இந்திய ஜனாதிபதியும் பார்ப்பனீயமும்
*************************************************************
"பட்டியலினத்தைச் சார்ந்த ஜனாதிபதிக்கு கோவிலுள் நுழைய அனுமதி மறுப்பு" எனும் செய்திக்கு உடனே உணர்ச்சிவயப்பட வேண்டாம். "ஏன் இது நிகழ்கிறது?" என்று ஆராய வேண்டும். ஒரு இஸ்லாமியருக்கும், கிருத்துவருக்கும் பார்ப்பனீய கோவிலில் என்ன உரிமையோ அதே உரிமைதான் பட்டியலினத்தவருக்கும் என்று பாபாசாகேப் கூறுகிறார்.
நால்வருணத்தில், பட்டியலினத்தாருக்கு இடமில்லை. "outcastes" அதாவது ஜாதிய கட்டமைப்புக்குள் வராதவர்கள் நாம். "avarnas" அதாவது வர்ணமற்றவர்கள்.
"பட்டியலினம்" என்ற வகைப்படுத்தல் 1911ல் நடந்தேறியது. இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, இஸ்லாமியர், கிருத்துவர், சீக்கியர், பார்சி என்று தெளிவாக வகைப்படுத்த முடிந்தது. அதாவது, குரான் தனை தன் புனித நூலாக ஏற்றவர் இஸ்லாமியர், விவிலியத்தை ஏற்றவர் கிருத்துவர் என்று. ஆனால் அவர்களைக் கடந்து ஒரு பெரும் மக்கள் தொகை, அவர்களுக்கு எந்தவித பொது அடையாளமோ அல்லது புனித நூலோ இல்லாமல், ஜாதியின் அடிப்படையில் இருந்தனர். அத்தகையோரில், ஒரு பெரும் பகுதியினர் "தீண்டத்தகாதவர்" என்று கூறப்பட்டு அத்தகைய ஜாதிய சமூகத்தில் இருந்து பிரித்து வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களையும் ஒரு பொது அடையாளத்தில் குறிப்பிட, பத்து நிபந்தனைகள் மூலம் தொகுக்கப்பட முடிவெடுக்கப்பட்டது. அவை, பார்ப்பன ஆதிக்கத்தை நிராகரித்தவர்கள்,பசுவை புனிதமென கருதாதவர்கள், என்பது போன்றவைகளாகும். அதனடிப்படையில் பட்டியலின மக்கள் அடையாளப்படுத்தப்பட்டு தொகுக்கப்பட்டனர். அவர்களே பட்டியலினம் ஆகும்.
இதில் முக்கியமாக கருத வேண்டியது, பட்டியலின மக்கள், பார்ப்பன ஆதிக்கத்தை நிராகரித்தவர்கள் என்பதாகும். அதாவது, பார்ப்பனீயத்தின் நால்வருணத்தில், முதல் வருணமான, பார்ப்பனர்களை நிராகரித்தவர்கள் என்பது பொருள். இதன் படி, ஒரு இஸ்லாமியர், கிருத்துவருக்கும் பார்ப்பனருக்கும் என்ன ஒரு தொடர்போ அதேத் தொடர்பு தான் பட்டியலினத்தாருக்கும், பார்ப்பனருக்கும்.
"இந்து" என்ற அடையாளத்திற்கு நான்கு வருணத்திற்குள் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு வரை, "இந்து" என்ற அடையாளமோ, அவர்களுக்கென ஒரு பொது புனித நூலோ கிடையாது. பார்ப்பனீயம் என்பது வெறும் ஜாதிகளின் தொகுப்பாக மட்டுமே இருந்தது, இப்போதும் அப்படித்தான் இருக்கின்றது. ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னரே தங்களுக்கு "மதம்" என்ற அடையாளப்படுத்தலும், "புனித நூல்" தேவை என்பதையும் அறிந்தவர்கள்,அதுவரை "இந்து" என்பது நிலம் சார்ந்த ஒரு குறியீட்டுச் சொல்லாக இருந்ததை "மதம்" என்று திரித்தனர். புனித நூல் என்று "கீதை" தனை அறிவித்தனர்.
அத்தகைய கீதையில், அந்தக் கீதையை கூறியதாக புனையப்பட்ட "கிருஷ்னன்" நான்கு வருணங்களும் தன்னாலேயே படைக்கப்பட்டது,அவற்றைத் தன்னாலும் அழிக்க முடியாது என்கின்றது.
மேலும், பார்ப்பனர்களை பூதேவர்கள் என்கின்றன பார்ப்பனீய படைப்புகள். அத்தகைய கட்டளையை ஏற்றவர்கள், அதன் நான்கு வருணத்திற்குள் இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
வரலாற்றடிப்படையில், பார்ப்பனர்களுக்கும், பட்டியலினத்திற்கும் இடையேயான முரணை அறிய முடியும். பார்ப்பனர்கள் பட்டியலின மக்களின் சேரி பகுதிக்குள் வர நேர்ந்தால் அவர்களைத் துரதியடிக்கும் ஒரு பழக்கம் தமிழ்நாடு, கர்நாடகா என்று பல மாநிலங்களில் வெள்ளையரின் வருகைக்கு முன்பு வரை கூட நீடித்திருக்கின்றது. இதனை பண்டிதரும், பாபாசாகேப்பும் பதிவு செய்துள்ளனர்.
ஆக, பார்ப்பன ஆதிக்கத்தை நிராகரித்த பட்டியலின மக்கள் "இந்து"க்கள் அல்ல என்பது நிரூபணமாயிற்று.
அவர்கள் இஸ்லாமிய, கிருத்துவ அல்லது "இந்து"க்கள் அல்ல என்றால் யார் அவர்கள்?
இந்தக் கேள்விக்கான விடையை பண்டிதரும், பாபாசாகேப்பும் தெளிவாய் முன்வைக்கின்றனர்.
"இந்தியாவின் வரலாறு என்பது, பௌத்தத்திற்கும், பார்ப்பனியத்திற்கும் இடையேயான போராட்டம்" என்கிறார் பாபாசாகேப்.
சித்தார்த்த கௌதமரின் காலத்தின் போது 63 தத்துவங்கள் இம்மண்ணில் மக்களால் கடைபிடிக்கப்பட்டது என்றறிய முடிகிறது.
ரோகிணியாற்று நீர் பங்கீட்டுப் பிரச்சினையில் கோலியருக்கெதிராய் போரிடவேண்டும் என்ற சாக்கியரின் முடிவை எதிர்த்த சித்தார்த்தர் "பகையை பகையால் வெல்ல முடியாது என்பதை அறிவதே தர்மம்" என்றுரைக்கின்றார். நீர்ப்பங்கீட்டிற்கு ஒரு ஆணையம் அல்லது வாரியம் அமைக்கலாம் என்று அவர் முன்வைத்த கருத்து பெரும்பாலானோரால் நிராகரிக்கப்பட்டு போர் தொடுப்பது என்பதை தேர்ந்தேடுக்கின்றனர் சாக்கியர்கள். தன் முடிவை மாற்றிக்கொள்ளாத சித்தார்த்த கௌதமர் பரிவராஜ்யம் மேற்கொள்கிறார். இது ஒரு வகையில் "self imposed punishment".
அவ்வாறு பரிவராஜ்யம் மேற்கொண்டவர் அப்போதிருந்த தத்துவங்களைக் கடைபிடித்து அவற்றின் போதாமையை உணர்ந்து தம்மத்தை கண்டறிகிறார். புத்தர் ஆகிறார். அவரின் காலத்திற்குப் பின்னர் புத்தரின் உரைகள் "திரிபீடகம்" என்று தொகுக்கப்படுகிறது. அதுவரை இம்மண்ணில் பார்ப்பனீயம் ஒரு சிறுபான்மை தத்துவமாகவே இருந்தது. அதற்கான வேதங்கள் போன்றவை தொகுக்கப்படவோ அல்லது கட்டமைக்கப்படவோ இல்லையெனலாம். திரிபீடகத்தை ஒட்டி வேதங்கள் தொகுக்கப்படுகின்றன. பின்னர், அதர்வண வேதம் என்ற நான்காவது வேதம் தொகுக்கப்படுகிறது. அது பௌத்தத்தின் பகுத்தறிவுக்கு நேரெதிராக "black magic" அதாவது ஏமாற்று வித்தைகளின் தொகுப்பாக அமைந்தது.
புத்தரின் காலத்திற்குப் பின்னர் மௌரியப் பேரரசரான அசோகர், கலிங்கப் போரின் தாக்கத்தால் பௌத்தமேற்று அதனை பரப்புகிறார். அவருடைய காலத்தில் அப்போதறியப்பட் எல்லா நிலப்பகுதிகளுக்கும் பௌத்தம் பரப்பப்பட்டது. பார்ப்பனர்களின் பித்தலாட்டங்கள் தடைசெய்யப்பட்டு மக்களை ஏமாற்றுவது தடுக்கப்பட்டது.
அசோகரின் பேரன் பிருகுதத்த மௌரியனின் படைத்தளபதியான புஷ்யமித்ர சுங்கன் எனும் பார்ப்பனன் பிருகுதத்தரைக் கொன்று சுங்கப்பேரரசை நிறுவினான். அதன் பின்னர் "சுமதி பார்கவா"வால் மனுஸ்ம்ரிதி இயற்றப்பட்டது.
பௌத்தர்களை தாக்கியழிக்க ஆரம்பித்தனர். அசோகரின், புத்தரின், பௌத்தத்தின் தாக்கத்தை குறைக்க, இதிகாசங்கள், புராணங்கள் இயற்றப்பட்டன. பஞ்சசீலம், எண்மார்க்கம் என்ற நல்லொழுக்கப் பாதைகளை புறந்தள்ளி ஒழுக்கமற்ற தன்மையை விதைத்தன.
அசோகரின் கலிங்கப்போர் தனை திரித்து மஹாபாரதம் இயற்றப்பட்டது. அவரின் பௌத்தமேற்புதளம் கீதையின் தொடக்கமாக்கப்பட்டது. வெற்றிபெற்ற அசோகரின் குற்ற உணர்வும் அவரின் தம்மமேற்பும் நிராகரிப்பட்டு, கீதை இயற்றப்பட்டது.
காலவோட்டத்தில் பௌத்தம் தொடர்தாக்குதல்களால் வீழ்த்தப்பட்டு பௌத்தர்கள் தங்கள் அடையாளத்தை மறக்கும்படி ஆனது.
ஆனாலும், தலையே போனாலும் பௌத்தமே எங்கள் கொள்கை என்றிருந்த மக்களை ஊருக்கு வெளியேதள்ளினர். அவர்களின் விகார்கள் கோவில்களாக மாற்றப்பட்டன. அவர்களின் அடையாளங்கள் பார்ப்பன மயமாக்கப்பட்டன.
மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி அதை உண்மையென நிறுவினர்.
திருப்பதி, சபரிமலை போன்றவை பௌத்த விகார்கள், அடையாளங்கள்.
இதுதான் பட்டியலின மக்களின் வரலாறு.
எந்த ஒரு இஸ்லாமியரோ, கிருத்துவரோ பார்ப்பனீய கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்று போராடுவதில்லை. ஆனால், பெரும்பாலான பட்டியலின ஆளுமைகள் ஒத்துக்கொண்ட ஒரு விஷயம் "பட்டியலின மக்கள் இந்துக்கள் அல்ல" என்பதாகும், மேலும் பாபாசாகேப், பண்டிதர் ஆகியோரால் தெள்ளத்தெளிவாக நாம் "பௌத்தர்கள்" என்று கூறப்பட்டும் நாம் ஏன் இன்னமும் "கோவில் நுழைவு போராட்டம்" என்று நமக்கு சொந்தமில்லாத ஒரு விஷயத்துக்காக போராடுகிறோம்? நம் வரலாற்றை நாம் ஏன் அறிந்துகொள்ளவோ அல்லது அதன் படி நடக்கவோ முனைவதில்லை? சிந்திப்போமா?
#பட்டியலினம் #பௌத்தம் #பார்ப்பனீயம் #பாபாசாகேப் #அம்பேத்கர் #பண்டிதர் #அயோத்திதாசர் #பௌத்தப்பேரரசர் #அசோகர் #புத்தர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக