ஞாயிறு, 27 மே, 2018

மானசீகன்


மானசீகன்

நேற்று காடுவெட்டி குரு மறைந்த போது தோழர்.திருமாவளவன் மிகுந்த கண்ணியத்தோடு இரங்கல் தெரிவித்திருந்தார். அந்த  இரங்கலில் அவருடைய  அரசியல் முதிர்ச்சி தென்பட்டது.

திருமாவின் 90 கள் காலகட்டத்து பேச்சை நான் ரசித்ததில்லை.ஆனால் ஒருவகையில் காலம்காலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எதிர்வினைதான் அது.அகிம்சையை தன் தாரக மந்திரமாகக் கொண்ட காந்தி'வன்முறையை பிரயோகிப்பதற்கான தார்மீக நியாயம் யாருக்காவது உண்டென்றால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே அது இருப்பதாக நான் கருதுகிறேன் ' என்று பேசியிருக்கிறார். அந்த  அளவுகோலில்தான் நான் ஆரம்ப கால திருமாவளவனை மதிப்பிடுகிறேன்.

ஆனால் 2000 க்குப் பிறகு அவர் மிகச் சிறந்த தலைவராக பரிணாமம் பெற்றிருக்கிறார்.நடுநிலை கொண்ட வன்னியர் சமூகத்துப் பெருமக்கள் கூட  தம் மன ஆழத்தில் அவர் மீது மரியாதை வைத்திருக்கின்றனர்.அவர் சாதிப்பெருமிதத்திற்கு எதிராக 'சாதி ஒழிப்பு ' என்ற  ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார். திராவிட  இயக்கங்கள் இதனை பொதுத்தளத்தில் பேசுவது வேறு. ஆனால் தான் சார்ந்த சமூகத்திற்காக களப்பணியாற்றி அவர்களை அரசியல் விழிப்புணர்வு  அடையச் செய்து கொண்டே இதனைப் பேசுவது என்பது மிக முக்கியமானது.ஒரு வகையில் கடினமானதும் கூட.தனக்குக் கூடும் கூட்டத்தை தானே கலைப்பதற்கு நிகரானது அது.ஆனால் அவருக்கான கூட்டம் கலைவதேயில்லை.2016 ல் அவர் பிறந்த தின கவியரங்கத்திற்கு கவிமாமணிஅப்துல் காதர் தலைமையில் சென்றிருந்தேன் .காமராஜர் அரங்கத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.அந்த நிகழ்வில்தான் 'மக்கள் நலக் கூட்டணி' உறுதி செய்யப்பட்டது.அங்கு வைகோ பேசுகிற போது'வன்னியர் சமூகத்து இளைஞர்கள் அப்பாவிகள்.உழைக்கும் மக்கள்.அவர்களை சில தலைவர்கள் வழிகெடுக்கின்றனர்' என்று குறிப்பிட்டார்.அரங்கத்தில் பலத்த கை தட்டல்.அது நல்லிணக்கத்தின் குரல் என்பது மட்டும் அல்ல;பொறுமையும்,அறிவும் கொண்ட ஒரு தேர்ந்த வாத்தியாருக்குக்  கிடைத்த வெற்றி.வைகோவின் நல்லிணக்க உரையைப் புரிந்து கொள்கிற சூழலை திருமா தன் தொண்டர்களிடம் உருவாக்கியிருக்கிறார்.திராவிட  இயக்கத் தலைவர்களின் மனநிலை உயர்ந்ததாக இருந்தாலும் நடைமுறையில் அக்கட்சிகளின் குறுநிலமன்னர்களாகிய மாவட்டச் செயலாளர்கள் சாதி ஒழிப்பை சாத்தியமாக்கவில்லை.சமூக நீதி இடைச்சாதிகளோடு நின்று விட்டது. ஆனால் திருமா, பெரியார், அம்பேத்கர் இருவரையும் உள்வாங்கிக் கொண்டு இதனை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.

காடுவெட்டி குரு பேசும் போது அவர் முன்னால் நின்றிருக்கிற கூட்டம் எப்படி வெறுமனே ரசிகக் குஞ்சுகளாக ஆர்ப்பரிக்கிறதோ அதே நிலைதான் திருமாவிற்கும்.ஆனால் முரட்டுத்தனமான பிள்ளைகளுக்கு கற்றுத் தர வந்திருக்கிற பொறுமை மிகுந்த வாத்தியாரைப் போல திருமா நடந்து கொள்கிறார்.

அவரை உற்றுக் கவனித்தால் தெரியும். இந்துத்துவத்தோடு துளியளவும் சமரசம் செய்து கொண்டதில்லை. திராவிட, பொதுவுடைமை மற்றும் இஸ்லாமிய  இயக்கங்களோடு நல்லுறவு வைத்திருந்தாலும் தன் தனித்தன்மையை சிறிதளவும் விட்டுக் கொடுக்காமல் இயங்கிக் கொண்டிருக்கிறார். அவர் பயணம் கத்தி மீது நடப்பதல்ல;ரேசர் மீது நடப்பது.

பறையர்களின் உரிமைக் குரலாகக் கிளம்பிய திருமாவளவன் இன்றைக்கு ஒடுக்கப்பட்டோரின் ஒரே நம்பிக்கையாக  உருமாறியிருக்கிறார்.தன் மக்களுக்கான  அதிகாரப் பங்கீட்டைப் பேசுகிற  அதே நேரத்தில் பிற சமூகத்தவர்களோடு பேண வேண்டிய நல்லிணக்கத்தை வலியுறுத்தி வருகிறார். அவருடைய சமீபகால பேச்சுக்கள் இடைசாதி மக்களின் மனசாட்சியோடு உறவாடி வருகின்றன. சில  ஆண்டுகளுக்கு முன்னால் உசிலம்பட்டியில் ஏராளமான தேவர்கள் நிறைந்திருந்த கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தார்.அவர் பேசி முடித்த பின் ஒரு பெரியவர் சொன்னார் 'இது பேச்சு; இது மாதிரி ஒரு தலைவன் இப்ப  எந்த சாதிக்கும் இல்லப்பா'.இது திருமாவளவனின் அரசியல் பரிமாணத்திற்குக் காலம் அளித்த மாபெரும்  விருது.

அவர் மட்டும் சில தருணங்களில் பொறுமையாக இல்லாமலிருந்திருந்தால் தமிழகத்தின் அமைதி கெட்டிருக்கும்.ஆனால் இக்கட்டான தருணங்களில்  அவர் மேற்கொண்ட பொறுமை பலரைத் தோலுரித்து அவரது புகழை மேலெழ வைத்திருக்கிறது.

தற்போதிருக்கும் இஸ்லாமிய  இயக்கங்களின் எந்தத் தலைவர் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால்  இஸ்லாமியர்களின் பேரன்பைப் பெற்ற பெருந்தலைவராக திருமாதான் இருக்கிறார். கலைஞருக்குப் பிறகு இஸ்லாமியர்கள் வேறு யாரையும் இந்த  அளவிற்கு நேசித்ததில்லை.ஆனால் அந்த  உறவையும் அவர் தேர்தல் கண்ணோட்டமாக மட்டுமே சுருக்கி விடாமல் பரந்த பார்வையோடு கையாண்டு வருகிறார்.சமீபத்தில் பொம்மிநாயக்கன்பட்டியில் இஸ்லாமியர்களுக்கும்,பறையர்களுக்கும் இடையே  கலவரம் நிகழ்ந்த போது திருமா அங்கே சென்றார். பள்ளிவாசலில் அமர்ந்து இஸ்லாமியர்களோடு பேசினார். பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தார். ஒரு இஸ்லாமியத் தலைவரைக் குறிப்பிட்டு அடுத்த தடவை வருகிற போது அவரோடு வருகிறேன் என்றிருக்கிறார்.அதற்கு அவர்கள் ' அவர் மீதெல்லாம் உங்கள் மீதிருப்பது  போல் எங்களுக்கு மரியாதை கிடையாது 'என்று வெளிப்படையாகவே சொல்லியிருக்கின்றனர்.திருமா அப்படிப்பட்ட  உயரத்தைத் தொட்டிருக்கிறார்.

அவருடைய  அரசியல்  உத்திகளை நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரியும். அதில் தெரியும் நிதானம், தொலைநோக்கு,பிடி கொடுக்காத  இலாவகம், யாரையும் பகைத்துக் கொள்ளாத தெளிவு அனைத்துமே கலைஞரின் குணாதிசயங்கள்.தமிழகத்தில் கலைஞருக்குப் பிறகு தேர்ந்த  அரசியல்வாதி திருமாதான்.நடைமுறைச் சாத்தியங்களின் எல்லைகளை மிகச் சரியாக உணர்ந்து பயணித்தாலும் அதற்காகத் தன் கனவுகளை ஒரு போதும் கை விடாதவர்.

அவர் செயல்பாடுகளையும்,சிந்தனைகளையும் புரிந்து கொண்டு அவரளவிற்கு முன்னே நகர்ந்து ஓடி வருகிறவர்கள் அங்கு குறைவாகவே இருக்கின்றனர்.ஆனால் பல்லாண்டு கால சமூகக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டு இப்போது கோபத்தை மட்டுமே ஒரே ஆயுதமாகக் கொண்டு முன்னேறத் துடிக்கும் ஒரு சமூகத்திற்கு இப்படி  ஒரு தலைவன் வாய்த்திருப்பது மிகப்பெரிய வரம்.என்றோ ஒரு நாள் அந்த சமூகம் பக்குவத்தோடு எழுந்து நிற்கும் போது கண்டிப்பாக வரலாறு 'திருமா திருமா' என்றே முழங்கும்.

தமிழகத்தில் இந்துத்துவத்திற்கான மிகப்பெரிய முட்டுக்கட்டை அவர்தான். கிருஷ்ணசாமியைப் போல் அவர் ஆகியிருந்தால் இன்று மோடியின் செல்லப் பிள்ளையாக இருந்திருப்பார்.ஆனால் தன் அரசியலில் இருந்து விலகாத பயணமே அவருக்கான மரியாதையாக  உடனிருக்கிறது.

திராவிடம், காந்தியம், பொதுவுடைமை போன்ற  மாபெரும் தத்துவங்கள் தமிழகத்தில் மகத்தான தலைவர்களை உருவாக்கியிருக்கிறது.ஆனால் சுயம்புவாக ஒரு தலைவன் முளைத்து இந்த மூன்றோடு அம்பேத்கரியத்தையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறான்.தலித்தியத்தில் தொடங்கிய அவர் பயணம் திராவிடத்தை உள்வாங்கிக் கொண்ட இடதுசாரி தமிழ்தேசியமாகப் பரிணமித்திருக்கிறது.தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னுதாரணமே இல்லாத மாபெரும் சாதனை இது.

தலைவர்கள் இல்லாத வெற்றிடம் என்று அரிதாரம் பூசியவர்கள் வலை வீசுகிறார்கள்.வரலாறு நம் மீது பூசி விட்ட சாதிச் சேற்றிலிருந்து எழுந்து வந்து பாருங்கள்.இதோ நம் காலத்திற்கான ஒரு தலைவன் உருவாகி நிற்கிறான்.
Mohammed Rafeek R

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக