ஞாயிறு, 27 அக்டோபர், 2019

தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்த ஆழ்துளை கிணறு விபத்துகள்...!


தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்த ஆழ்துளை கிணறு விபத்துகள்...!

ஆழ்துளை கிணறுகள் முறையாக மூடப்படாத காரணத்தால், அதில் குழந்தைகள் தவறி விழுவது தொடர்கதையாகி வருகிறது. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

➤2009 பிப்ரவரி 22-ம் தேதி ஆண்டிப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மாயி, 30 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டும் உயிரிந்தான்.

➤அதே ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் 3 வயது சிறுவன் கோபிநாத் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து சடலாமாக மீட்கப்பட்டான்.

➤2011 செப்டம்பர் 8-ஆம் தேதி நெல்லை மாவட்டம் கைலாசநாதபுரத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுதர்ஷன் உயிரிழந்தான்.

➤2012 அக்டோபர் ஒன்றாம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே 50 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் குணா, உயிருடன் மீட்கப்பட்டான்.

➤2013 ஏப்ரல் 28-ம் தேதி கரூர் அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

➤அதே ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புலவன்பாடி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுமி தேவி உயிரிழந்தார்.

➤2014 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி விழுப்புரம் அருகே பல்லகசேரி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த மதுமிதா, பல மணி போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மறுதினம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

➤அதே ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 3வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.

➤2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை ரோபோ இயந்திரம் மூலம் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

➤2015ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே 350 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

➤2018ம் ஆண்டு நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் 15 அடி ஆழத்தில் சிக்கிய 2 வயது சிறுவன், உயிருடன் மீட்கப்பட்டார்.

தற்போது குழந்தை சுஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து, குழந்தையை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
Thanks News7

#Surjith #சுஜித்

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144


தமிழரின் வீரத்திருநாள் தீபாவளி ..


தமிழரின் வீரத்திருநாள் தீபாவளி ..

1...அரக்கன் நரகாசூரனை மகாவிஷ்ணு கொன்ற நாள் தான் தீபாவளி என்று கடந்த ஐநூறு ஆண்டுகளாக தமிழ் மண்ணில் நம்பச்செய்யப்பட்டு  உள்ளது. வட இந்தியாவில், காட்டுக்குச் சென்று இருந்த ராமர் நாடு திரும்பிய நாள்தான் தீபாவளி என்று கூறப்படுகிறது. இது தமிழர் வரலாற்றுக்கு எதிரானது. தொடர்ந்து படியுங்கள்.....

மாமன்னர் ராஜராஜ சோழனின் புதல்வர் ரஜேந்திர சோழன்.  மிக அதிக நிலபரப்ைப ஆண்ட தமிழ் மன்னர் மட்டுமல்ல; இந்திய மன்னரும் இவரே. இந்தியா மட்டுமின்றி இலங்கை, இன்றைய மலேசியா ( கடாரம் ) சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இவருடைய ஆட்சியில் இருந்தன. தஞ்சாவூரில் இருந்து பெரும்படையை திரட்டிக் கொண்டு இவர் ஆந்திரா, ஒரிசா, வங்கம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியே படை நடத்திச் சென்று இமயமலையை அடைந்தார்.

ராஜேந்திர சோழன் இமயம் வென்று திரும்புகையில், கங்கையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தார். பிறகுதான் கங்கையை வென்றதன் அடையாளமாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலைநகரத்தை உருவாக்கினார். சோழகங்கம் என்ற ஏரியை அமைத்தார். இவை இன்றும் உள்ளன. சோழகங்கம் ஏரியில் குளித்ததை நினைவுகூரும் வகையில்தான், இன்றும் கூட தீபாவளியன்று கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று சாதாரணமாகவே வீடுகளில் கேட்கப்படுகிறது.

பெரும் வெற்றியுடன் தஞ்சாவூருக்கு 1023 ஆம் ஆண்டு திரும்பிய ராஜந்திர சோழனுக்கு கொள்ளிடம் ஆற்றுக் கரையில் மிகப் பெரிய வரவேற்பு தரப்பட்டது. குறுநில மன்னர்கள், அமைச்சர்கள்,  பொதுமக்கள், கலைஞர்கள் என பல லட்சம் பேர் திரண்டு ராஜந்திர சோழனுக்கு வரவேற்பு தந்தனர். ராஜேந்திரன் வெற்றியுடன் திரும்பியதற்கான கல்வெட்டு கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில்
திருலோக்கி கிராமத்தில் இப்போதும் உள்ளது. கொள்ளிடம் ஆற்றுக் கரையில் ஐப்பசி மாத அமாவாசை நாளன்று காலை இந்த வரவேற்பு தரப்பட்டது. வரவேற்புக்கு நேரடியாக செல்ல முடியாதவர்கள் வீடுகளில் நீராடி, புத்தாடை அணிந்து, தீப ஒளிகளை ஏற்றி, இனிப்புச் செய்து, மாமிசம் சமைத்து கொண்டாடினார்கள். அன்று முதல் ஒவ்வொரு ஐப்பசி மாதமும் அமாவாசை நாள் அதிகாலையில் ராஜேந்திரனின் வெற்றித் திருநாள் வீடுகளில் தீப ஒளி ஏற்றிக் கொண்டாடப்பட்டு வந்தது.

பின்னர் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட விஜயநகர மன்னர்கள் , திருமலை நாயக்கர் ஆகியோர் தமி்ழ்நாட்டை (கி.பி 1500 வாக்கில்) ஆண்டபோது பல்வேறு தமிழ் மரபுகள் மாற்றி அமைக்கப்பட்டன. கோயில் உள்ள ஊர்கள் முன்பு திரு சேர்க்கப்பட்டது. தஞ்சை பெரு உடையார் கோயில் பிரகதீஸ்வரர் ஆலயம் என்று ஆனது. திருவரங்கம் ஸ்ரீரங்கம் என மாற்றப்பட்டது. தில்லை நகரம் சிதம்பரம் என்றும் திருமுதுகுன்றம் என்பது விருதாசலம் என்று பெயர் மாற்றப்பட்டதும் விஜயநகர மன்னர்களின் ஆட்சியில்தான். மேலும் விஜய நகர மன்னர்களை அவரது ஆளுகைக்கு உட்பட்ட குறுநில மன்னர்கள் சந்தித்து ஆண்டுக்கு ஒரு முறை கப்பம் செலுத்த வேண்டும் . அன்றைய தினம் விஜயதசமி  என்ற திருவிழாவாக உருவாக்கப்பட்டது. அவர்களுக்கு போட்டியாக இன்னொரு வெற்றித்திரு நாள் இருக்கக்கூடாது என்று கருதினார்கள். இதனால் அதுவரை ராேஜந்திரசோழனின் வெற்றித் திருநாளாக கொண்டாடப்பட்டு வந்த தீப ஒளி விழா,  நரகாசூரனை மகாவிஷ்ணு வதம் செய்த நாள் என்ற புதுக்கதை உருவாக்கப்பட்டது. ரஜேந்திர சோழன் வெற்றிப் பயணம் மறைக்கப்பட்டது.

எனவே, தீபாவளி என்பது வடஇந்தியரை தமிழ் மன்னன் கொண்ட வெற்றியின் அடையாளமே தவிர நரகாசூரன் வதை செய்யப்பட்ட நாள் அல்ல, காடு சென்ற ராமன் நாடு திரும்பிய நாளும் அல்ல .

தொலைந்துபோன_தீபாவளிகள்


❤சிறுவயது தீபாவளிகள் ❤

⛱தொலைந்துபோன_தீபாவளிகள்⛱

பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் ஊருக்கு ஊர் மாறுபட்டாலும் இந்தியா முழுவதும் கொண்டாடும் பண்டிகை தீபாவளி. மற்ற பண்டிகைகள் விதவிதமாய் கொண்டாடினாலும் தீபாவளியை மட்டும் பட்டாசு வெடித்து கொண்டாடுவதுதான் முறையும் மகிழ்வும் கூட. குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் கொஞ்சம் சவாலும் கொஞ்சம் பயமும் கலந்தே இந்த பண்டிகை கடந்து போகும். பெரிய அளவில் செலவு வைக்கும் பண்டிகைதான் ஆனாலும் நினைவுகளில் எப்போதும் பொழிந்துகொண்டிருக்கும் ஒரு தீராத மத்தாப்பைப்போல வெளிச்சங்களால் நிரம்பியவை.


திரியைக்கிள்ளி தீ வைத்தவுடன் சத்தமிட்டு வெடிக்கும் வெடியைப்போல தீபாவளி என்ற சொல்லுக்குள் தான் எத்தனை வெடிகள் எத்தனை சத்தங்கள் புதைந்து கிடக்கின்றன. எல்லோருக்கும் சொல்லிக்கொள்ள பல கதைகளையும், நினைத்து நெக்குருக பல நினைவுகளையும் சில தீபாவளிகள் கொடுத்திருக்கும். வளர்ந்து படித்து முடித்து பட்டம்வாங்கி கல்யாணமும் முடித்து குழந்தை பேரன் பேத்திகளையும் பார்த்த பின்பு நினைத்துப்பார்க்கும் தீபாவளிகளை விட பால்யத்தின் பரணில் வெடிக்காத பட்டாசுகளைப்போல தப்பிவிட்ட தீபாவளிகள் தான் கைகளில் ஒட்டிக்கொண்ட மருந்துகளைப்போல பிசுபிசுப்பாய் எப்போதும் நினைவுகளில் இருந்து அகலாதவை.


அவரவர் கொண்டாடி, சந்தோஷித்து, திளைத்து, இழந்து, களைத்து, மறந்து, வெறுத்து ஒதுக்கிய பண்டிகைகளும் , இப்படி கொண்டாட வேண்டுமென  பலநாட்கள் திட்டமிட்டு எல்லாம் வாங்கி குவித்து எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த நாளுக்குமுன் எதிர்பாராமல் உறவுகளில் ஒருவர் இறந்துவிட அத்தனை கனவுகளும் நொடியில் உடைந்து துக்கம் வந்து அப்பிக்கொண்ட பண்டிகைகளையும் அவரவர்களால் தான் சொல்லிக்கொள்ளவோ நினைத்துப்பார்க்கவோ முடிகிறது. அப்படி சொல்லிக்கொள்ள பத்தாயிரம் வாலா போல என்னிடமும் பல கதைகள் நீண்டுகொண்டே போனாலும் கேட்பதற்கு காதுகள் இல்லாத காரணத்தால் நினைத்துப்பார்க்கிறேன்.


நிச்சயமாய்… தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த வயதுகளில் பட்டாசு சத்தம் கேட்டு அதைவிட சத்தமாய் அழவோ, அல்லது அந்த திடீர் சத்தத்தில் திடுக்கிட்டு எழவோ செய்திருப்பேன். ஆனால் இது தீபாவளி , இது பட்டாசு, இதை இப்படி வெடிக்கணும், இந்த மத்தாப்பை இப்படி பிடிக்கணும் என தெரிந்து கொண்ட வயதிலிருந்து இன்று வரை எத்தனையோ தீபாவளிகளைக் கடந்துவந்த பின்னும் அந்த சிறுவயதின் கொண்டாட்டக்கனவுகள் இப்போதும் துளிர்க்கின்றன. பத்த வெச்ச நெலபுருசு போல பொங்கி மேலெழும்புகின்றன சந்தோசங்கள்.


இப்போது காலம் வளர்ந்து நேரம் சுருங்கிவிட்ட காரணங்களால் சின்ன சின்ன குழந்தைகளைக்கூட துணிக்கடைகளுக்கு அழைத்துப்போய் அவர்களுக்கு பிடித்ததை வாங்கி போட்டுப்பார்த்து ரெடிமேடாக எடுத்து வந்துவிடுகிறோம். ஆனால் எங்கள் பால்யத்தில் அந்த வாய்ப்புகள் இல்லை ஆனால் அதைவிட அழகான, வார்த்தைகளால் உணர முடியாத, சொல்லிப் புரியவைத்துவிட முடியாத பல சந்தோசங்கள் கொட்டிக்கிடந்தன. அப்போதெல்லாம் இத்தனை ரெடிமேடு துணிகள் கிடையாது, துணி எடுத்துதான் தைக்க வேண்டும். எங்களிடம் எதுவும் கேட்காமலேயே அவர்களாகவே துணிகளை எடுத்துவந்துவிடுவார்கள். எனக்கும்  தம்பிகும் ..ஒரே நிறத்தால் பேண்ட்டும் வெவ்வேறு நிறத்தில் சட்டை துணியும் வாங்கிவருவார்கள். அக்கா ..தைப்பதென்றால் பட்டுப்பாவாடை-சட்டை, ரெடிமேடெனில் வெல்வெட் ஆடை. ஒருமுறை எங்கள் இருவருக்கும் நல்ல அடர்மஞ்சள் நிறத்தில் பேண்ட் துணியும் எனக்கு சிகப்புகலர் சட்டை துணி அண்ணனுக்கு பச்சைகலர் சட்டை துணியும் வாங்கிவந்தார்கள். அதைக்கொண்டு போய் டெய்லரிடம் கொடுத்து அளவு கொடுக்க நின்ற போது அவர் மேலும் கீழும் ஒரு மாதிரியாய் பார்த்துவிட்டு “தீபாவளியே உங்களுக்குதான்டா" என்றார், அந்த வயதில் அந்த வார்த்தைகள் வெட்கத்தை மட்டுமே கொடுத்தன. இப்போது அந்த காம்பினேஷனில் உடை அணிந்தால் எப்படி இருக்குமென நினைத்துப்பார்த்தால் பல மாடுகளும் சில மனிதர்களும் தெறித்து ஓடும் காட்சி அப்பட்டமாய் கண்களுக்குள் வந்து போகிறது.


துணியை தைக்க கொடுத்துவிட்டு வந்த அடுத்த நாளிலிருந்து நினைப்பெல்லாம் டெய்லரிடமே இருக்கும். "இந்நேரம் நம்ம துணியை எடுத்திருப்பாரா? அண்ணனுக்கு முதல்ல தெப்பாரா இல்ல எனக்கா? ஐயையோ சட்டைக்கு என்ன கலர் பட்டன் வைக்கணும்னு சொல்ல மறந்துட்டமே, ஒருவேளை தீபாவளிக்குள்ள சட்டை தைக்கலைன்னா நாம என்ன பண்றது?" என்னும் விதவிதமான கேள்விகள் சங்கு சக்கரம்போல சுழன்றுகொண்டே இருக்கும். ஒருவழியாய் துணிகள் தைத்து வீட்டுக்கு வந்ததும் போட்டுப்பார்ப்போம், யாராவது "உன்னுடையதை விட அண்ணனுது நல்லா இருக்குன்னு" சொல்லிட்டா வரும் பாருங்க ஒரு கோவம் வீடு ரணகளமாகும் கடைசியில் அடிவாங்கி என் உடம்பு ரணமாகும்.


வழியும் எண்ணெய் காதுக்குள் குறுகுறுக்க, தலையில் தேய்த்த அரப்பு வாய்க்குள் புகுந்து கசக்க குளித்துவிட்டு வந்து போட்ட புதுத்துணியை எல்லோர்கிட்டையும் காட்டனும்ல, ஒவ்வொரு நண்பர்கள் வீடு சொந்தக்கார வீடாக போய் காட்டிவிட்டு அவர்களின் வாசலில் ஒரு பட்டாசைப் பற்றவைத்துவிட்டு, அவர்கள் கொடுக்கும் இனிப்பை மென்றுகொண்டே  நோம்பிக்காசு கொடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு வீட்டுக்கு வந்தால் குளித்துவிட்டு வந்திருக்கும் பாட்டி நாங்கள் கேட்காமலேயே தன் சுருக்குப்பையிலிருந்து "நோம்பிக்காசு" என்னும் பெயரில் எடுத்து நீட்டும் ஐந்துரூபாயோ பத்துரூபாயோ இனி எத்தனை ஜென்மமெடுத்தாலும் சம்பாதித்துவிட முடியாதவை. அந்த தீபாவளிகள் தான் புகையை விட அதிகமாய் நினைவுகளையும் சத்தங்களைவிட அதிகமாய் சந்தோஷங்களையும் நிரப்பிவைத்தவை. தனித்தனி குடும்பங்களாய் வாழ்வதை பெருமையாய்க் கூறிக்கொள்ளும் இன்றைய வாழ்வில் கைப்பேசியில் வந்துவிலும் ஜிப் பைல்களில் வெடிக்கின்றன டெக்கனாலஜி பட்டாசுகள்.

பெரிய பெரிய ஷாப்பிங் மால்களுக்கு போகும்போது நமக்கு வேண்டியவைகளை எடுத்துப்போட ஒரு பிளாஸ்டிக் கூடை வைத்திருப்பார்களே அப்படியான ஒரு கூடை இப்போதும் எங்கள் வீட்டில் இருக்கிறது. தீபாவளிக்கு முந்தைய நாள் அந்தக்கூடை முழுவதும் பட்டாசு வந்துவிடும். சிறுவயது என்பதால் வெடிகள் கொஞ்சமாகத்தான் இருக்கும். அண்ணனும் நானும் வெடிகளை பிரித்துக்கொண்டு வெடியில்லாத பட்டாசுகளையும் மூன்றாக பிரித்து அக்காக்கென ஒரு பங்கு கொடுத்துவிடுவோம். அவள் வெடிக்க பயப்படும் நேரங்களில் அதையும் நாங்களே வெடிக்கவும் செய்வோம். துப்பாக்கிகளில் சுருள் கேப்பை போட்டு இப்படி வெடிக்கவேண்டுமென சொல்லித்தரும் சாக்கில் அதையும் பெரும்பாலும் நானே வெடித்துவிடுவேன். முக்கால்வாசியை தீபாவளிக்கு முந்தைய இரவே வெடித்துவிட்டு என் பங்கை தீபாவளி அன்று இரவு எடுத்து அவர்களுக்கு தராமல் வெடித்து அவர்களை வெறுப்பேத்துவதில் வரும் ஆனந்தம் இப்போது எத்தனை கோடிக்கு பட்டாசு வாங்கி வெடித்தாலும் கிடைக்காத ஒன்று.

சரமாய் வாங்கிவரும் பட்டாசுகளை தனித்தனியாய் உதிர்த்து திரிகளைக்கிள்ளி வைத்துக்கொண்டு கையில் பிடித்து தூக்கிப்போடும் ஊசிப்பட்டாசுகள் கொடுத்த உற்சாகத்தை இப்போது வெடிக்கும் பத்தாயிரம் வாலாக்கள் , ஐயாயிரம் வாலாக்கள் கொடுத்துவிடுவதில்லை. மதிய நேரத்தில் தெருத்தெருவாய் சுற்றி வெடிக்காத பட்டாசுகளைப் பொறுக்கிவந்து அதிலுள்ள மருந்துகளை மட்டும் தனியே சேர்த்து ஒரு காகிதத்தின் நடுவில் கொட்டி நாலு பக்கங்களிலும் நெருப்பு வைத்து அந்த நெருப்பு மருந்தின் கிட்டே வரும்போது தொற்றிக்கொள்ளுமொரு பரபரப்பு, மருந்தில் நெருப்பு பட்டவுடன் பொங்கிவரும் "புஷ்வானம்" என இந்த தலைமுறைக் குழந்தைகள் நெருங்கிவிடாத ஒரு சந்தோசத்தின் உச்சியில்தான் மிதந்தன எங்கள் தீபாவளிகள். பட்டாசு வாங்க வசதியில்லாத குழந்தைகள் ஏக்கத்தோடு பார்க்கும் தருணங்களில் அவர்களிடம் கொடுக்கும் சில கொள்ளு பட்டாசுகளிலும் சில மத்தாப்புகளிலும் எங்களைவிட அவர்கள் அதிகமான சந்தோசத்தை உணர்வார்கள். ஒருகாலத்தில் நாங்களும் பட்டாசுகள் வாங்க முடியாமல் தூரத்தில் வெடிப்பவர்களைப் வேடிக்கை பார்த்து சந்தோசப்பட்டுக்கொண்ட தீபாவளிகளும் உண்டு. மிச்சமிருக்கும் பட்டாசுகளை கார்த்திகை தீபத்தன்று வெடிக்க வேண்டுமென எடுத்து பத்திரப்படுத்திவிட்டு கார்த்திகை தீபம் எப்போ எப்போ என கேட்டு நச்சரித்த நாட்களின் நினைவுகள் பாம்பு பட்டாசு போல சுருள் சுருளாய் பொங்கிவருகிறது. சிறிய அணுகுண்டு ஒன்றை பற்றவைத்துவிட்டு சத்தத்திலிருந்து தப்பிக்க காது பொத்தியபோது ஊதுபத்தியால் சுட்டுக்கொண்டது , பட்டாசிலிருந்து தெரித்துவிழுந்த நெருப்புத்துண்டு புதுசட்டைக்குள் புகுந்து வயித்தில் காயமானது, எங்கோ பார்த்துக்கொண்டு பிடித்த மத்தாப்பின் மருந்து எரிந்து முடிந்து கையைச்சுட்டு கொப்பளமானது, கல்லுவெடியை வாங்கிக்கொண்டு வெடிக்கத்தெரியாமல் வெடித்து சிதறிய கற்களால் சுரீரென அடிவாங்கியதென எத்தனை எத்தனை நினைவுகள் பிஜிலி வெடிகளைப்போல விட்டு விட்டு வெடிக்கின்றன.



தீபாவளி முடிந்து பள்ளிக்கூடம் திறக்கும் நாளன்று தீபாவளிக்கு எடுத்த புதுத்துணியை போட்டுவரலாம் என கொடுத்திருக்கும் சிறப்பு சலுகைக்காகவே  இன்னுமொரு பண்டிகைபோல அந்தநாள் இனிப்பாய் விடியும். தெருவெங்கும் புத்தகப்பை சுமந்துபோகும் பள்ளிக்கூட பிள்ளைகளை அந்த ஒருநாள் மட்டுமே கலர் துணிகளில் பார்க்கமுடியும். அடுத்த தீபாவளி வரும் வரை  கல்யாணம், காதுகுத்து, கோவில் பண்டிகை என காத்திருக்கும் அத்தனை நல்ல விசேஷங்களுக்கும் அந்த புது துணிதான். அதைப்போட்டுக்கொண்டு உருண்டு, பெரண்டு, அழுக்காக்கி, கரையாக்கி அந்த ஒற்றை புதுத்துணியோடு வருடம் முழுவதும் விடியும் இரவுகள் இனி எந்த விடியலிலும் கிடைக்காது.



தீபாவளிக்கு இரண்டுநாள் முன்பே எல்லோருக்கும் சேர்த்து பலகாரங்களும், முறுக்குகளும் சுடும் அத்தைகளையும், சித்திகளையும் இப்போது பார்க்கமுடியவில்லை. ஊருக்குள் வந்து நிற்கும் தள்ளுவண்டியை ஆக்கிரமித்து தங்கள் தாவணி பாவாடைகளுக்கோ சேலைகளுக்கோ மேட்சாக வளையல்கள், கிளிப்புகள், ரிப்பன்கள், ஹேர்பின்கள் என வேண்டியதைத் தேடும் அக்காக்களையும், மருதாணியை அரைத்துக்கொடுத்துவிட்டு சிவந்துகிடக்கும் அம்மிக்கல்லுகளையும் பார்க்கமுடியவில்லை. தீபாவளிக்கு ரிலீசாகும் தங்கள் தலைவர்களின் படங்களில் அவர்கள் உடுத்தும் உடைகளைப்போலவே உடுத்திக்கொண்டு கொத்தாக கிளம்பும் நண்பர்கள் இப்போது தங்கள் குழந்தைகளின் புது துணிகளுக்கு மஞ்சள் வைத்துக்கொடுக்கும் வேலையை சலித்தபடி செய்கிறார்கள். கடந்து வந்திருக்கும் காலம் மிகச்சிறியதுதான் ஆனால் இழந்துவிட்ட சந்தோசங்கள் மிகப்பெரியவை. எப்போதும் வற்றாமல் நினைவுகளில் தேங்கி நிற்கும் இந்த தொலைந்துபோன தீபாவளிகளைப்போல.

இத்தனை வருடங்களைக் கடந்துவந்தபின்னும் இன்னும் மாறாமல் இருக்கும் ஒரே விஷயம் பெண்களும் சமையலறைகளும்தான். பண்டிகைகள் வந்துவிட்டால் என்ன சமைக்கணும், யார் யாருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, எதைச்செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள், என்ன செய்து அசத்தலாம் என அம்மாக்களின் யோசனைகளிலேயே பாதி தீபாவளி முடிந்துவிடும். காலையிலேயே குளித்து முடித்துவிட்டாலும் சமையலை சாக்காக வைத்து புது சேலையக் கூட கட்டமாட்டார்கள், சிறப்பு பட்டிமன்ற பேச்சுக்களை காதில் கேட்டபடி சமையல் வேலைகளை முடித்துவிட்டு மதியத்திற்கு மேல் கொஞ்சநேரம் கட்டிவிட்டு அவர்கள் தீபாவளியை சமையலறையோடு முடித்துக்கொள்வார்கள். அவர்களைப்போன்ற அம்மாக்களும், பெண்களும் திளைத்துக் கொண்டாடும் விதமாகவும், முடிந்த அளவு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, யாருக்கும் காயமாகாத தீபாவளியாய் இந்த தீபாவளி அமையட்டும்.


அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் ...!

பஞ்சமி நிலம் என்றால் என்ன?*

பஞ்சமி நிலம் என்றால் என்ன?*

 ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தின் கீழ் இந்தியா அடைபட்டுக்கிடக்கும் வரை, இந்தியாவின் பரந்துபட்ட நிலப்பரப்பு அனைவருக்கும் பொதுவானதாக இல்லை. குறிப்பாக,  தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வளமான நிலப்பகுதிகள் ஒருசில மிராசுதாரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதில், கொத்தடிமைகளாக வேலை செய்தவர்கள் பஞ்சமர்கள் எனப்பட்டனர்.
இந்த பஞ்சமர்களின் வாழ்க்கை மேம்படவும், சம உரிமைக்கிடைக்கவும், நிலம் அவர்களின் கைகளில் சேர வேண்டும் என்ற உரையாடல், 1890களில் ஏற்பட்டது. குறிப்பாக,  விலங்குகளைப் போல வேட்டையாடப்பட்டு, மனிதாபிமானமே இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில் பஞ்சம மக்கள் வாழ்கின்றனர் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஜே.ஹெச்.ஏ.திரமென்ஹீர் ஹெரே 1891-ல் பிரிட்டிஷ் அரசுக்கு 17 பகுதிகள் கொண்ட அறிக்கையை சமர்பித்தார்.
ஜே.ஹெச்.ஏ.திரமென்ஹீர் ஹெரேவிற்கு முன்பாகவே, , திராவிட மகாஜன  சபை நிறுவனரும், ஒரு பைசா தமிழன் பத்திரிக்கை ஆசிரியருமான அயோத்திதாச பண்டிதர், கிறிஸ்துவ மிஷனரி Free of Scotland  சபையை சார்ந்த ஆடம் ஆண்ட்ரு மற்றும் வெஸ்லியன் சபையை சார்ந்த வில்லியம் கௌடி போன்றோரும்  ஒடுக்கப்பட்ட பஞ்சமர்கள் குறித்து பல அறிக்கைகள், மாநாடுகள் வாயிலாக பஞ்சமி நிலம் குறித்து ஆங்கில அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்த நீண்ட கோரிக்கைகளும் உரையாடல்களுமே பஞ்சமர்கள் என்று அழைக்கப்பட்ட பட்டியல் இன மக்களுக்கு நிலங்களை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆங்கிலேயர்களுக்கு கொடுத்தது. இதன் எதிரொலியாக, 1891 ம் ஆண்டு ஒடுக்கப்பட்ட  மக்களுக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்ற விவாதம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தொடங்கியது.
இந்திய விவகாரங்களுக்காக இங்கிலாந்தில் துணைச் செயலாளராகப் பொறுப்பில் இருந்த ஜார்ஜ் நத்தானியேல் கர்சன், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை மேம்பட தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு வெளியுறவுத் துறைச் செயலரும் மதறாஸ் மாகாண அரசும் தயாராக இருப்பதாக அறிவித்தார். இதனையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள் என்ற அறிக்கையின் தொடர் நடவடிக்கையாகத் தான் பட்டியல் இன மக்களுக்கு பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது.  அதன்படி, பட்டியல் இன மக்களுக்கு கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை, முதல்  பத்தாண்டுகளில் யாருக்கும் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ கூடாது என்பது விதி.

சனி, 26 அக்டோபர், 2019

கேரள நடிகை நயன்தாராவிற்கு பெயர் வைத்தவர் ஒர் தமிழக முன்னாள் அமைச்சர் என்பதை நம்ப முடிகிறதா?


கேரள நடிகை நயன்தாராவிற்கு பெயர் வைத்தவர் ஒர் தமிழக முன்னாள் அமைச்சர் என்பதை நம்ப முடிகிறதா?

முழமையாக படிக்கவும். படித்துவிட்டு, என்னை யாரும் திட்டக் கூடாது. ஆனால், கண்டிப்பாக மனதிற்கு நிறைவாக இருக்கும்.

தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார். கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், ‘அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்’ என்றிருக்கிறார்.

உடனே கக்கன் அதை மறுத்துவிட்டு, ‘இந்தப் பயணியர் விடுதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது சரிதான். விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்குத்தான் இங்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதும் முறைதான். ஆனாலும் இப்போது தங்கியிருப்பவர் எனக்கு முன்பே வந்துவிட்டவர். தவிர, தனது பணிகளை முடித்துவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அவரை இந்த நேரத்தில் எழுப்பி சிரமப்படுத்தவேண்டாம். நான் என் தம்பி வீட்டுக்குப் போய் தங்கிக் கொள்கிறேன்’ என்று அமைதியாகச் சொல்ல, உடன் வந்த அதிகாரிகளும் விடுதி மேலாளரும் அப்படியே நெகிழ்ந்து அமைதியாகிவிட்டனர். சொன்ன கையோடு கக்கன் கிளம்பிப்போய், அதே மதுரையில் தனது தம்பியின், ‘சிங்கிள் பெட்ரூம்’ வீட்டில் தங்கிக்கொண்டார்.

கக்கனின் உடன்பிறந்த சகோதரர் விஸ்வநாதன். சிறந்த தடகள வீரர். உரிய தகுதிகளின் அடிப்படையில் விஸ்வநாதனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. கக்கன் அப்போது உள்துறை அமைச்சர் என்பதால் காவல்துறையும் அவர் பொறுப்பில்தான் இருந்தது. அண்ணனைப் பார்த்து தனக்கு போலீசில் வேலை கிடைத்திருப்பதை சொன்னார் விஸ்வநாதன். இதைக் கேட்டதுமே, ‘அப்படியா’ என்று சந்தோஷப்பட வில்லை கக்கன். மாறாக ‘தம்பி, உன் தகுதியின் அடிப்படையில் நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், நான் சிபாரிசு செய்துதான் இந்த வேலை உனக்கு கிடைத்திருப்பதாக பேச்சு வரும். ஆகவே, வேறு வேலைக்கு முயற்சி செய்’ என்று அழுத்தமாகச் சொல்ல... அதிர்ந்து போனார் விஸ்வநாதன். அதோடு நிற்காமல் அப்போது காவல்துறை ஐ.ஜி.யாக இருந்த அருளிடம் தகவலைத் தெரிவித்து, விஸ்வநாதனுக்கான பணி உத்தரவையும் ரத்து செய்யச் சொல்லி விட்டார் கக்கன்.
எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்துக் காத்த கக்கன், மதுரை மாவட்டம் மேலூரில் பிறந்தவர்.
   
பிறப்பு என்பது    தற்செயலாக நடக்கும்  இயற்கை நிகழ்வு. இதில்  பெருமை படவோ அல்லது சிறுமை  கொள்ளவோ   எதுவுமில்லை. சுய (சொந்த) சாதி பெருமை பேசுவதும் சக மனிதனை தன்னை விட தாழ்தவன் என்று கருதுவதும் ஒரு வகையான  😨மன நோய்😬
   
கக்கன் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர். ஆனாலும் சாதி அடையாளம் தன்மீது  வராமல் பார்த்துக்கொண்டார். சேவாலயம் என்ற ஹாஸ்டலில் வார்டனாக இருந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் உள்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல முக்கிய துறைகளின் அமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்.

இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது."(நாம் நடிகர் கருணாஸ் போன்ற தியாகிகளை ஜெயிக்க வைப்பவர்கள்)" அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். இதுகுறித்து செய்திகள் வந்தன. மக்கள் நொந்தனர். கக்கன் மீது அனுதாபம் பொங்கியது. ஆனால் இதற்கெல்லாம் ஒரே பதிலாக கக்கன் சொன்னார்:
எனது வசதிக்கு என்னால் எதைச் செய்துகொள்ள முடியுமோ அதைச் செய்கிறேன். இதில் எனக்கொன்றும் கஷ்டமில்லை’.

தன் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த இந்தத் தியாகச் சீலரை, வாழ்நாளின் கடைசி நாட்களில் வறுமையும், நோயும் சேர்ந்து வாட்டியது. கேரள மாநிலத்தில் உள்ள கோட்டக்கல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற பண வசதி இல்லாததால் பாதியிலேயே ஊர் திரும்பி விட்டார் கக்கன்.
1 மே 1980... இந்த நாள் ஏற்படுத்திய அதிர்ச்சியால்தான் அந்தத் தலைவரின் நிலையை நாடே அறிந்து விக்கித்துப் போனது. மதுரையில் நடந்த மே தின விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மேயர் மதுரை முத்துவை பார்ப்பதற்காக எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு வந்தார். அவரை நலம் விசாரித்துவிட்டு, வெளியே வந்தவர், காரில் ஏறுவதற்காகத் தயாரானார்.

அப்போது அவருடன் வந்திருந்த அமைச்சர் காளிமுத்து லேசான தயக்கத்தோடு, ‘அண்ணே! முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு’ என்று சொல்ல... திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். ‘அப்படியா? இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை? ஐயா எந்த வார்டில் இருக்கிறார்?’ என்று கேட்டார். அங்கிருந்த யாருக்கும் கக்கன் எந்த வார்டில் இருக்கிறார் என்ற தகவல் தெரியாததால் தர்ம சங்கடத்தோடு நின்றனர். எல்லோரையும் கடிந்துகொள்வது போல் பார்த்த எம்.ஜி.ஆரின் முகம் மேலும் சிவக்கிறது.நல்லவேளையாக சற்றுத் தள்ளியிருந்து ஒரு குரல் வந்தது: ‘ஐயா! அவங்க 24-ஆம் நம்பர் வார்டுல இருக்காங்கய்யா’ யாரென்று எம்.ஜி.ஆர். ஏறிட்டுப் பார்க்க... குரல் கொடுத்தவர், மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி. அவரை அழைத்து தோளில் தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., ‘அந்த வார்டைக் காட்டுங்க’ என்று சொல்லி, தொழிலாளியைப் பின்தொடர்ந்து சென்றார்.

மருத்துவமனைக்குள் திரும்பவும் எம்.ஜி.ஆர். வருவதைப் பார்த்து எல்லோரும் பரபரப் பானார்கள். 24-ஆம் நம்பர் வார்டில் எம்.ஜி.ஆர். நுழைந்தார். அந்த சாதாரணப் பொது வார்டில் ஒரு சின்ன அறையில், வெறும் தரையில் படுத்திருந்த கக்கனுக்கு, எங்கிருந்தோ திடீரென இரண்டு நாற்காலிகள் அந்த அறைக்குள் கொண்டு வந்து போடப்பட்டதன் காரணம் புரியாமல் பார்த்தவரிடம் விஷயம் சொல்லப்பட்டு, நாற்காலியில் அமரவைக்கப்பட்டார்.
உள்ளே நுழைந்த எம்.ஜி.ஆரைப் பார்த்ததுமே இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்த கக்கன், தோளில் ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு, நாற்காலியில் இருந்து தடுமாறியபடி எழுந்து நிற்க முயல... கக்கனைத் தடுத்து ஆதரவாக அணைத்துக்கொண்டு உட்கார வைத்த எம்.ஜி.ஆர்., எதிரில் உள்ள நாற்காலி தானும் அமர்ந்தார். ‘தன்னலமற்ற ஒரு தலைசிறந்த ஒரு தலைவர் இப்படி முக்கால் நிர்வாணக் கோணத்தில்’ இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., கக்கனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்க... அதைப் பார்த்து எதுவுமே பேச முடியாமல் கக்கனும் கண் கலங்க... இந்தக் காட்சியைக் கண்டு சுற்றி நின்ற அனைவருமே அவரவர் கண்களைத் துடைத்துக்கொள்ள... அந்த இடமே உணர்ச்சிவசத்தால் உருகியது.
கக்கனின் கைகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., ‘உங்களுக்கு நான் என்ன செய்யணும்?
சொல்லுங்க. உடனே செய்கிறேன். இப்பவே ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றச் சொல்றேன்’ என்றார் அக்கறையாக. ஆனால் கக்கனோ, ‘அதெல்லாம் வேண்டாம். நீங்க தேடி வந்து என்னைப் பார்த்ததே சந்தோஷம்’ என்றார். இதைக்கேட்டு வார்த்தை வராமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்த எம்.ஜி.ஆர். கிளம்பும்போது, ‘என்ன உதவி வேண்டுமானாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள், அவசியம் செய்கிறேன்’ என்று வணங்கி விடை பெற்றார்.

கக்கனின் மீது எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையும் மரியாதையும் அவர் சென்னை திரும்பிய சில நாட்களிலேயே நாட்டுக்கே தெரிந்தது. ‘முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்துப் பயணம் போன்றவை வழங்கப்படும்’ என உத்தரவிட்டார் முதல்வர். கூடவே கக்கனுக்கு ஓய்வூதியம் வழங்கவும் ஆவன செய்தார்.

அதன்பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கக்கனுக்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒரு படுக்கையையும் எம்.ஜி.ஆர். வழங்கினார். அத்தனை சிகிச்சைகள் அளித்தும், 23 டிசம்பர் 1981-இல் நினைவு திரும்பாமலேயே காலமானார் கக்கன்.

கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப் பத்திரிகைகளில் இருக்க... ‘குறை சொல்ல முடியாத மனிதர், கறை படியாத தலைவர்’ என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயரை!

எல்லாம் சரி .நயன்தாராவிற்கு   பெயர் வைத்த தமிழக அமைச்சர் யார் என்று கூறவேயில்லை என்று கேட்கிறீர்களா?

என்ன செய்வது. நல்ல விஷயங்களை கூட நயன்தாரா என்று சொன்னால் தான் முழுமையாக படிக்கிறீர்கள்.

அன்புடன் உங்களில் ஒருவன்

வெள்ளி, 18 அக்டோபர், 2019

உண்மையில் அம்பேத்கர் யாருக்கு சொந்தமானவர்.!??

சிறந்த கட்டுரை அவசியம் படிக்கவும் உண்மையில் அம்பேத்கர் யாருக்கு சொந்தமானவர்.!??

ஆனந்தவிகடனில் எழுத்தாளர் மருதன்:

அம்பேத்கர் யாருக்குச் சொந்தம்?

125 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த ஒருவரை, பொதுவாக எப்படி மதிப்பிடுவார்கள்? நம் காலத்தோடு ஒப்பிட்டு, அவரின் பங்களிப்பு எத்தகையது என அளவிடுவோம். ஆனால், `அம்பேத்கரை மதிப்பிடும்போது மட்டும் இந்த விதியைத் தலைகீழாக மாற்றவேண்டும்' என்கிறார் ஆய்வாளர் பிரதாப் பானு மேத்தா. `நம் காலத்தைக்கொண்டு அம்பேத்கரை மதிப்பிடவேண்டியது இல்லை. அவரை ஓர் அளவுகோலாகக்கொண்டு நாம் வாழும் சமூகத்தை நாம் மதிப்பிடவேண்டும்' என்கிறார் அவர். அவ்வாறு செய்யும்போது அம்பேத்கரின் உருவம் மிகப் பிரமாண்டமாக நம் முன்னர் எழுந்து நிற்கிறது.

`தலித் தலைவர்’ என்று மட்டும் அல்ல, `இந்தியத் தலைவர்’ என்றும்கூட இனி அவரை நாம் குறுக்கிவிட முடியாது. முதல் முறையாக ஐக்கிய நாடுகள் சபை, அம்பேத்கரை ஓர் உலகளாவிய ஆளுமையாக அங்கீகரித்து, அவருடைய 125-வது பிறந்த தினத்தை கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கொண்டாடியிருக்கிறது. `அவர் காலத்தைவிட இன்றுதான் அம்பேத்கர் நமக்குத் தேவைப் படுகிறார்' என்கிறார் நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க்.

`ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் விடுதலைக்காக மார்டின் லூதர் கிங் குரல்கொடுத்தார் என்றால், தலித்துகளின் விடுதலைக்காக அம்பேத்கர் போராடினார்' என்கிறார் ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர். `ஏப்ரல் 14-ம் தேதியை சர்வதேச சமத்துவ தினமாக அறிவிக்க வேண்டும்’ என்னும் கோரிக்கையும் எழுப்பப்பட்டிருக்கிறது.

ஐ.நா-வும் ஹார்வர்டும் கொண்டாடியது இருக்கட்டும், இங்கே நடப்பது என்ன? கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத போர் ஒன்று தொடங்கப்பட்டிருக்கிறது. அம்பேத்கர் யாருக்கானவர்? `சந்தேகமே இல்லை, அவர் ஒரு காங்கிரஸ்காரர்' என்கிறார் ராகுல் காந்தி. இன்னபிற காங்கிரஸ் தலைவர்களும்கூட இதையே வழிமொழிகிறார்கள். `நேருவின் அமைச்சரவையில் பங்கேற்று அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரை எங்களுடையவர் என்றுதானே அழைக்க முடியும்’ என்னும் தர்க்கத்தையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.

`கிடையாது, அம்பேத்கரை உரிமை கொண்டாடும் உரிமை, நியாயப்படி எங்களுக்கு மட்டுமே இருக்கிறது' என்கிறார் பா.ஜ.க-வின் தலைவர் அமித் ஷா. `காங்கிரஸ், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும் அம்பேத்கருக்காக எதையுமே செய்யவில்லை’ என்கிறார் அமித் ஷா. `முந்தைய பா.ஜ.க ஆட்சியில்தான் அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. மத்தியப்பிரதேசத்தில் அம்பேத்கர் பிறந்த `மாவ்' என்ற இடத்தில் முதன்முறையாக நினைவகம் கட்டப்பட்டது மோடி ஆட்சியில்தான். இங்கே வருகை தந்து, மாலை அணிவித்த முதல் பிரதமர் மோடிதான்’ என்கிறார் அமித் ஷா. `பாபா சாகேபின் கனவை நனவாக்கிக் கொண்டிருப்பவர் மோடி மட்டும்தான்’ என்கிறார் அவர்.

தன் சமீபத்திய உரைகள் அனைத்திலும் அம்பேத்கரின் பெயரை உணர்ச்சிபூர்வமாக உச்சரித்துவருகிறார் நரேந்திர மோடி. `சாலை அமைப்பதற்காக ஒவ்வொரு கிராமத்துக்கும் 80 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது; 2018-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரம் வழங்கப்படும்' எனத் தொடங்கி தலித்துகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களை முன்வைத்து ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை பிரசாரக் கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறது பா.ஜ.க. `பாபா சாகேபின் காலடியின்கீழ் பணியாற்றுவதற்கு நான் பெருமைப்படுகிறேன்' என்றும் அறிவித்திருக்கிறார் மோடி.

காங்கிரஸ் அம்பேத்கருக்காக எதுவும் செய்ய வில்லை என்பது உண்மை. அதேபோல், பா.ஜ.க உருப்படியாக எதுவும் செய்யப்போவது இல்லை என்பதும் உண்மை' என்கிறார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி. ராகுல் காந்தி, அம்பேத்கருக்கு உரிமை கொண்டாடுவதை மட்டும் அல்ல, பா.ஜ.க அவ்வாறு செய்வதையும் சேர்த்தே பரிகசிக்கிறார் மாயாவதி.

`அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்தி அவரைக் கீழ்மைப் படுத்தும் செயலையே இந்த இரு கட்சிகளும் செய்துவருகின்றன. பாபா சாகேப் எங்கள் தலைவர்' என்கிறார் அவர்.

அம்பேத்கர், சட்ட அமைச்சராகப் பணியாற்றியபோதும் அரசிய லமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டிருந்தபோதும் அவரைக் கடுமையாக விமர்சித்து கிண்டலடித்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ ஏடான `ஆர்கனைசர்'. சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை அளிக்கும் இந்து சட்ட மசோதாவை அம்பேத்கர் முன்மொழிந்தபோது, அதை `இந்து மதத்தின் மீதான குரூரமான தாக்குதல்’ எனக் கண்டித்து, நூற்றுக்கணக்கான தர்ணாக்களையும் ஆர்ப்பாட்டங் களையும் முன்னெடுத்தது ஆர்.எஸ்.எஸ். இந்து சட்ட மசோதா வாபஸ் வாங்கப்படும் வரை அவர்கள் ஓயவில்லை. அதே ஆர்கனைசரின் கடந்த இதழின் அட்டையில் அம்பேத்கர் இடம்பெற்றிருந்தார். `மாபெரும் ஒருங்கிணைப்பாளர்' என்றும் அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

காங்கிரஸாலும்கூட அம்பேத்கரை உரிமை கொண்டாட முடியாது என்பதே நிஜம். முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருந்ததைப்போல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமை வேண்டும் என அம்பேத்கர் வலியுறுத்தியபோது, காந்தி அதை ஏற்க மறுத்து உண்ணாவிரதம் இருந்ததும், வேறு வழியின்றி 1932-ம் ஆண்டு பு
னே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தன் கோரிக்கையை அம்பேத்கர் திரும்பப்பெற்றுக்கொண்டதும் நினைவுகூரத்தக்கது.

1937-ம் ஆண்டில் பாம்பே பிரசிடென்சி தேர்தலில் அம்பேத்கர் போட்டியிட்டபோது, அவருக்கு பாடம்புகட்ட விரும்பிய காங்கிரஸ், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான பால்வான்கர் பாலோவை அம்பேத்கருக்கு எதிராகக் களம் இறக்கியது. அம்பேத்கருக்கு நன்கு பழக்கமான, அவரால் பாராட்டப்பட்ட பாலோவும் தலித் பிரிவைச் சேர்ந்தவர்தான். அம்பேத்கரை வீழ்த்த அவரைவிடப் புகழ்பெற்றவரான இன்னொரு தலித்தை நிறுத்தும் இந்தச் சமயோசிதமான யோசனையை முன்வைத்தவர், மோடி வழிபடும் மற்றொரு தலைவரான வல்லபபாய் படேல் எனச் சொல்லப் படுகிறது. `பாலோவுக்கு வாக்களித்தால் புனே ஒப்பந்தத்துக்கு வாக்களிப்பது போல’ எனச் சொல்லியே பிரசாரம் மேற்கொண்டது காங்கிரஸ். பாலோவைத் தோற்கடித்தார் அம்பேத்கர்.

பின்னர் காங்கிரஸ் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இடம்பெற்றார் என்றபோதும், இந்து சட்ட மசோதாவை நிறைவேற்ற நேரு அரசு முன்வராததைத் தொடர்ந்து, தன் பதவியை அம்பேத்கர் துறந்தார். 1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் அம்பேத்கரை வீழ்த்த அதே சாதி அரசியலைத்தான் காங்கிரஸ் கையாண்டது. மகர்சாதியினரோடு சமூகரீதியில் போட்டி யிடும் சாமர் சாதியைச் சேர்ந்த ஒருவரை அம்பேத்கருக்கு எதிராகக் களம் இறக்கி அவரைத் தோற்கடித்தது.

காங்கிரஸுடன் அம்பேத்கர் கொண்டிருந்த முரண்பாட்டைத் தமக்குச் சாதகமாக்கிக்கொள்ள இன்று துடிக்கின்றன பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ்-ஸும். ஆனால், அது அத்தனை சுலபம் அல்ல. காரணம், இந்துத்துவர்களிடம் அம்பேத்கர் கொண்டிருந்த முரண்பாடுகள் மிகக் கூர்மையானவை. `இந்த நாட்டுக்கு நேரக்கூடிய மிகப் பெரிய அபாயம் இந்து ராஜ்ஜியம்தான்' என்பது அம்பேத்கரின் உறுதியான நம்பிக்கை. `இந்து மதம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அடிப்படை மனித லட்சியங்களுக்கு எதிரானது' என மீண்டும் மீண்டும் தன் படைப்புகளில் வலியுறுத்தியிருக்கிறார் அம்பேத்கர். இத்தகைய ஒரு மதம் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்றும் `சாதி ஒழிப்பு’ என்னும் தன் நூலில் குறிப்பிடுகிறார் அவர். பாபா சாகேபின் காலடியில் பணியாற்ற விரும்புவதாகச் சொல்லிக்கொள்பவர்கள் இந்த ஒன்றை மட்டுமேனும் செய்ய முன்வருவார்களா?

அம்பேத்கருக்கு உரிமை கொண்டாடும் மூன்றாவது பிரிவினர்... இடதுசாரிகள். சீத்தாராம் யெச்சூரி, பிரகாரஷ் காரத் எனத் தொடங்கி இடதுசாரி கட்சித் தலைவர்கள் பலரும் அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு அழுத்தம் கொடுத்துப் பேசிவருவதைப் பார்க்கிறோம். பா.ஜ.க-வும் காங்கிரஸும் அம்பேத்கரை அபகரித்துக்கொள்ள முடியாது எனத் திட்டவட்டமான ஆதாரங்களுடன் இடதுசாரி சிந்தனையாளர்கள் நிறுவிவருகின்றனர். அது உண்மைதான், அதே சமயம் அம்பேத்கரை ஓர் இடதுசாரி என அவர்களால் இதேபோல் நிறுவிவிட முடியாது. காரணம், அம்பேத்கர் மார்க்சியத் தோடும் முரண்பட்டவர்.

