ஞாயிறு, 27 மே, 2018

காடுவெட்டி குருவுக்கு திருமாவளவன் புகழாரம்!

காடுவெட்டி குருவுக்கு திருமாவளவன் புகழாரம்!

கோப்புப்படம் சென்னை: அரசியல் கருத்து மாறுபாடுகளுக்கும் அப்பால், காடுவெட்டி குரு எம்மோடு பணியாற்றியது என்றும் நினைவுகூரத்தக்கதாகும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 
உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த காடுவெட்டி குரு, நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காடுவெட்டி குருவின் மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: 

'வன்னியர் சங்கத் தலைவரும் பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான காடுவெட்டி குரு உடல் நலிவுற்று காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தோம். 

மறைந்த அவருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில்
எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

தமிழ் பாதுகாப்பு இயக்கம் செயல்பட்ட காலத்திலும் 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போதும் அவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. 

2011 - தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்கு விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியின் வாக்குகளே காரணம் என்று நெகிழ்வோடு தெரிவித்து நன்றி பாராட்டினார்.

அரசியல் கருத்து மாறுபாடுகளுக்கும் அப்பால் அவர் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தேர்தல் களங்களில் எம்மோடு நல்லிணக்கமாக பணியாற்றியது என்றும் நினைவுகூரத்தக்கதாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உற்றார்
உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக