அன்புள்ள ஆசிரியப் பெருமக்களுக்கு,
மனம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துகள்.
இந்த நாளில் கல்விப் பணியில் அருந்தொண்டாற்றிய மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்களை நினைவு கூற விரும்புகிறேன். நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு புனே நகரில், பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட பின்தங்கிய, தாழ்த்தப்பட்டச் சமூக மக்களுக்கு கல்வி பயிற்றுவிக்க பூலே முயன்றார்.
பூலே கல்வி கற்க கல்லூரி சென்ற போதே, சிறு வணிகம் செய்துவந்த அவருடைய தந்தையிடம் பணியாற்றிய பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த கணக்காயர் "கல்வி கற்றால் அவன் கெட்டு விடுவான். அவனுக்கு உங்கள் தொழிலைக் கற்பியுங்கள்" என்று போதித்தார். அந்தச் சூழலில் தான் கல்வி கற்று முடித்தது மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி கற்பிக்கவும் அவர் முனைந்த போது0அதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. நூற்றாண்டுகள் கால வரலாற்றில் நடந்தது போலவே, அவருக்கு எதிராக செயலாற்றிடத் தூண்டியவர்கள் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்களாகவும், செயலாற்றியவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.
அவர் கல்வி கற்பிக்க வாடகை தரப்பட்டிருந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். தளராமல் தன் கல்விப் பணியை பூலே தொடர்ந்தார். கல்விக் கூடத்திற்கு செல்லும் வழியில், அவர் மீதும் அவர் மனைவி மீதும் சாலையோரம் இருந்த சாணிகளும், குப்பைகளும் வீசப்பட்டன. இந்தப் பிரச்சனைக்கு ஒரு எளிய தீர்வை பூலே கண்டுபிடித்தார். பையிலே மாற்று உடையை கொண்டு சென்று வழியில் அருவருப்பான பொருட்கள் வீசப்பட்டு அழுக்காகி விட்ட துணிகளை, வகுப்பறைக்குச் செல்லும் முன்பு மாற்றி, புதிய உடை அணிந்து சென்று கற்பித்தார்.
அந்தப் பொழுதில் அவரைப் பாராட்டி, அவருக்கு சால்வை அணிவித்து, கௌரவித்தவர் அந்த மாகாணத்தின் வெள்ளைக்கார கவர்னர்.
இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் கல்வி சென்றடையும் நிலை ஏற்பட்டதற்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. பல தியாகங்கள் இருக்கின்றன.
அந்தத் தியாகிகளை நினைவு கூர்ந்து, அருந்தொண்டாற்றும் உங்கள் ஒவ்வொருவரையும் இதயத்திலிருந்து வாழ்த்துகிறேன்.
நீங்கள் கற்பிப்பது கல்வியல்ல, ஒடுக்கப்பட்ட சமுதாயம் முன்னேறுவதற்கான போர்ப்பயிற்சி என்ற உணர்வோடு கற்பியுங்கள்.
