திங்கள், 26 ஆகஸ்ட், 2019

இன்முகம் காட்டு.......அதுவே போதும்


இன்முகம் காட்டு.......அதுவே போதும்

உடலை மறைக்க ஆடை வேண்டும்
மாண்புடன் மானம் காத்திட வேண்டும்
பகட்டாய் ஆடை எதற்காய் வேண்டும் ?
பாதி உடலை மூட வேண்டும் ?

நாகரீகம் அறிந்த நாமும்
வரைமுறை மீறல் தவறேயாகும்
அரைகுறையாக அணிவதெல்லாம்
ஆபாசம் எனத் தெரிய வேண்டும்.

ஆளும் பாதி ஆடை பாதி
நல்ல பொருளில் சொல்லிச்சென்றார்.
இன்றைய மனிதர் அதனைத் தவறாய்
புரிந்து கொண்டு உலவுகின்றார்

அங்கம் எதற்காய் வெளியே வேண்டும்
அடுத்தவர் கண்ணை உறுத்த வேண்டும்
அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும்
அன்புடன் வணங்கத் தோன்ற வேண்டும்.

நாகரீகம் கூடுந்தோறும்
நல்ல பண்புகள் பெருக வேண்டும்
நல்ல நிலையில் இருக்கும் போது
நலிந்த ஆடைகள் எதற்காய் வேண்டும் ?


இடம் பொருள் ஏவல் அறிய வேண்டும்
இங்கு எதற்காய் கந்தல் வேண்டும்
இது சரிதானா சிந்தை வேண்டும்
இல்லையேல் காட்டில் வசிக்க வேண்டும்.

இலைமறை இருப்பு காய்க்கு அழகு
முழுவதும் மூட மனிதனுக்கு அழகு
காண்பவர் மட்டும் கண்டால் அழகு
கடைவிரிப்பதிலே என்ன அழகு ?

சுதந்திரம் என்பதைப் புரிதல் வேண்டும்
சுயசிந்தனையும் பெறுதல் நன்றே.
சுற்றித் திரியும் விலங்கும் அணியச்
சிதறும் வண்ண உடை தந்தானே.

நாடுகள் தோறும் ஆடைகள் மாறும்
தட்பவெட்ப நிலைகளும் மாறும்
புலியைக் கண்ட பூனையென நீ
பொருந்தாவுடைகள் அணிவது வேடம்.

தாய்த் திருநாட்டின் மானத்தை உந்தன்
நடை உடை செய்கைகள் தீர்மானிககும்.
பொறுப்பை உணர்ந்து புனைவாயானால்
நாடும் வீடும் நற்பெயர் எடுக்கும்.

நன்றிகளும்
பிரியங்களும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக