இதோ இரட்சகர் பிறந்தார்!
இந்திய குடியரசு தந்தை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 129-வது பிறந்தநாள் இன்று (14-ஏப்ரல்) !
ஜெய்பீம்...
அனைவருக்கும் வணக்கம். பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 129-வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
ஏப்ரல் 14-ம் தேதி என்றாலே இந்தியர்கள் நமக்கு ஒரு உற்சாகமான நாள்.
"உயிர் கொடுத்தது தாய்; மனிதன் என்கிற பெருமைமிகு உணர்வைக்கொடுத்தது டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்!"
இந்த நாளை அனைவரும் வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்கின்றோம்.
கொரோனா கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக உலகம் முழுவதும் மனிதகுலம் போராடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் நாமும் கொரானாவுக்கெதிராக யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறோம். இந்த தொற்றுநோய் பரவாமல் தடுப்பதில் நாம் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டும்.
நம் இரட்சகரான பாபாசாகேப்பின் 129 - வது பிறந்தநாளில் அவரின் தியாகத்தையும் மனிதகுலத்திற்கு அவர் ஆற்றியுள்ள பணிகளையும் நினைவுக்கூர்ந்து நம் நன்றியை செலுத்தும் வகையில் 14.04.2020 அன்று நம் வீட்டில் மெழுகுவர்த்திகள் மற்றும் எண்ணெய் விளக்குகளை ஏற்றி ஒளிமயமாக்குவோம்.
மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் மற்றும் நடைமுறையிலுள்ள எந்த தடை உத்தரவுகளையும் மீறாமல்
இதை பின்பற்றுவதன் மூலம், இருளில் இருந்த நம்மை மீட்டு நம் வாழ்வில் ஒளியேற்றிய அந்த தியாகத்தலைவரின் ஆளுமை மற்றும் அறிவை போற்றும் வகையில் நம் நன்றியைக் காட்ட இது மிகச்சிறந்த வழியாக இருக்கும்.
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் ஆளுமைகளையும், அறிவாற்றலையும், அனைத்து மக்களின் மேம்பாட்டிற்காகவும் அவர் ஆற்றியுள்ள அரும்பணிகளை நாம் மட்டுமின்றி நம் குழந்தைகளுக்கும் அந்த செய்திகளை கொண்டு செல்ல வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை அண்ணலின் பிறந்தநாளை KNOWLEDGE DAY - ஆக அனுசரித்து விழா எடுக்கிறது; கனடா நாட்டில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை "Dr. B.R. Ambedkar Day of Equality - டாக்டர் அம்பேத்கர் சமத்துவ தினமாக" அங்கீகரித்து விழா எடுக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தலைவர் முதல் அனைத்து இந்திய மக்களும் இந்த நாளை கொண்டாடி இந்த மாபெரும் தலைவருக்கு தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர்.
உலகில் வேறு எந்த தலைவருக்கும் இத்தகைய பெருமையும் சிறப்பும் நாம் கேள்விப்பட்டு யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை.
உலகம் இவரை இந்தளவிற்கு கொண்டாடுவதற்கான காரணம் இவர் ஒருவரின் பிறப்பு பலக்கோடி மக்களின் அடிமைச்சங்கிலியை உடைத்து, தலைமுறை தலைமுறையாக தங்கள் மீது சுமத்தப்பட்டிருந்த இழிவு நீங்கி தாங்களும் மனிதர்கள் என்கிற உணர்வை பெற்றிருக்கின்றனர் என்பது தான்.
"மனித இனத்தின் மாண்பை மீட்க போராடிய உலக புரட்சியாளர்களில் முதன்மையானவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர். பலக்கோடி மக்களின் இழிவை போக்கியுள்ளது இந்த உயர்ந்த மனிதரின் பிறப்பு.
சமத்துவம் என்கிற கோட்பாட்டை கொண்டிராத இந்த தேசம் இவர் எழுதிய அரசியல் சாசனம் மூலம் தான் "ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்" ஆகிய உயரிய தத்துவங்கள் மீது எழும்பி நிற்கின்றது. உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு என பெருமை பெறுகின்றது; இன்று தேசம் உலகளவில் வல்லரசாக உயர்ந்து நிற்கிறது!
இந்த தேசத்தின் சாபக்கேடான சாதியத்தையும் அதன் செல்லக்குழந்தையான தீண்டாமையையும் கருவறுக்க பிறந்த சமத்துவ தலைவர் இவர்"
இந்திய மக்கள் அனைவருக்குமான அவரது பணிகள் சில...
1. குடியரசின் ஆணிவேரான வாக்குரிமை :
பட்டதாரிகளுக்கும், பட்டா உள்ளவர்களுக்கும், வரி செலுத்துபவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்று இருந்த நிலையை மாற்றி... வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பதை உறுதி படுத்தினார். இந்தியாவை உண்மையான ஜனநாயக குடியரசாக உருமாற்றினார்.
2. சட்டத்தின் முன் அனைவரும் சமம்: சாதிக்கு ஒரு நீதி வகுப்புக்கொரு சட்டம் என இருந்த மனுஸ்மிருதியை தீயிட்டு கொளுத்திய இவரே, "ஒரு மனிதன்-ஒரு வாக்கு-ஒரு மதிப்பு" என்று இந்திய வரலாற்றில் முதன்முதலாக சட்டம் இயற்றினார். இந்தியர்கள் அனைவரும் "இது என் நாடு; நானும் அனைத்து உரிமைகளையும் பெற்றவன்; நானும் இந்நாட்டை ஆட்சி செய்யமுடியும்" என்கிற உணர்வை பாபாசாகேப் வரைந்தளித்துள்ள நம் அரசியல் சாசனம் தருகின்றது. இத்தகைய சுதந்திர உணர்வை இந்திய அரசியல் சாசனம் வருவதற்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்கள் அனுபவித்திருப்பார்களா?
3. இட ஒதுக்கீடு : சமத்துவமற்ற சாதிய சமூகத்தில் அனைத்து மக்களும் சமத்துவம் பெற... கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு சட்டம் இயற்றி இந்தியாவில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் பலன் பெற செய்தார். குறிப்பாக காலங்காலமாக பிறப்பின் அடிப்படையில் அனைத்து வாழ்வாதாரங்களும் மறுக்கப்பட்ட OBC, SC & ST பிரிவினர் அதன் மூலம் அனைத்து துறைகளிலும் வாய்ப்புகள் பெற வழிவகை செய்துள்ளார். இத்தகைய ஒரு நிலைமை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வரைந்தளித்த இந்த அரசியல் சாசனம் வருவதற்கு முன்பிருந்த நம் முன்னோர்கள் பெற்றிருந்தனரா?
4. பெண் உரிமை : ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, ஆணுக்கு சமமான ஊதியம், பல்வேறு குழுக்களில் மகளிர்க்கான பிரதிநிதித்துவம் என பல சட்டங்களை இயற்றினார். பின்னாளில்... பெண் மறுமணம், பெண் வாரிசு உரிமை, விவாகரத்து உரிமை மற்றும் அதில் வாழ்வாதாரம் பெறும் உரிமை, சொத்துரிமை ஆக பெண் உரிமைக்கான முழுமையான சட்டத்தை அவர் கொண்டு வந்தபோது (Hindu code bill) அதனை அன்றைய பிற்போக்குவாதிகள் ஏற்காததால்... தன்னுடைய இந்திய சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அப்பழுக்கற்ற அரசியல் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள். பெண்களுக்கு இன்று கிடைத்திருக்கிற சமத்துவம், சுதந்திரம், முன்னேற்றம் இவற்றிற்கான காரணகர்த்தா டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தானே? அந்த மனித தெய்வத்தை எத்தனை பெண்கள் நினைத்துப்பார்க்கின்றனர்?
5. தொழிலாளர் நலம் : எட்டு மணி நேர வேலை, முத்தரப்பு பேச்சுவார்த்தை, அகவிலைப்படி, போனஸ், மருத்துவ காப்பீடு, வேலைவாய்ப்பு மையம், தொழிற்சங்க அங்கீகார உரிமை போன்றவைகளை சட்டமாக்கினார். இந்த உரிமைகள் பெற்றுத்தந்த அந்த மாபெரும் தலைவரை எத்தனை தொழிற்சங்கங்கள் நன்றியுடன் கொண்டாடுகின்றன?
6. பொருளாதாரம் : ரிசர்வ் வங்கி தோற்றுவிக்க காரணமாக இருந்தார், இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை பழைய ருபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து... புதியதாக அச்சடிக்கவேண்டும் என்பதை முன் மொழிந்தார். நோபல் பரிசுப்பெற்ற திரு.அம்ரித்யாசென் தம் "பொருளாதார தந்தை டாக்டர் அம்பேத்கர்" என போற்றி புகழ்ந்தார். அமெரிக்காவில் பொருளாதாரத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆசியர் என்கிற பெருமைக்குரியவர் பாபாசாகேப் அவர்களே!
7. தேசிய ஆணையங்கள் : தேர்தல் ஆணையம், மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம், தேசிய நதிநீர் ஆணையம், மின்சார ஆணையம் அமைந்திட திட்டம் தந்து சட்டம் இயற்றிட்ட திறமையான தீர்க்கதரிசி இவர் என்பது எத்தனைப்பேர் அறிவர்?
8. நதி நீர் இணைப்பு : நதிகள் தேசியமயம், நதி நீர் இணைப்பு ஆகிய திட்டங்களை முன் வைத்தார். அணைகள் மற்றும் பல்நோக்கு திட்டங்களை (பக்ராநங்கல், ஹீராகுட், தாமோதர் பள்ளதாக்கு) தோற்றுவித்தவர். இன்று நதிநீர் இணைப்பு, நீர்மேலாண்மை பேசும் எத்தனைப்பேருக்கு இவை தெரியும்?
9. தேசிய கொடியில் 'தம்ம சக்கரத்தை' இடம்பெற செய்ததன் மூலம் உலக அளவில் இந்தியா அகிம்சை தேசம் என்கிற நல்லெண்ணத்தை விதைத்த "மகத் சத்தியாகிரக" வீரர் இவர்.
10. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் ஆசியர்; குறுகிய காலத்தில் (ஆறு வருடங்கள்) MA, MSc, Ph.D, D.Sc, Bar-at-Law-Law & Course in Sanskrit என உலகின் மூன்று முன்ணணி பல்கலை கழகங்களில் பட்டங்கள் பெற்ற உலகின் உன்னத கல்வியாளர். D.Litt மற்றும் LL.D ஆகிய கௌரவ டாக்டர் பட்டங்களை உலகின் சிறந்த பல்கலைகழகங்கள் அவருக்களித்து பெருமை அடைந்திருக்கின்றன.
11."மக்கள் கல்வி கழகம்" என்ற பெயரில் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி ஏழை எளியோருக்கு கல்விசெல்வம் தந்த தன்னிகரில்லா தேசிய தலைவர்.
12. தொழிலாளர் பெயரில் இந்தியாவில் முதன் முதலில் "சுதந்திர தொழிலாளர் கட்சியை" தோற்றுவித்து உழைக்கும் தொழிலாளர்களுக்காக பல போராட்டங்கள் நடத்திய உத்தமர்.
13. பல அறிவுப்பூர்வமான புத்தகங்கள் எழுதிய பேரறிவாளர். நான்கு வார/மாத இதழ்களின் ஆசிரியர்.
14. இலண்டனில் நடந்த மூன்று வட்டமேஜை மாநாடுகளிலும் கலந்துக்கொண்ட இந்தியாவின் ஒப்பற்ற தேசிய தலைவர். இந்தியாவின் பிரச்சனைக்கு தீர்வு இந்த மூவரின் கைகளில் தான் உள்ளது என பிரிட்டிஷாரால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்: காந்தி ஜி, முகமது அலி ஜின்னா மற்றும் டாக்டர் அம்பேத்கர்.
15.The greatest Indian- னாக "Out Look" magazine, "CNN-IBN" & "History Channel" ஆகிய ஊடகங்கள் மூலம் மக்களாலும் அறிஞர்களாலும் தெரிவு செய்யப்பட்டவர்.
16. உலகின் ஆறு முன்ணணி அறிவாளிகளில் ஒருவராக பெருமைப்படுத்தப்படுபவர்.
17. இருநூற்றைம்பது ஆண்டுகளில் மனிதகுலத்திற்கு சிறப்பான பணியாற்றியவர்களில் முதன்மையானவராக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் அறிஞர்களால் அடையாளம் காணப்பட்டவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.
சிறந்த கல்வியாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் மீட்பராக, சிறந்த எழுத்தாளராக, பொருளாதார நிபுணராக, சட்டமேதையாக, பேராசிரியராக, இந்திய அரசியல் அமைப்பு சட்ட சிற்பியாக, பல்நோக்கு திட்டம் வகுத்த பொறியியல் வல்லுனராக, மனிதகுலத்தின் மிகப்பெரிய மனித உரிமை போராளியாக, பெண்ணுரிமை சிந்தனையாளராக, புத்தமத்தை இந்தியாவில் புனரமைத்த போதிசத்துவராக, "புத்தமும் அவர் தம்மமும்" வழங்கிய மெய்ஞானியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தன்னிகரில்லா தேசிய தலைவராக என பன்முக ஆளுமைக்கொண்ட மாமனிதர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள்.
இத்தகைய பெரும் சிறப்புக்களை பெற்ற பெருமகனார் உலகில் எவர் உளர்?
மக்கள் அனைவருக்குமான அந்த சமத்துவ தலைவரை வெறும் "தலித் தலைவர்" என சுருக்க நினைக்கும் சிறுமதியினர் என்றைக்கு அறியாமையிலிருந்து வெளிவந்து தங்களுக்கு ஒளி தரும் இந்த அப்பழுக்கற்ற சூரியனை உணரப்போகிறார்கள்.
இந்த பொன்னான நாளில் இந்திய குடியரசு தந்தை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு நன்றி செலுத்துவோம்.
HAPPY Dr.Babasaheb Ambedkar Jayanthi!
LONG LIVE HIS GLORIOUS LEGACY!
Jai Bhim. Jai Bharat!
ஜெய் பீம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக