போராளியாக உன்னை வரலாறு குறிப்பெடுத்துக் கொள்ளும், சந்தேகமின்றி உன் பக்கங்களை புரட்டிப்பார்க்கும், அதிலிருந்து அறிவுச்சமுகம் வீறு கொண்டு எழும்,
எங்கள் அறிவுப்பெட்டகத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்❤️💙

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக