திங்கள், 13 ஏப்ரல், 2020

இதோ இரட்சகர் பிறந்தார்!


இதோ இரட்சகர் பிறந்தார்!

இந்திய குடியரசு தந்தை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 129-வது பிறந்தநாள் இன்று (14-ஏப்ரல்) !

ஜெய்பீம்...
   அனைவருக்கும் வணக்கம். பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 129-வது பிறந்தநாள்  நல்வாழ்த்துக்கள்!

 ஏப்ரல் 14-ம் தேதி என்றாலே இந்தியர்கள் நமக்கு ஒரு உற்சாகமான நாள்.
"உயிர் கொடுத்தது தாய்; மனிதன் என்கிற பெருமைமிகு உணர்வைக்கொடுத்தது டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்!"
இந்த நாளை  அனைவரும் வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்கின்றோம்.
கொரோனா கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக உலகம் முழுவதும் மனிதகுலம்  போராடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் நாமும் கொரானாவுக்கெதிராக யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறோம். இந்த தொற்றுநோய் பரவாமல் தடுப்பதில் நாம் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டும்.

நம் இரட்சகரான பாபாசாகேப்பின் 129 - வது பிறந்தநாளில் அவரின் தியாகத்தையும் மனிதகுலத்திற்கு அவர் ஆற்றியுள்ள பணிகளையும் நினைவுக்கூர்ந்து நம் நன்றியை செலுத்தும் வகையில் 14.04.2020 அன்று  நம் வீட்டில் மெழுகுவர்த்திகள் மற்றும் எண்ணெய் விளக்குகளை ஏற்றி ஒளிமயமாக்குவோம்.
மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் மற்றும் நடைமுறையிலுள்ள எந்த தடை உத்தரவுகளையும் மீறாமல்
இதை பின்பற்றுவதன் மூலம், இருளில் இருந்த நம்மை மீட்டு நம் வாழ்வில் ஒளியேற்றிய அந்த தியாகத்தலைவரின் ஆளுமை மற்றும் அறிவை போற்றும் வகையில்  நம் நன்றியைக் காட்ட இது மிகச்சிறந்த வழியாக இருக்கும்.

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் ஆளுமைகளையும், அறிவாற்றலையும், அனைத்து மக்களின் மேம்பாட்டிற்காகவும் அவர் ஆற்றியுள்ள அரும்பணிகளை நாம் மட்டுமின்றி நம் குழந்தைகளுக்கும் அந்த செய்திகளை கொண்டு செல்ல வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை அண்ணலின் பிறந்தநாளை KNOWLEDGE DAY - ஆக அனுசரித்து விழா எடுக்கிறது; கனடா நாட்டில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை  "Dr. B.R. Ambedkar Day of Equality - டாக்டர் அம்பேத்கர் சமத்துவ தினமாக" அங்கீகரித்து விழா எடுக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தலைவர் முதல் அனைத்து இந்திய மக்களும் இந்த நாளை கொண்டாடி இந்த மாபெரும் தலைவருக்கு தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர்.

உலகில் வேறு எந்த தலைவருக்கும் இத்தகைய பெருமையும் சிறப்பும் நாம் கேள்விப்பட்டு யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை.
உலகம் இவரை இந்தளவிற்கு கொண்டாடுவதற்கான காரணம் இவர் ஒருவரின் பிறப்பு பலக்கோடி மக்களின் அடிமைச்சங்கிலியை உடைத்து, தலைமுறை தலைமுறையாக தங்கள் மீது சுமத்தப்பட்டிருந்த இழிவு நீங்கி தாங்களும் மனிதர்கள் என்கிற உணர்வை பெற்றிருக்கின்றனர் என்பது தான்.
 
  "மனித இனத்தின் மாண்பை மீட்க போராடிய உலக புரட்சியாளர்களில் முதன்மையானவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர். பலக்கோடி மக்களின் இழிவை போக்கியுள்ளது இந்த உயர்ந்த மனிதரின் பிறப்பு.
சமத்துவம் என்கிற கோட்பாட்டை கொண்டிராத இந்த தேசம் இவர் எழுதிய அரசியல் சாசனம் மூலம் தான் "ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்" ஆகிய உயரிய தத்துவங்கள் மீது எழும்பி நிற்கின்றது.  உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு என பெருமை பெறுகின்றது; இன்று தேசம் உலகளவில் வல்லரசாக உயர்ந்து நிற்கிறது!
 இந்த தேசத்தின் சாபக்கேடான சாதியத்தையும் அதன் செல்லக்குழந்தையான தீண்டாமையையும் கருவறுக்க பிறந்த சமத்துவ தலைவர் இவர்"

இந்திய மக்கள் அனைவருக்குமான அவரது பணிகள் சில...

1. குடியரசின் ஆணிவேரான வாக்குரிமை :
பட்டதாரிகளுக்கும், பட்டா உள்ளவர்களுக்கும், வரி செலுத்துபவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்று இருந்த நிலையை மாற்றி... வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பதை உறுதி படுத்தினார்.  இந்தியாவை உண்மையான ஜனநாயக குடியரசாக உருமாற்றினார்.

2. சட்டத்தின் முன் அனைவரும் சமம்: சாதிக்கு ஒரு நீதி  வகுப்புக்கொரு சட்டம் என இருந்த மனுஸ்மிருதியை தீயிட்டு கொளுத்திய இவரே, "ஒரு மனிதன்-ஒரு வாக்கு-ஒரு மதிப்பு" என்று இந்திய வரலாற்றில் முதன்முதலாக சட்டம் இயற்றினார். இந்தியர்கள் அனைவரும் "இது என் நாடு; நானும் அனைத்து உரிமைகளையும் பெற்றவன்; நானும் இந்நாட்டை ஆட்சி செய்யமுடியும்" என்கிற உணர்வை பாபாசாகேப் வரைந்தளித்துள்ள நம் அரசியல் சாசனம் தருகின்றது. இத்தகைய சுதந்திர உணர்வை இந்திய அரசியல் சாசனம் வருவதற்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்கள் அனுபவித்திருப்பார்களா?

3. இட ஒதுக்கீடு : சமத்துவமற்ற சாதிய சமூகத்தில் அனைத்து மக்களும் சமத்துவம் பெற... கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு சட்டம் இயற்றி இந்தியாவில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் பலன் பெற செய்தார். குறிப்பாக காலங்காலமாக பிறப்பின் அடிப்படையில் அனைத்து வாழ்வாதாரங்களும் மறுக்கப்பட்ட OBC, SC & ST பிரிவினர் அதன் மூலம் அனைத்து துறைகளிலும் வாய்ப்புகள் பெற வழிவகை செய்துள்ளார். இத்தகைய ஒரு நிலைமை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வரைந்தளித்த இந்த அரசியல் சாசனம் வருவதற்கு முன்பிருந்த நம் முன்னோர்கள் பெற்றிருந்தனரா?

4. பெண் உரிமை : ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, ஆணுக்கு சமமான ஊதியம்,  பல்வேறு குழுக்களில் மகளிர்க்கான பிரதிநிதித்துவம்  என பல சட்டங்களை இயற்றினார்.  பின்னாளில்... பெண் மறுமணம், பெண் வாரிசு உரிமை, விவாகரத்து உரிமை மற்றும் அதில் வாழ்வாதாரம் பெறும் உரிமை, சொத்துரிமை ஆக பெண் உரிமைக்கான முழுமையான சட்டத்தை அவர் கொண்டு வந்தபோது (Hindu code bill) அதனை அன்றைய பிற்போக்குவாதிகள் ஏற்காததால்... தன்னுடைய இந்திய சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அப்பழுக்கற்ற அரசியல் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள். பெண்களுக்கு இன்று கிடைத்திருக்கிற சமத்துவம், சுதந்திரம், முன்னேற்றம் இவற்றிற்கான காரணகர்த்தா டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தானே? அந்த மனித தெய்வத்தை எத்தனை பெண்கள் நினைத்துப்பார்க்கின்றனர்?

5. தொழிலாளர் நலம் : எட்டு மணி நேர வேலை, முத்தரப்பு பேச்சுவார்த்தை, அகவிலைப்படி, போனஸ், மருத்துவ காப்பீடு, வேலைவாய்ப்பு மையம், தொழிற்சங்க அங்கீகார உரிமை போன்றவைகளை சட்டமாக்கினார். இந்த உரிமைகள் பெற்றுத்தந்த அந்த மாபெரும் தலைவரை எத்தனை தொழிற்சங்கங்கள் நன்றியுடன் கொண்டாடுகின்றன?

6. பொருளாதாரம் : ரிசர்வ் வங்கி தோற்றுவிக்க காரணமாக இருந்தார், இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை பழைய ருபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து... புதியதாக அச்சடிக்கவேண்டும் என்பதை முன் மொழிந்தார். நோபல் பரிசுப்பெற்ற திரு.அம்ரித்யாசென் தம் "பொருளாதார தந்தை டாக்டர் அம்பேத்கர்" என போற்றி புகழ்ந்தார். அமெரிக்காவில் பொருளாதாரத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆசியர் என்கிற பெருமைக்குரியவர் பாபாசாகேப் அவர்களே!

7. தேசிய ஆணையங்கள் : தேர்தல் ஆணையம், மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம், தேசிய நதிநீர் ஆணையம், மின்சார ஆணையம் அமைந்திட திட்டம் தந்து சட்டம் இயற்றிட்ட திறமையான தீர்க்கதரிசி இவர் என்பது எத்தனைப்பேர் அறிவர்?

8. நதி நீர் இணைப்பு : நதிகள் தேசியமயம், நதி நீர் இணைப்பு ஆகிய திட்டங்களை முன் வைத்தார். அணைகள் மற்றும் பல்நோக்கு திட்டங்களை (பக்ராநங்கல், ஹீராகுட், தாமோதர் பள்ளதாக்கு) தோற்றுவித்தவர். இன்று நதிநீர் இணைப்பு, நீர்மேலாண்மை பேசும் எத்தனைப்பேருக்கு இவை தெரியும்?

9. தேசிய கொடியில் 'தம்ம சக்கரத்தை' இடம்பெற செய்ததன் மூலம் உலக அளவில் இந்தியா அகிம்சை தேசம் என்கிற நல்லெண்ணத்தை விதைத்த "மகத் சத்தியாகிரக" வீரர் இவர்.

10. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் ஆசியர்; குறுகிய காலத்தில் (ஆறு வருடங்கள்) MA, MSc, Ph.D, D.Sc, Bar-at-Law-Law & Course in Sanskrit என உலகின் மூன்று முன்ணணி பல்கலை கழகங்களில் பட்டங்கள் பெற்ற உலகின் உன்னத கல்வியாளர். D.Litt மற்றும் LL.D ஆகிய கௌரவ டாக்டர் பட்டங்களை உலகின் சிறந்த பல்கலைகழகங்கள் அவருக்களித்து பெருமை அடைந்திருக்கின்றன.

11."மக்கள் கல்வி கழகம்" என்ற பெயரில் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி ஏழை எளியோருக்கு கல்விசெல்வம் தந்த தன்னிகரில்லா தேசிய தலைவர்.

12. தொழிலாளர் பெயரில் இந்தியாவில் முதன் முதலில் "சுதந்திர தொழிலாளர் கட்சியை" தோற்றுவித்து உழைக்கும் தொழிலாளர்களுக்காக பல போராட்டங்கள் நடத்திய உத்தமர்.

13. பல அறிவுப்பூர்வமான புத்தகங்கள் எழுதிய பேரறிவாளர். நான்கு வார/மாத இதழ்களின் ஆசிரியர்.

14. இலண்டனில் நடந்த மூன்று வட்டமேஜை மாநாடுகளிலும் கலந்துக்கொண்ட இந்தியாவின் ஒப்பற்ற தேசிய தலைவர். இந்தியாவின் பிரச்சனைக்கு தீர்வு இந்த மூவரின் கைகளில் தான் உள்ளது என பிரிட்டிஷாரால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்: காந்தி ஜி, முகமது அலி ஜின்னா மற்றும்  டாக்டர் அம்பேத்கர்.

15.The greatest Indian- னாக "Out Look" magazine, "CNN-IBN" & "History Channel" ஆகிய ஊடகங்கள் மூலம் மக்களாலும் அறிஞர்களாலும் தெரிவு செய்யப்பட்டவர்.
16. உலகின் ஆறு முன்ணணி அறிவாளிகளில் ஒருவராக பெருமைப்படுத்தப்படுபவர்.
17. இருநூற்றைம்பது ஆண்டுகளில் மனிதகுலத்திற்கு சிறப்பான பணியாற்றியவர்களில் முதன்மையானவராக  அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் அறிஞர்களால் அடையாளம் காணப்பட்டவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.

சிறந்த கல்வியாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் மீட்பராக, சிறந்த எழுத்தாளராக, பொருளாதார நிபுணராக, சட்டமேதையாக, பேராசிரியராக, இந்திய அரசியல் அமைப்பு சட்ட சிற்பியாக, பல்நோக்கு திட்டம் வகுத்த பொறியியல் வல்லுனராக, மனிதகுலத்தின் மிகப்பெரிய மனித உரிமை போராளியாக, பெண்ணுரிமை சிந்தனையாளராக, புத்தமத்தை இந்தியாவில் புனரமைத்த போதிசத்துவராக, "புத்தமும் அவர் தம்மமும்" வழங்கிய மெய்ஞானியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தன்னிகரில்லா தேசிய தலைவராக என பன்முக ஆளுமைக்கொண்ட மாமனிதர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள்.
இத்தகைய பெரும் சிறப்புக்களை பெற்ற பெருமகனார் உலகில் எவர் உளர்?
மக்கள் அனைவருக்குமான அந்த சமத்துவ தலைவரை வெறும் "தலித் தலைவர்" என சுருக்க நினைக்கும் சிறுமதியினர் என்றைக்கு அறியாமையிலிருந்து வெளிவந்து தங்களுக்கு ஒளி தரும் இந்த அப்பழுக்கற்ற சூரியனை உணரப்போகிறார்கள்.

இந்த பொன்னான நாளில் இந்திய குடியரசு தந்தை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு நன்றி செலுத்துவோம்.
HAPPY Dr.Babasaheb Ambedkar Jayanthi!
LONG LIVE HIS GLORIOUS LEGACY!
Jai Bhim. Jai Bharat!
ஜெய் பீம்.

அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?


அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன் என்பேன்.
– டாக்டர் அம்பேத்கர்.

”அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று கேட்டால், பெருவாரியான பதில்கள், ‘இந்திய அரசியல் சட்டத்துக்கு எழுத்து வடிவம் தந்தவர்’, ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர்’ என்பதாகத்தான்


இருக்கும். ஆனால் அம்பேத்கர் என்ற மகத்தான ஆளுமையை இப்படியான சிமிழ்களுக்குள் அடைத்துவிட முடியாது. காரல் மார்க்சுக்கும் அம்பேத்கருக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் தங்கள் வாழ்க்கையின் கணிசமான பகுதியை நூலகங்களில் செலவழித்தவர்கள். மனித சமூகத்தின் மேம்பாடு குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே தங்கள் குழந்தைகளை வறுமையின் காரணமாக பலி கொடுத்தவர்கள். அம்பேத்கர் வெறுமனே சட்ட மேதையோ, தலித் தலைவரோ மட்டும் அல்ல. அரசியல், இலக்கியம், தத்துவம், இதிகாசம், வரலாறு, மதம், சட்டம், பொருளாதாரம் என மனித அறிவு சாதித்த துறைகளில் பெரும்பாலானவை குறித்த விரிவான வாசிப்பும் அறிதலும் கொண்டவர். அவருடைய டாக்டர் பட்ட ஆய்வு, ரூபாய் குறித்தது என்பதும் ரிசர்வ் வங்கியை உருவாக்கியதில் முக்கியமான பங்கு அம்பேத்கருடையது என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்?.

ஆனால் அம்பேத்கர் வெறுமனே கற்றறிந்த அறிவுஜீவியாக மட்டும் இருந்திருந்தால், கோடிக்கணக்கான மக்களால் நினைத்துப் பார்க்கப்படும் மாமனிதராக இருந்திருக்க மாட்டார். அவர் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்காகவே அதிகம் படித்தார். தன்னுடைய வாசிப்பையும் அறிவையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்தினார். முன்பே சொன்னதுபோல் காரல் மார்க்ஸுக்கும் அம்பேத்கருக்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை, வரலாறு குறித்த புதிய பார்வைகளை உருவாக்கியது மனித குல வரலாற்றை வர்க்கங்களின் வரலாறாக வாசித்து, மக்கள் முன் அளித்தவர் மார்க்ஸ். இந்தியாவின் வரலாறு எப்படி பெளத்தத்துக்கும் பார்ப்பனியத்துக்குமான போராட்டமாக இருந்தது, சாதி என்ற காரணி எப்படி இந்திய வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தையும் தீர்மானித்தது என்று விரிவாக ஆராய்ந்தவர் அம்பேத்கர்.


அவர் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது, பெளத்தத்தைத் தழுவுவது என்று எடுத்த முடிவு உணர்ச்சிவசப்பட்ட முடிவு அல்ல. பல ஆண்டுகாலமாக வரலாற்றை ஆராய்ந்தபிறகே அவர் அப்படியான முடிவுக்கு வந்தார். பிரெஞ்சுப்புரட்சி மானுடச் சமூகத்துக்கு அளித்த நவீன சிந்தனைகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அளவுகோலைக்கொண்டு இந்து மதத்தைப் பரிசோதித்தார். ''உலகில் உள்ள எல்லா மதங்களும் ‘இறைவன் மனிதனைப் படைத்தார்’ என்று சொல்கின்றன. ஆனால் இந்து மதம் மட்டும்தான் இறைவன் ஒரு மனிதனை முகத்தில் இருந்தும் இன்னொரு மனிதனைக் காலில் இருந்தும் படைத்தார்’ என்று சொல்கிறது” என்று தன் விமர்சனத்தை முன்வைத்தார். இந்து மதத்தில் உள்ள சாதியமைப்பு பிரமிட் முக்கோண அமைப்பில் இருக்கிறது என்று சொன்ன அம்பேத்கர், ஒவ்வொரு சாதிக்காரனும் தன்னை மேலே இருந்து அழுத்துகிறவன் மீது கோபப்படுவதில்லை. ஏனெனில், அவன் அடிமைப்படுத்துவதற்குக் கீழே ஒரு சாதி இருக்கிறது. இந்த உளவியல் திருப்தி, சாதியமைப்பை வலுவாகத் தக்கவைத்துக்கொள்வதைக் கண்டுபிடித்துச் சொன்னார். ''இந்து மதம் என்பது ஒவ்வொரு சாதிக்காரனும் இன்னொரு சாதிக்காரனிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்பது போன்ற விதிமுறைகளின் தொகுப்பாகத்தான் இருக்கிறது” என்றார்.

“இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு வர்ணமும் பல மாடிகளைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு போலத்தான். ஆனால் ஒரு மாடியில் இருந்து இன்னொரு மாடிக்குச் செல்வதற்கு என்று எந்தப் படிகளும் கிடையாது” என்றார். அதனாலேயே “ஓர் ஆதிக்கச்சாதியில் பிறப்பவன் கருவிலேயே நீதிபதி ஆகும் கனவைக் கொண்டிருக்கிறான். ஆனால் ஒரு தோட்டியின் மகனோ கருவில் இருக்கும்போதே தோட்டியாவதற்கான வாய்ப்பைத்தான் கொண்டிருக்கிறான்” என்றார். இத்தகைய இழிநிலையை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?




''மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர்கள் இவ்வாறு சமமாக இல்லை என்பதால் நாம் அவர்களைச் சமம் இல்லாத முறையில் நடத்த வேண்டுமா? சமத்துவத்தை எதிர்ப்பவர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் கூற வேண்டும். மனிதர்களின் முயற்சியில் சமம் இல்லாத அளவுக்கு அவர்களை நடத்துவதில் சமம் இல்லாமலிருப்பது நியாயமாய் இருக்கலாம். ஒவ்வொருவரின் திறன்களும் முழு வளர்ச்சி பெற உதவுவதற்கு முடிந்த அளவுக்கு ஊக்குவிப்பு அளிக்க வேண்டியிருக்கலாம். ஆனால் முதல் இரண்டு விஷயங்களில் சமமாக இல்லாதவர்களை சமம் இல்லாமலே நடத்தினால் என்ன ஆகும்? பிறப்பு, கல்வி, குடும்பப் பெயர், தொழில்-வணிகத் தொடர்புகள், பரம்பரைச் சொத்து ஆகியவை சாதகமாக உள்ளவர்களே வாழ்க்கைப் போட்டியில் தேர்வு பெறுவார்கள்” என்றார்.

எனவே கல்வி, அரசியல் அதிகாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் காலங்காலமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பவர்களுக்கு சிறப்பு உரிமைகள் அளிக்க வேண்டும் என்றார். அதனாலேயே இட ஒதுக்கீட்டையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இரட்டை வாக்குரிமையையும் முன்வைத்தார். ஆனால் அதே சமகாலத்தில் வாழ்ந்த காந்தி என்ற இன்னொரு ஆளுமையை எதிர்க்க வேண்டிய வரலாற்று அவசியம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது. பூனா ஒப்பந்தம் நிறைவேறியது. அதற்குப் பிறகு இறுதிவரை அம்பேத்கர் காந்தியைக் கடுமையாக விமர்சித்தார். காந்தி மிகப்பெரிய புனித பிம்பமாக நிலைத்து நின்ற காலத்தில் அம்பேத்கர் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஏனென்றால் அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதாக இருந்தால்,  ''அரசியல் கொடுமையை விடச் சமூகக் கொடுமை பயங்கரமானது. எனவே சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி, அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதியை விட தீரம் மிகுந்தவன்”




தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெறுவதற்கு அம்பேத்கர் நம்பிய சில வழிகள் கல்வி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல், சமவாய்ப்புகளை உருவாக்குதல், மதமாற்றம் ஆகியன. அவர் ‘கற்பி, ஒன்றுசேர், போராடு’ என்று சொன்னதில் உள்ள கல்வி என்பது வெறுமனே பொருளாதார ரீதியாக உயர்வதற்கான, வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் கல்வி மட்டுமில்லை. அரசியல் கல்வியை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். “ஓர் அடிமைக்கு அவனை முதலில் அடிமை என்பதை உணர்த்து, அவன் தானாகவே கிளர்ந்தெழுந்து போராடுவான்” என்றார். இந்தியச் சாதியமைப்பின் மிகப்பெரிய பலமே அது கருத்தியல் வன்முறையைக் கொண்டிருப்பதுதான். நேரடியான வன்முறையைக் கொண்டு சாதி நிறுவப்படவில்லை. “தான் இழிவானவன், அடிமை” என்பதை அவர்களே ஒப்புக்கொள்ள வைப்பதில்தான் சாதியின் தந்திரம் அடங்கியிருக்கிறது.

பெண்களும் இப்படித்தான். “ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள்” என்பதைப் பெரும்பாலான பெண்களே ஒப்புக்கொள்வதில்லை. இந்த வகையில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையும் பெண்களின் நிலையும் ஒன்றுதான். இதை உணர்ந்துகொண்ட அம்பேத்கர் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், விதவைத் திருமண மறுப்பு, குழந்தைத் திருமணம் ஆகிய பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும் சாதி, தீண்டாமை ஆகியவற்றுக்கு உள்ள உறவு குறித்தும் விரிவாக ஆராய்ந்து எழுதினார். நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தபோது அம்பேத்கர் கொண்டுவந்த ‘இந்து சட்ட மசோதா’வில் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. காங்கிரஸில் இருந்த சனாதனிகளின் எதிர்ப்பால் அந்த மசோதா நிறைவேறாமல் போனது. அம்பேத்கரும் பதவி விலகினார். பதவி விலகியபோது அம்பேத்கர் ஆற்றிய உரை, அனைவரும் படித்துப் பார்க்க வேண்டிய மிகச்சிறந்த உரைகளில் ஒன்று.

அம்பேத்கர் ‘ஜனநாயகம்’ என்ற அம்சத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். அரசியலில் மட்டும் ஜனநாயகம் இருந்தால் போதாது, சமூக ஜனநாயகமும் முக்கியமானது என்பதையே அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். சுருக்கமாகச் சொன்னால் அம்பேத்கர் நமக்கு சொன்ன செய்தி ஒன்றே ஒன்றுதான். “எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்’ என்பதுதான் அது.

அம்பேத்கரை நினைவு கூர்வது என்பது நம் மனசாட்சியை நாமே பரிசீலிப்பதுதான்.கட்டுரை- சுகுணாதிவாகர்.
நன்றி விகடன்.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

8 மணி நேர வேலை, தாமோதர் அணை: வெளிச்சத்துக்கு வராத அம்பேத்கரின் பணிகள் - சிறப்புக் கட்டுரை


8 மணி நேர வேலை, தாமோதர் அணை: வெளிச்சத்துக்கு வராத அம்பேத்கரின் பணிகள் - சிறப்புக் கட்டுரை-ஆதவன் தீட்சண்யா
சமூக செயற்பாட்டாளர்.

தலித்துகளின் விடுதலைக்குப் பாடுபட்டவர், சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்தவர். இவை இரண்டும்தான் அதிகம் அறியப்பட்ட அம்பேத்கரின் இரண்டு பக்கங்கள். இவை அம்பேத்கரின் முக்கியமான பங்களிப்புகள் என்பதில் ஐயமில்லை.

ஆனால், அவரது பணிகளும், வாழ்வும் மேலும் பல பரிமாணங்களை கொண்டவை. அமைச்சராக இருந்து பிரம்மாண்ட நீராதாரத் திட்டங்களை வகுத்தது, நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக இன்றும் பொருந்தும் கருத்துகளை வலியுறுத்தியது முதல் எட்டு மணி நேர வேலை உரிமை இந்தியாவில் அமலாகக் காரணமாக இருந்தது வரை பரந்த சமூகம் பலன்பெற அவர் செய்தவை பல. அவரது பிறந்த நாளை ஒட்டி அந்தப் பணிகளைப் பற்றிய ஒரு பார்வை.

அம்பேத்கர்
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை, அதிகாரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுக்கு அம்பேத்கரின், அம்பேத்கரியத்தின் பங்களிப்பு என்ன?

சாதியோ பொருளாதார நிலையோ ஒருவரின் கற்கும் ஆர்வத்தையும் அறிவார்ந்த சாதனைகளையும் தடுத்துவிட முடியாது என்கிற மிகப்பெரும் நம்பிக்கையே அவரது வாழ்க்கை நமக்குத் தரும் முதற் பெரும் செய்தி. தனித்த திறமைகளையும் கல்வியறிவையும் சுயநலத்திற்காக அல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடவும் ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டுக்காக சிந்திக்கவும் அர்ப்பணிப்பது என்பது இதேயளவுக்கு போற்றத்தக்க மற்றுமொரு செய்தி.

Image copyright AADAVAN DEETCHANYA ஆதவன் தீட்சன்யா
Image caption ஆதவன் தீட்சன்யா
கல்வியாளராக, பொருளாதார நிபுணராக, தத்துவவாதியாக, வரலாற்றாளராக, அரசியல் செயற்பாட்டாளராக, தொழிலாளர்- பாசனம்- மின்சாரத்துறை அமைச்சராக, சட்ட அமைச்சராக அவர் ஆற்றிய பணிகள் இந்திய மக்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலும் தாக்கம் செலுத்தியவை.

வயது வந்தோர் அனைவருக்கும் இன்றுள்ள வாக்குரிமை அவர் எழுப்பிய கோரிக்கையே. நிர்வாகத்துறையை ஜனநாயகப்படுத்த அவர் பட்டியல் சாதியினருக்கு கோரிய பிரதிநிதித்துவம் தான் அரசியல் சாசனத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது. பின்னாளில் பிற்படுத்தப்பட்டோரும் பெண்களும் அத்தகைய பிரதிநிதித்துவத்தைப் பெறவும் இதுவே வழிகோலியது.

அரசுப் பணியாளர்களை தேர்வு செய்வதில் நீடித்துவந்த பிராமண ஏகபோகத்தையும் சாய்மானங்களையும் முடிவுக்கு கொண்டுவர அவர் வைத்த முன்மொழிவிலிருந்தே பின்னாளில் அரசுப் பணியாளர் தேர்வாணையங்களும் வேலைவாய்ப்புப் பதிவு அலுவலகங்களும். மத்திய மாநில அரசுகளுக்கென தனித்தனி நிர்வாக அதிகாரிகள் தொகுப்புகளும் உருவாகின.

எட்டு மணி நேர வேலை

இன்றைக்கு மாநில குரூப்1, குரூப்2 என்று அதிகாரிகள் தேர்வாவதற்கு அவரே அடிப்படை. தொழிலாளர் துறை அமைச்சர் என்கிற முறையில் 1942 நவம்பர் 27 ஆம் நாள் அவர் கூட்டிய ஏழாவது இந்திய தொழிலாளர் மாநாட்டில்தான் வேலைநாள் என்பது எட்டுமணி நேரம் என்கிற மகத்தான முடிவினை அறிவித்தார் அம்பேத்கர்.

தொழிலாளர் காப்பீட்டுத் திட்டம், அகவிலைப்படி அறிமுகம், ஆழ்துளைச் சுரங்கங்களில் பெண் தொழிலாளர்களை பணி செய்ய வைப்பதற்கு தடை, மகப்பேறு விடுப்பு என தொழிலாளர்கள் அனுபவித்து வரும் பல்வேறு உரிமைகள் அவர் வழியாக வந்தவையே.

பொதுநிதி, வங்கித்துறை சீர்திருத்தங்கள் பற்றிய சமீபத்திய விவாதங்களில் அம்பேத்கரின் வழிகாட்டுதல் போற்றப்படுகிறது. ரிசர்வ் வங்கி உருவாக்கம் அவரது சிந்தனைக்குழந்தை தான் எனப்படுகிறது. இன்சூரன்ஸ் அரசுடைமையாக்கம், மத்திய மின்தொகுப்பு, சுரங்கங்கள் மீதான அரசுரிமை, தொழில் மயமாக்கம் என்று தேசிய கட்டுமானத்தில் அவரது பங்களிப்பு எல்லையற்று விரிகிறது.

தண்ணீர் உரிமை
அம்பேத்கர் தன் சிறுவயதில் தந்தையைக் காணச்சென்ற வழியில், தீண்டாமைக்கு இலக்கான காரணத்தினால், தாகத்தில் தவித்த அவரது வாய்க்கு யாரும் தண்ணீர் தர மறுத்த ஒரு நிகழ்வு நடந்தது. இதையடுத்து, மாடுகளும் எருமைகளும் புரண்டு கலக்கிய குட்டையில் தண்ணீர் குடிக்க நேர்ந்த கொடிய அனுபவம் அவருக்கு நேர்ந்தது.

அவர் படித்து பாரிஸ்டராகி திரும்பிய பின்னும்கூட அலுவலகத்தில் பொதுப் பயன்பாட்டுக்கென வைக்கப்பட்டிருந்த பானையில் இருந்து நீரெடுத்துக் குடிக்க முடியாமல் தடுக்கப்பட்டவர் அவர்.

Image copyright INDRANIL MUKHERJEE அம்பேத்கர்
அலுவலகத்தின் கடைநிலைப் பணியாளர் முகந்து தரும்வரை தாகத்தோடு காத்திருந்தவர்.

சவுதார் குளத்தில் நீரருந்தும் உரிமைக்காக தனது மக்களோடு உண்ணாவிரதமிருந்து ஊர்வலம் நடத்தி கடும் தாக்குதலுக்கும் ஆளானவர். அருகாமையிலிருந்த நீர்நிலைகளைப் பயன்படுத்துவதற்கு சாதியவாதிகள் விதித்த தடை காரணமாக, அவர் தான் நடத்திய பல மாநாடுகளில் பங்கெடுத்தவர்களுக்கு விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றும் அவலத்திற்கு ஆளானவர்.

ஆனாலும் அவருக்கென அதிகாரம் கிட்டியபோது, அதை அவர் தனக்கும் தன் மக்களுக்கும் தண்ணீர் தர மறுத்தவர்களுக்கு எதிராக பயன்படுத்தவில்லை. மாறாக, ஓர் அடிப்படை ஆதாரவளமான நீர் குடிமக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கும் பாசனத்திற்கும் நாட்டை வளப்படுத்துவதற்கும் தடையின்றி கிடைப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்தார்.

இந்த நோக்கத்தில்தான் அவர் அமெரிக்காவின் டென்னஸி ஆற்றுப்பள்ளத்தாக்குத் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு தாமோதர் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டத்தைக் கொண்டுவந்தார். வெள்ளப் பெருக்கினால் வங்காளம், பீகார் மாநிலங்களில் தொடர்ந்து கடும் சேதாரங்களை உருவாக்கிவந்த தாமோதர் ஆற்றின் குறுக்கே பேரணையும் நீர்மின் உற்பத்திக்கூடமும் கட்டப்பட்டன.

அம்பேத்கர் விரும்பிய தலித் முனைவோர் வளர்ச்சியே என் நோக்கம்- மோடி
"புத்தகம்": மதம், சாதி குறித்த அம்பேத்கர் எழுத்துகளின் புதிய தொகுப்பு
இப்பெருந்திட்டத்தில் தீண்டப்படாத சாதியைச் சார்ந்த மற்றொருவரும் சர்வதேச அளவில் மதிப்பார்ந்த இடத்தைப் பெற்றிருந்த இயற்பியலாளருமான மேக்நாட் சாகாவும் அம்பேத்கருடன் இணைந்திருந்தார். தாமோதர் போலவே மகாநதி, சோன் நதி பள்ளத்தாக்கு திட்டங்களும் அம்பேத்கரின் கொடைகளே.

ரயில் தடங்களைப் போலவே நதிகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட வேண்டும்- அதாவது நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்கிற அம்பேத்கரது யோசனை, நதிநீர் பகிர்வுக்காக மாநிலங்கள் சண்டையிட்டுக் கொள்ளும் இந்நாளில் அருந்தீர்வாக நினைவுகூரப்படுகிறது. நாட்டின் நீர் மேலாண்மைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு நன்றி செலுத்தும் விதிமாக தேசிய நீர் ஆணையம் Ambedkar's Contribution to Water Resources Development என்கிற ஆவணத்தை 1993ல் வெளியிட்டது.

அம்பேத்கரை கொண்டாடுவதாக காட்டிக்கொள்வதன் மூலம் தலித்துகளிடையே செல்வாக்கு பெறமுடியும் என்கிற மலிவான உத்தியுடன் களமிறங்கியுள்ள பா.ஜ.க அரசு, அம்பேத்கரின் 125 ஆவது பிறந்த நாளை (14.04.2016) தேசிய தண்ணீர் தினம் என்று கொண்டாடுவதாகவும் இந்த ஆவணத்தையும் மறுபதிப்பாக வெளியிட்டுள்ளதாகவும் பீற்றிக்கொண்டது.

Image copyright SAJJAD HUSSAIN அம்பேத்கர்
இந்தியாவின் முதலாவது முன்னோடி ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம் என்கிற பெருமைக்குரிய தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம். அது அம்பேத்கரால் உருவாக்கப்பட்டது என்கிற அடிப்படைத்தகவலைக்கூட அத்திட்டக் கழகத்தின் தற்போதைய தலைவரோ அங்குள்ள தொழிலாளர்களோ அறிந்திருக்கவில்லை. அங்குள்ள நூலகத்தில்கூட இதுதொடர்பான பதிவுகள் ஏதும் இடம் பெற்றிருக்கவில்லை என்பதை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் முசாபர்பூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான ஏ.கே.பிஸ்வாஸ் நேரடி அனுபவத்திலிருந்து எழுதியிருக்கிறார்.

இதுதான் களநிலவரம் பற்றிய துல்லியமானதோர் உதாரணம். அம்பேத்கரை, தலித்துகளின் இடஒதுக்கீட்டுக்காகப் போராடியவர் அல்லது அரசியல் சாசனத்தை எழுதியவர் என்கிற சுருக்கப்பட்ட பிம்பமே வெகுமக்களுக்குள் பதியவைக்கப்பட்டுள்ளது. தேச உருவாக்கத்திற்கும் குடிமக்களின் நல்வாழ்விற்கும் அம்பேத்கர் ஆற்றிய பணிகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆனால் காலம் அவரது பன்முக ஆளுமையை தேடித்தேடி முன்னிறுத்துகிறது.

தமிழக அளவில் பெரியாரியம் அவ்வப்போது அம்பேத்கரியத்தின் எதிர்நிலையில் வைத்து விவாதிக்கப்படும் போக்கு உருவாகிறதே. உண்மையில் அம்பேத்கரின் காலத்தில் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் இடையில் இருந்த உறவு எப்படிப்பட்டது? அவர்களிருவரின் பணிகள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்தனவா, துணையாக இருந்தனவா?

'ஜல்கவோன் என்னும் இடத்தில் 29.5.1929 அன்று மத்திய மாகாணங்கள் - பேரார் தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரையை "பம்பாயில் சுயமரியாதை முழக்கம்' என்னும் தலைப்பில் "குடி அரசு' (16.6.1929) வெளியிட்டது. அம்பேத்கர் நிறுவிய "சமாஜ் சமதா சங்' (சமுதாய சமத்துவச் சங்கம்) மராத்தியிலுள்ள சிட்டகெய்னில் நடத்திய முதல் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய தலைமைஉரையின் மிகச் செறிவான சுருக்கம், ஆங்கிலத்திலும் தமிழிலும் மேற்சொன்ன ஏடுகளில் வெளியிடப்பட்டன. அந்த மாநாட்டை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், "முதல் மகாராட்டிர சுயமரியாதை மாநாடு' என்று வர்ணித்தது.

காந்தியின் மதம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
அதே ஆண்டுத் தொடக்கத்தில்தான் சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சமாஜ் சமதா சங்கின் முதல் மாநாட்டிற்கு, "தென்னிந்திய சுயமரியாதை இயக்கத்தின் பிரபல தலைவர் ஈ.வெ. ராமசாமி அனுப்பிய வாழ்த்துத் தந்தியும் கடிதமும் அங்கு படிக்கப்பட்டன'' என்னும் செய்திக் குறிப்பிலிருந்து, பெரியாரும் அம்பேத்கரும் அதற்கு முன்பே ஒருவரையொருவர் அறிந்திருந்தனர் என்றோ, இருவருக்கும் தொடர்பு இருந்தது என்றோ ஊகிக்கலாம் ("ரிவோல்ட்', 29.9.1929). - தோழர் எஸ்.வி. ராஜதுரையின் இந்தக் குறிப்பு பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் இருந்த தோழமையை உணர்த்துகிறது.


Video caption கம்யூனிசமா? ஜனநாயகமா? அம்பேத்கர் பிபிசிக்கு அளித்த பேட்டி
அம்பேத்கர் /பெரியார் பெயரை நொடிக்கு நூறுமுறை பஜனை போல உச்சரித்துக்கொண்டு அவர்களது நோக்கங்களுக்கு எதிராக செயல்பட்ட/ செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற எவரொருவரை விடவும் பெரியாரும் அம்பேத்கரும் கருத்தியல் ரீதியாக வெகுவாக ஒன்றி செயல்பட்டனர். அம்பேத்கர் 'சாதியொழிப்பு' என்கிற தனது ஆவணத்தை பெரியாருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். பெரியார் அதை தமிழில் வெளியிட்டு பரவலாக்கியிருக்கிறார்.

சாதியத்திற்கும் இந்துமதத்திற்கும் எதிராக நடத்தப்பட வேண்டிய சமரசமற்றப் போராட்டங்களை ஆளுக்கொரு முனையிலிருந்து முன்னெடுத்த பெரியாரும் அம்பேத்கரும் தம்மளவில் எதிரெதிரானவர்கள் அல்ல. அவ்வாறு நிறுத்துகிறவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்கலாம். அவற்றை பின்தொடர்ந்து நாம் நேரத்தை விரயமாக்க வேண்டியதில்லை.

சோசலிசம் குறித்து அம்பேத்கருக்கு இருந்த கருத்துகள் என்ன? அந்தக் கருத்துகள் உருவாகி வந்த பின்புலம் என்ன? குறிப்பான நிகழ்வுகள் ஏதும் சொல்ல முடியுமா?

அயல்நாடுகளில் படிக்கச் சென்றபோது பேபியன் சோசலிஸ்டுகளுடன் ஏற்பட்ட தொடர்புகளாலும் அவர்களது கருத்தியல் செல்வாக்கினாலும் தான் அம்பேத்கர் சோசலிசம் பேசினார் என்று சிலர் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஏற்றத்தாழ்வு, புறக்கணிப்பு, அவமானம் என சாதியத்தின் கொடுமைகளை எல்லா நிலைகளிலும் இடையறாது சந்தித்தேயாக வேண்டிய அவலத்திற்குள் தள்ளப்பட்ட ஒரு தலித் என்கிற வகையில் அவற்றுக்கெதிரானவராகவும் சமத்துவத்தைக் கோருகிறவராகவும் அவர் தன்னியல்பாகவே இருப்பது தவிர்க்க முடியாதது.

அம்பேத்கர்
சமத்துவம் என்பதன் கோட்பாட்டு விளக்கத்தை வேண்டுமானால் அவர் தாமதமாக - வெளியுலகத் தொடர்புகள் மூலமாக அறிந்திருக்கலாம். ஆனால் சமத்துவம் என்பதை அவர் தனது அகவயமானத் தேவையாக உணர்ந்து அதைத் தேடியடைவதிலேயே முழு வாழ்நாளையும் அர்ப்பணித்திருக்கிறார். இந்த நிறைவேறாத கனவை செயல்பூர்வமாக மாற்றிக்காட்டுவதில் அவர் காட்டிய உழைப்பும் விடாப்பிடியான ஈடுபாடும்தான் பிறரிடமிருந்து அவரை தனித்தொளிரச் செய்கிறது.

1917ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்தியாவில் சாதிகள் என்கிற ஆய்வுக்கட்டுரையிலேயே வர்க்கம் பற்றி அவரது குறிப்புகளை காணமுடிகிறது. நாடு திரும்பி அவர் தனது அரசியல் செயற்பாடுகளை தொடங்கிய காலந்தொட்டே தொழிலாளர்களை அணி திரட்டுவதில் அக்கறை காட்டி வந்திருக்கிறார்.

பம்பாய் நூற்பாலைகளில் நிலவிய தீண்டாமைகளைக் காணும் அவர், சாதியானது தொழிலை மட்டுமல்லாது தொழிலாளர்களையும் பிரித்துவைக்கிறது என்றும் தொழிலாளர்களை ஒரு வர்க்கமாக அணிதிரட்டுவதில் சாதி பெரும் தடையாக இருக்கிறது என்றும் தெளிவுபடுத்தினார்.

சாதிகளைக் கடந்து உழைக்கும் மக்களை திரட்ட வேண்டும் என்கிற திட்டத்தோடுதான் 1936 ஆகஸ்டில் சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.

1938 பிப்ரவரியில் மன்மத் நகரில் ரயில்வேயில் பணியாற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் மாநாட்டுக்கு தலைமை வகித்து அவர் ஆற்றிய உரை இன்றைக்கும் பல்வேறு அம்சங்களில் பொருத்தப்பாடு கொண்டது. 'என்னைப் பொறுத்தவரை இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு பகைவர்களோடு போராட வேண்டியுள்ளது. ஒன்று - பிராமணியம், இரண்டு- முதலாளித்துவம்' என்று அறிவித்தோடு சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பதன் எதிர்மறைதான் பிராமணீயம் என்று நிறுவுவார். '...நமது இலக்கு இந்த கூலி அடிமைத்தனம் என்னும் கருத்தோட்டத்திலிருந்து விடுபட்டு விடுதலைக் கோட்பாட்டை அடைவதாக இருக்கவேண்டும்...

Image copyright KEYSTONE அம்பேத்கர்
Image caption மனைவியுடன் அம்பேத்கர்
அதாவது சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய இலக்குகளை நோக்கி தொழிற்சங்க இயக்கத்தை வழிநடத்த வேண்டும். சமுதாயத்தைப் புனர்நிர்மாணம் செய்ய வேண்டும். இந்தப் புனர் நிர்மாணமே தொழிலாளி வர்க்கத்தின் முதற்கடமையாகும்...' என்று அறைகூவல் விடுக்கிறார். புனர் நிர்மாணம் என்பதற்கு பதிலாக புரட்சி என்கிற நேரடிச் சொல்லை ஒருவேளை அவர் பயன்படுத்தியிருப்பாரேயானால் அவரை கம்யூனிஸ்ட் என்று பலரும் சொல்லியிருக்கக்கூடும்.

என்னைப் பொறுத்தவரை, இந்த முழக்கம் 'இழப்பதற்கு அடிமைச்சங்கிலியைத் தவிர எதுவுமில்லை, அடைவதற்கோர் பொன்னுலகம் உண்டு' என்பதற்கு இணையானதே. 'இந்தியாவும் பொதுவுடைமைக்கான முற்படு தேவைகளும்' என்கிற பொதுத்தலைப்பின் கீழ் அவர் எழுதியுள்ள கட்டுரைகளை வாசிக்கிற எவரும் இம்முடிவுக்கே வரமுடியும்.

மார்க்சீயம் முன்வைத்த விஞ்ஞான சோசலிசத்துடன் தொடர்பில்லாத பல வகைமைகள் சோசலிசத்தில் உண்டு. அம்பேத்கரின் சோசலிசம் அரசு சோசலிசம் எனப்படுகிறது. அவர் பங்கு வகித்த பல்வேறு அமைப்புகளின் கொள்கைகளில் சோசலிசத்தின் மீதான தனது பிடிப்பை கூறிவந்த அவர் 1946 ஜூன் 17 அன்று அரசமைப்பு அவையில் ஆற்றிய உரையில் அதை மறுவுறுதி செய்கிறார்.

'இந்த நாட்டில் சமூக, பொருளாதார நீதி இருக்கும்படி செய்வதற்குத் தொழில்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும், நிலம் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்பதை இந்தத் தீர்மானம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்த்திருக்க வேண்டும். சமூக, பொருளாதார, அரசியல் நீதியில் நம்பிக்கை கொள்ளும் எந்தவொரு எதிர்கால அரசாங்கமும், அதன் பொருளாதாரம் ஒரு சோசலிசப் பொருளாதாரமாக இருந்தாலன்றி, அந்த நீதியை எவ்வாறு செயல்படுத்தும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை....'.

Image copyright DIBYANGSHU SARKAR அம்பேத்கர்
சோசலிசத்தின் மீது அம்பேத்கருக்கு இருந்த சீரான நம்பிக்கை கம்யூனிஸ்ட்டுகளின் மீது அதேரீதியில் இல்லாமல் போனதற்கு பல நியாயமான காரணங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் அதை அவர் பகையுணர்ச்சியாக வைத்துக்கொள்ளவில்லை. பல்வேறு மக்கள் பிரச்னைகளில் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து போராடியிருக்கிறார். அதேவேளையில் சாதியத்தைப் புரிந்துகொள்வதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இருந்த பார்வைக்குறைபாட்டை கடுமையாக விமர்சித்தார்.

காங்கிரஸ், பிரிட்டிஷ் ஆட்சி அமைத்த பல்வேறு குழுக்களை பலரும் புறக்கணித்த நிலையில் அம்பேத்கர் அவற்றிடம் கோரிக்கை சாசனங்களை அளித்தது தொடர்பாக கம்யூனிஸ்ட்டுகளுக்கும் அவர் மீது விமர்சனங்கள் இருந்தபோதிலும் அம்பேத்கர் முன்வைத்த தனித்தொகுதி, இரட்டை வாக்குரிமை, தனி செட்டில்மென்ட் போன்ற கோரிக்கைகளை ஆதரித்திருக்கிறார்கள். இதுபற்றி 'ஆறு கோடி தீண்டாதார்' என்கிற தலைப்பில் பி.டி.ரணதிவே எழுதி 1945ல் வெளியான பிரசுரம் அப்போதே தமிழிலும் வெளிவந்துள்ளது.

பொருளாதாரம் என்கிற அடிக்கட்டுமானத்தை மாற்றினால் சாதி என்கிற மேற்கட்டுமானம் தானாக மாறிவிடும் என்கிற கம்யூனிஸ்டுகளின் வாதத்தை அவர் மறுத்தார். அடிக்கட்டுமானமா மேற்கட்டுமானமா என்று துல்லியமாக பிரித்தறிய முடியாதபடிக்கு சாதி இருப்பதை சுட்டிக்காட்டினார். ஒரு வாதத்திற்காக, சாதி மேற்கட்டுமானம் தான் என்றே ஒப்புக்கொண்டாலும் மேலேயுள்ள அதை தகர்க்காமல் அடிக்கட்டுமானத்தை தகர்க்கமுடியாது என்று விளங்கப்படுத்தினார். இவரது இந்த விளக்கத்தை சரியென ஏற்றுக்கொள்வதற்கு கம்யூனிஸ்டுகளுக்கு குறிப்பிட்ட காலம் தேவைப்பட்டிருக்கிறது.

சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் இணைத்தே நடத்தவேண்டுமென்கிற நிலைப்பாட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். சாதியம் ஒழிக்கப்படக் கூடாதென்பதல்ல, பொருளாதாரக் கட்டமைப்பு மாறினால் சாதியும் ஒழிந்துவிடும் என்கிற யாந்திரீகமான - பிழையான பார்வைதான் எங்களை தடுத்துவிட்டது என்று பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்துகொண்டு கம்யூனிஸ்டுகள் களத்திற்கு வந்திருக்கிறார்கள்.

அம்பேத்கர்
தொழிலாளிகளில் ஒருபகுதியினரை சாதியடிப்படையில் அம்பேத்கர் பிரிக்கிறார் என்று கம்யூனிஸ்ட்டுகளும், தலித் தொழிலாளர்களை - அவர்கள் மீதான தீண்டாமைகளைக் களையாமலே - தொழிலாளி வர்க்க ஒற்றுமை என்கிற வலைக்குள் இழுத்துப் போட்டுக்கொள்ள கம்யூனிஸ்ட்டுகள் முயற்சிப்பதாக அம்பேத்கரும் பரஸ்பர குமைச்சல் இருந்திருக்கிறது. இருதரப்பினரும் தத்தமது ஆதரவு தளத்தை தக்கவைக்கும் முயற்சியின் வெளிப்பாடாகவே இதை பார்க்கவேண்டியுள்ளது.

கம்யூனிஸ்ட்டுகள் மீது அம்பேத்கர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த தருணங்கள் எல்லாமே தேர்தல் காலங்கள் என்கிற ஒத்திசைவைக் கொண்டுள்ளது தற்செயலானதல்ல. தேர்தலுக்கு முன்னும் பின்னும் அவர் கம்யூனிஸ்ட்டுகளுடன் போராட்டக்களத்தில் இணைந்து நின்றிருக்கிறார். ( பார்க்க- Bridging the Unholy Truth - Anand Teltumbde). ஆனால் இந்த காலப்பின்னணியை கவனத்தில் கொள்ளாமல், கம்யூனிஸ்டுகளிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அம்பேத்கர் சொல்லியிருக்கிறார், கவனம் கவனம் என்று சிலர் கதறுகிறார்கள்.

அதே அம்பேத்கர் இந்துத்வவாதிகளிடம் எந்த ஒட்டுறவும் வைத்துக்கொள்ளாதீர்கள் என்று விடுத்த எச்சரிக்கையை இவர்கள் எங்கும் பேசுவதில்லை. தலித்துகள் வலதுசாரி முகாம்களுக்குள் இழுக்கப்படுவது பற்றியும் கவலையுமில்லை. சாதியத்தை அதன் எல்லாக் கொடூரங்களோடும் மீட்டமைப்பதற்காக தலித்துகள்மீது கொடிய அடக்குமுறைகளை ஏவிவரும் இந்துத்வ பா.ஜ.க. பெரும்பாலான ரிசர்வ் தொகுதிகளை கைப்பற்றியுள்ளது பற்றியும் கலவையில்லை. 'ராம்'விலாஸ் பஸ்வான், உதித் 'ராம்'ராஜ், 'ராம்'தாஸ் அதாவாலே ஆகிய 'தலித்ராம்கள்', தலித்துகள்மீது எவ்வளவு கொடிய ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டாலும் முணுமுணுப்பின்றி பா.ஜ.க.வுடன் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது பற்றி இவர்களுக்கு எவ்வித கூச்சமும் கிடையாது.

தலித்துகளை சப்ஜெக்டாகவும் பிராஜக்டாகவும் மாற்றி கொள்ளையடிக்கும் தொண்டு நிறுவனங்கள் என்கிற ஃபண்டு நிறுவனங்களால் தலித் அணிதிரட்சி சிதறடிக்கப்படுவது பற்றியும்கூட இவர்களுக்கு கவலையில்லை. இவர்களது ஒரே கவலை கம்யூனிஸ்டுகளிடம் தலித்துகள் போய்விடக்கூடாது என்பதுதான். போராட்டப் பாதையை விடுத்து, அம்பேத்கர் உருவாக்கிக் கொடுத்த அரசியல் சாசனத்தைப் பற்றி நின்று நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கிற போக்கானது, அதிகாரத்தை எப்படியாவது யாருடனாவது பகிர்ந்துகொண்டு அதை நியாயப்படுத்திக் கொள்வதற்காக தூய தலித்தியம் பேசிக்கொண்டு தனிமைப்பட்டு காலந்தள்ளுவது என்கிற தற்கால நிலைக்குத் தாழ்ந்துள்ளது.

அதேவேளையில் அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவ உரிமைகளை அடைவதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற அம்பேத்கரின் வழிகாட்டுதலை உள்வாங்கியவர்கள் களத்தில் இருக்கிறார்கள். சாதியொழிப்புக்கான போராட்டத்தை தலித்துகள் மட்டும் தனித்து நடத்திவிட முடியாது என்கிற தெளிவு அவர்களுக்கிருக்கிறது. ஆகவே, அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளையும் பெரியாரிஸ்டுகளையும், சாதியத்தைத் துறந்து வாழப் போராடுகிறவர்களையும் தமது தோழமைச்சக்திகளாக கருதுகிறார்கள். அதுபோதுமானது.
Thanks BBC Tamil.
Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

*மகாத்மா* *ஜோதிபா* *புலே* அவர்களின் பிறந்தநாள் இன்று..!


*மகாத்மா* *ஜோதிபா* *புலே* அவர்களின் பிறந்தநாள் இன்று..!

நவீன இந்தியாவின் முதற் *சமூக* *சீர்திருத்தவாதி* என்றால் அது மராத்திய மண்ணில் உதித்த மகாத்மா  ஜோதிபா புலே தான்.சாதி ஒழிப்பு,தீண்டாமை எதிர்ப்பு என்பனவற்றைத் தாண்டி பெண் விடுதலைக்கும் அவர்தம் கல்விக்கும்  இவர் ஆற்றிய சேவை அளப்பரியது.

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் தாம் குருவாக ஏற்ற மூவரில் கவுதம புத்தர்,கபிர் போன்றோர்களுக்கு அடுத்து மகாத்மா ஜோதிபா புலேவும் அடக்கம்.பகுஜன் சமாஜ் கட்சியை *மான்யவர்* *கான்ஷீராம்* அவர்கள் தோற்றுவித்த போது,அவர் தம் கட்சியின் ஐந்து முன்னோடிகளில் முதன்மையானவராக மகாத்மா ஜோதிபா புலேவையே குறிப்பிட்டார்.

 *பிற்படுத்தப்பட்ட* *சமூகத்தில்* (OBC) பிறந்த இவர் உயர்தட்டு மக்களுக்கு அடிமையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மக்களை தாம் அடிமையாக இருக்கிறோம் என்பதை முதன் முதலில் உணரச் செய்தவர்.

இத்தகு பெருமைகட்கு உரிய மகாத்மா ஜோதிபா புலேவின் நினைவைப் போற்றும் விதமாக உத்தர பிரதேசத்தை ஆண்ட பெகன்ஜி மாயாவதி அவர்கள் தன் ஆட்சிக் காலத்தில் அவர் நினைவைப் போற்றும் விதத்தில் அமைத்த கல்விக் கூடங்கள்,நினைவிடங்கள் மற்றும் திட்டப் பணிகள் ஆகியவை குறித்த தகவல் பின்வருமாறு:

1.மகாத்மா ஜோதிபா புலே பல்கலைக்கழகம்(07.07.1997)
2.மகாத்மா ஜோதிபா புலே அரசு துப்புரவு ஆசிரமப் பள்ளி,லக்னோ(14.04.1997)
3. மகாத்மா ஜோதிபா புலே திறந்தவெளி பன்னோக்கு அரங்கம்,லக்னோ(1995)
4. மகாத்மா ஜோதிபா புலே விளையாட்டரங்கம்,எட்வா(1995)
5. மகாத்மா ஜோதிபா புலே நகர் மாவட்டம் உருவாக்கம்(06.04.1997)
6. மகாத்மா ஜோதிபா புலே சிலை நிறுவுதல்,சுட்மல்பூர் சவுராகா,சகரன்பூர்(01.05.1997)
7. மகாத்மா ஜோதிபா புலே சிலை நிறுவுதல், மகாத்மா ஜோதிபா புலே நகர்(06.05.1997)
8. மகாத்மா ஜோதிபா புலே சிலை நிறுவுதல்,காகேல்ஹேரி,சகரன்பூர்(11.04.1997)
9.மகாத்மா ஜோதிபா புலே பூங்கா,கோம்தி நகர்,லக்னோ(04.04.2008)
10.மகாத்மா ஜோதிபா புலே சிலைகளை லக்னோவின் முதன்மைச் சாலை சந்திப்புகளில் நிறுவும் பணி (2008).

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதம்_பகுஜன் வரலாற்று மாதம்
 *ஜெய்பீம்* .!