திங்கள், 25 மே, 2020

தென்னிந்தியாவின் கடைசி ஜமீன்... “தென்னாட்டு புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெயதியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி”


தென்னிந்தியாவின் கடைசி ஜமீன்...
 “தென்னாட்டு புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெயதியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி”

His Highness TNS Murugadoss Theerpathy Rajah of ZIngampatti.

தென் தமிழகத்தில் மிகவும் பழமையான சிங்கம்பட்டி ஜமீன் சமஸ்தானத்தின் 31 ஆவது பட்டத்தை பெற்ற “தென்னாட்டு புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெயதியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி”(சுருக்கமாக TNS Murugadoss Theerthapathy). 29.09.1931இல் பிறந்த இவர் இந்தியாவின் கடைசி முடிசூட்டபட்ட மன்னர் என்ற பெருமை பெற்றவர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் உள்ளது சிங்கம்பட்டி ஜமீன். கி.பி 1100ல் உருவான இந்த சிங்கம்பட்டி தமிழ்நாட்டில் 72 பாளையங்களுள் சிங்கம்பட்டியும் ஒன்றாக இருந்து வந்தது. தமிழகத்தின் 72 பாளையங்களில் 24ஐ சிங்கப்பட்டி ஜமீனே தலைமை தாங்கி வந்ததது.விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, மதுரைக்கு வைஸ்ராயாக வந்த நாகம நாயக்கும், அவரது மகன் விஸ்வநாத நாயக்கும் தங்களை, மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடையில், சர்வ சுதந்திரம் பெற்ற ஆட்சித் தலைவர்கள் என அறிவித்துக் கொண்டார்கள். இவர்கள், பாண்டிய மன்னர்களின் ஆளுமைக்குள் இருந்த குறுநில ஆட்சிப்பரப்புகளை பிரிவினை செய்து 72 பாளையங்களாக மாற்றியமைத்தார்கள். அப்போது பிறந்ததுதான் சிங்கம்பட்டி.


சிங்கம்பட்டி ஜமீன் பற்றிய தகவல்கள்

1. தற்போது மறைந்த TNS முருகதாஸ் ஜமீன் மக்களுடன் எளிமையாக பழகியபவர்.ஆன்மீக சித்தர்.தத்துவ அறிஞர்.வெகுஜன பூஜிதர்,தயாளகுணசீலர். இலங்கை கண்டியில் படித்த இவர் அபார ஆங்கிலப்புலமை கொண்டவர்.
2. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1952-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்தது. ஆனால், அந்தச் சட்டம் வருவதற்கு முன்பே  பட்டம் சூட்டிய ராஜாக்களில் தமிழ்நாட்டில் இவரும் வட இந்தியாவில் ஜோத்பூர் மகாராஜாவும் மட்டுமே. இவருக்கு மூன்று வயதாக இருக்கும்போதே இவருடைய தகப்பனார் திவான்பகதூர் சிவசுப்பிரமணிய தீர்த்தபதி ராஜா இறந்துவிட்டதால் இவரை அரியணையில் ஏற்றிவிட்டார்கள். அப்போது இளவரசர் மைனராக இருந்ததால் சிங்கம்பட்டி பாளை யத்தைத் தனது பராமரிப்பில் எடுத்துக் கொண்டது பிரிட்டீஷ் சர்கார்.
3. வில்வித்தை,சிலம்பம்,வர்ம கலை போன்றவற்றை கற்று தேர்ந்தவர். வாயில் இருக்கும் சிகரட்டை கூட துல்லியமாக குறி பார்த்து சுடும் திறமை கொண்டவர். இரண்டு கையாலும் டென்னிஸ் விளையாடும் திறமை கொண்டவர்.Ball Room Dancer 
4. உலகபுகழ்பெற்ற தாமிரபரணி நதி இன்று பல மாவட்டங்களுக்கு நீர் ஆதாரம்.அதில் தாமிரபரணி தீர்த்தம், வேததீர்த்தம், பழைய பாபநாச தீர்த்தம், கல்யாண தீர்த்தம், வைரவ தீர்த்தம், பாண தீர்த்தம் புண்ணிய தீர்த்தங்களாக இருந்து தாமிரபரணி நதிக்கு காரணமாகின்றன. சிங்கம்பட்டி ஜமீன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்த பொதிகை மலைக்கு இவர் ராஜா என்பதாலும் தீர்த்தங்களுக்கு அதிபதி என்பதாலும் தீர்த்தபதி என்ற பட்டம் சூட்டப்பட்டது.
5. சிங்கம்பட்டி ஜமீன் சார்பில் அம்பாசமுத்திரத்தில் பொது மருத்துவமனை, மேல்நிலைப் பள்ளி ஆகியவை அப்போதே கட்டப்பட்டு மக்களுக்கு இலவச சேவை வழங்கி வந்தது. இன்று அது தீர்த்தபதி அரசு பொது மருத்துவமனை,தீர்த்தபதி அரசு மேல்நிலைப்பள்ளி  என்ற பெயரிலேயே இன்றும் செயல்பட்டு வருகிறது. 
6. 1934ல் மகாத்மா காந்தி திருநெல்வேலிக்கு விஜயம் செய்த போது அவரது சுற்றுபயண செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டது சிங்கம்பட்டி ஜமீன் தான்.
7. மாஞ்சோலை தேயிலை தோட்டம் பயிரிட  (Bombay Burmah Trading Corporation) மேற்கு தொடர்ச்சி மலையில் 8500 ஏக்கரில் 99 வருடங்களுக்கு குத்தகைக்கு கொடுத்தது சிங்கம்பட்டி ஜமீன் தான்.
8. மாஞ்சோலை தேயிலை கம்பெனி மாதம் 14ஆயிரம் ருபாய் குத்தகை வாடகை பணமாக தற்போதைய ராஜாவுக்கு ஒரு காலம் வரை கொடுத்து வந்தது. அனால் அரசுக்கு பல மடங்கு பணம் வரியாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டதால் மாஞ்சோலை பகுதியை மீட்டெடுக்காமலே விட்டுவிட்டார் ராஜா.இன்றும் மாஞ்சோலை தேயிலை நிறுவனம் இவருக்கு மரியாதை செலுத்துகிறது. 
9. திருவிதாங்கூர் இளவரசர் மார்த்தாண்ட வர்மாவுக்கும் அவரது உறவினரான எட்டு வீட்டுப் பிள்ளைக்கும் இடையில் பிரச்சினை.எட்டுவீட்டுப் பிள்ளையை வீழ்த்த சிங்கம்பட்டி மன்னரின் உதவியை நாடினார் வர்மாவின் தாயார் ராணி உமையம்மை. வர்மாவுக்கு உதவப்போய், எதிர்பாராத விதமாக அப்போதைய சிங்கம்பட்டி இளவரசர் மரணம் அடைந்தார். அப்படி இறந்தவருக்காக, மேற்குத் தொடர்ச்சி மலையில் 74 ஆயிரம் ஏக்கரையும் ‘நல்ல குத்தி’ என்ற பட்டத்தையும் ராணி உமையம்மை வழங்கினார். அதுவே, காலப்போக்கில் ‘நல்ல குட்டி’ ஆகிவிட்டது.இன்று களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் இருப்பது இந்த வனப்பகுதியில் தான்.
10. ஜமீன்தாரி ஒழிந்தபிறகு ஜமீனின் பல ஏக்கர் சொத்துக்கள் அரசு வசம் சென்றன. சில ஏக்கர் நிலங்கள் மட்டுமே இவரிடம் தற்போது உள்ளன.
11. ஜமீனுக்கு பாத்தியப்பட்ட காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளிட்ட 9 கோயில்கள் இருக்கின்றன.
12. பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை திருவிழாவின் போது சிங்கம்பட்டி ஜமீனுக்கு அளிக்கப்படும் மரியாதை சொல்லில் அடங்காதது.
ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் நடைபெறும் அமாவாசை திருவிழா தர்பாரில் ராஜ உடையில் அரியணையில் அமர்ந்து மக்களுக்கு காட்சி தருவார். சுமார் 80 வருடங்களுக்கும் மேலாக அவ்விழாவில் ராஜ மரியாதையை இவர் பெற்றுள்ளார்
13. முன்பு, அரண்மனையில தளபதிகளாக, மந்திரிகளாக இருந்தவர்களின் வாரிசுகளே இப்போதும் அரண்மனையில் பணியாளர்களாக இருக்கிறார்கள். ராஜ விசுவாசத்தால் இவர்கள் அனைவருமே குறைவான ஊதியத்திலேயே இங்கு பணி செய்கிறார்கள்.
14. சிங்கம்பட்டியில் இன்றும் அந்த அரண்மனை கம்பீரமாக நின்று கொண்டு இருக்கிறது. அரண்மனை சென்றால் கத்தி,வால்,பல்லக்குகள்,ஆங்கிலேய அரசு கொடுத்த பரிசுகள்,போர்சிளின் தட்டுகள்,துப்பாக்கி,வெள்ளி வெற்றிலை பெட்டி,ரவிவர்மாவின் ஓவியம்  என காலம் தாண்டி நிற்கும் நினைவுகளை காணலாம்.அங்கே காண வரும் அனைவரையும் எளிமையாக அன்போடு அதை சுற்றி காட்ட செய்தவர் ராஜா முருகதாஸ் தீர்த்தபதி
15. Google Maps ல் ஜமீன்தார் காடுகள் என இன்று இருக்கும் ஒரே ஜமீந்தார் காடுகள் சிங்கம்பட்டி ஜமீந்தார் காடுகள் தான்.
16. 2002-2005 ஆகிய மூன்று ஆண்டுகள் Honorary Wildlife Warden  of Forests என்ற கெளரவ பதவியை  தமிழக வனத்துறை இவருக்கு வழங்கி பெருமைபடுத்தியது.
17. சிங்கம்படியின் 24வது தலைமுறை ஜமீன்தார் தான் தூக்குத்துரை பெரியசாமித் தேவர். (விசுவாசம் படத்தின் ஹீரோ பெயர்)
18. கும்பகோண ஸ்ரீ விஜேயேந்திர ஸ்வாமிகள் இவருக்குத் “தென்பொதிகை சித்தர்” என்ற பட்டத்தினை வழங்கிச்சிறப்பித்தார். மதுரை ஆதீனம்- “இந்து ஆலய பாதுகாவலர்” என்ற பட்டத்தினை (10.06.1971) அன்று வழங்கியது. கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றம், “ஆன்மீக ஆழமுடைமை” என்ற பட்டத்தினை 16.02.1997 அன்று வழங்கிச் சிறப்பித்தது.
19. தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையினர் இவருக்குச் “சிவஞானச்சித்தர்” என்ற பட்டத்தினை 25.07.1999 அன்று கொடுத்து வழங்கியது. பாளையங்கோட்டை புனித இருதய சகோதரர்கள் சபையோரின், “சித்தாந்த சிகாமணி” என்ற விருதினை 07.05.1999 அன்று வழங்கியது. இராமநாதபுரம் தமிழ்ச்சங்கம், “சித்தாந்த சிந்தாமணி” என்ற விருதினை 03.03.2002 அன்று வழங்கிச் சிறப்பித்தது. கடந்த 22.09.2002-ஆம் ஆண்டு அம்பை வட்ட தமிழாசிரியர் கழகம், “மூதறிஞர்” என்ற பட்டத்தினை வழங்கிச்சிறப்பித்துள்ளது.
20. சிங்கம்பட்டி அரண்மனையின் பல பொக்கிஷங்கள் தமிழக அரசின் அருங்காட்சியக துறையால் சென்னையில் பாதுகாக்கபடுகிறது.
21. இன்றும் பொதிகை மலை,மாஞ்சோலை,தாமிரபரணியில் உள்ள இந்து அறநிலையத்துறை  சார்ந்த கோவில்களின் பல முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அரசு இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இவருக்கு தகவல்களை பகிர்ந்து கொண்டும் ஆலோசனைகளும் கேட்டு வருகிறது.