ஆய்வாளரும் எழுத்தாளருமான அனன்யா வாஜ்பேயி சமீபத்தில் எழுப்பியுள்ள கேள்வி முக்கியமானது. `அம்பேத்கருக்காக ஏன் இடதுசாரிகள் இவ்வளவு தாமதமாகக் குரல் கொடுக்கிறார்கள்? அவர் வாழ்ந்த காலத்தில் ஏன் அவர்களால் அம்பேத்கருடன் இணைந்து செயல்பட முடியவில்லை? வர்க்கத்துக்கும் வர்க்க வேறுபாட்டுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை, ஏன் சாதிக்கும் சாதியப் பாகுபாடுக்கும் இடதுசாரிகள் கொடுக்கவில்லை?'

சாதி அமைப்பு, பிராமணியம், இஸ்லாம், மொழி, பாகிஸ்தான், பொருளாதாரம், மதமாற்றம், வர்க்க அரசியல் எனத் தொடங்கி அம்பேத்கர் கொண்டிருந்த சிந்தனைகளையும் வரித்துக்கொண்டிருந்த கனவுகளையும் கவனமாக ஆராய்ந்தால், காங்கிரஸ் கட்சிக்காரர்களும் பா.ஜ.க-வினரும் மட்டும் அல்ல, இடதுசாரிகளாலும்கூட அம்பேத்கரோடு முழுமையாக உடன்பட முடியாது என்பதே யதார்த்தம். இது, இந்த மூன்று தரப்பினருக்கும் அம்பேத்கருடன் ஒன்றிணையும் புள்ளிகள் மட்டும் அல்ல, முரண்படும் புள்ளிகள் என்னென்ன என்பது மிக நன்றாகத் தெரியும். அம்பேத்கரோடு டையாளப்படுத்திக்கொள்வதில் உள்ள சிக்கல்களை அவர்கள் முழுமையாக உணர்ந்திருக் கின்றனர். இருந்தும் அம்பேத்கரோடு அவர்கள் நெருங்கிவருவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.

அவர்கள் அனைவருக்கும் அம்பேத்கர் தேவைப் படுகிறார். உலகளாவிய அளவில் பொருளாதார ரீதியிலும் சமூகரீதியிலும் ஏற்றத்தாழ்வுகள் கூர்மை அடைந்திருக்கும் நிலையில், அம்பேத்கரை அங்கீகரிக்கவேண்டிய அவசியம் ஐ.நா-வுக்கு மட்டும் அல்ல, காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடதுசாரிகளுக்கும்கூட ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. தன் காலத்தைச் சேர்ந்த காந்தி, நேரு, படேல் போன்ற தலைவர்களைக் காட்டிலும் பல மடங்கு அதிக உயரத்தை அம்பேத்கர் இன்று அடைந்திருக்கிறார். அவர்கள் யாரும் பெற்றிராத ஓர் அதிசயத்தை அம்பேத்கர் பெற்றிருக்கிறார். அது, வாக்குவங்கி!

ஒவ்வொரு நாளும் அம்பேத்கரின் மதிப்பும் செல்வாக்கும் புகழும் உயர்ந்துகொண்டே இருப்பதற்குக் காரணம் இதுவே. அதனால்தான் அம்பேத்கரை ஏற்காதவர்களும்
அம்பேத்கருடன் நேரடியாக முரண்பட்டவர்களும் அவருக்கு எதிர்முகாமைச் சேர்ந்தவர்களும்கூட போட்டி போட்டுக்கொண்டு அவரை அபகரிக்கத் துடிக்கிறார்கள்.

டெல்லியிலும் (சிவில் லைன்ஸ்) லண்டனிலும் (பிரிம்ரோஸ் ஹில்) அம்பேத்கர் வசித்த வீடுகளைப் பெரும் பொருட்செலவில் உருமாற்றி, பளபளப்பூட்டி அம்பேத்கரின் பெயரில் அருங்காட்சியகங்களை அமைத்துவருகிறது மோடி அரசு. அம்பேத்கரின் சிலைகளும் அவர் உருவம் பதித்த அழகுப் பொருட்களும் வீதிகளை நிரப்பிவருகின்றன. இந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதியோடு அம்பேத்கர் இறந்து 60 ஆண்டுகள் நிறைவடையப்போகின்றன என்பதால், இனிவரும் காலங்களிலும் அம்பேத்கர் புகழ்வெளிச்சத்தில்தான் இருக்கப்போகிறார்.

நிஜத்தில், அம்பேத்கர் யாருக்கானவர் என்பதை மட்டும் அல்ல, யாருக்கானவர் இல்லை என்பதையும் சமீபத்திய சில நிகழ்வுகள் நமக்குத் தெளிவாகவே சுட்டிக்காட்டியிருக்கின்றன. அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை படோடாபமாகக் கொண்டாடித் தீர்க்கிறது அரசு. ஆனால், அம்பேத்கரை முன்வைத்து பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் இடதுசாரி மாணவர்கள் தங்கள் அரசியலைக் கட்டமைத்துக் கொள்ளும்போது, தங்கள் உரிமைகளை நிலைநாட்டிப் போராடும்போது பாய்ந்துவந்து ஒடுக்குகிறது அரசு. சென்னை ஐ.ஐ.டி-யிலும், ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் சுட்டிக்காட்டும் உண்மை இதுதான். அம்பேத்கர் என்பது, ஓர் அடையாளம். அது ஓர் வாக்கு வங்கி. அது ஒரு ஜடப்பொருள். அவ்வாறு இருக்கும் வரை அம்பேத்கர் வழிபடத்தக்கவர். மற்றபடி அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு உயிர்கொடுக்க முயன்றால், அம்பேத்கரின் கனவுகளை மெய்ப்படுத்த முயன்றால், அது தங்களின் அதிகாரத்துக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பது ஆட்சியாளருக்குத் தெரியும்.

அப்படி ஒரு முயற்சியில் ஈடுபட முயன்றதால்தான், ரோகித் வெமுலா தன் உயிரைக் கொடுக்கவேண்டியிருந்தது. `மனிதன் என்பவன், ரத்தமும் சதையுமான ஒரு ஜீவன் அல்ல. இங்கே அவன் சிந்தனைகளுக்கு மதிப்பு இல்லை. அவன் ஓர் எண், ஒரு வாக்கு, வெறுமனே ஒரு சாதி அடையாளம், அவ்வளவுதான்' என்று தன் தற்கொலை கடிதத்தில் எழுதினார் ரோஹித் வெமுலா.

அம்பேத்கருக்காகப் போட்டியிடு பவர்கள்கூட அவரை இப்படித்தான் பார்க்கி றார்களா? ஒரு சாதி அடையாளமாக, வாக்கு வங்கியாக மட்டுமே குறுக்குகிறார்களா? அப்படி யானால், நாம் செய்யவேண்டியது ஒன்றுதான். அம்பேத்கருக்காக உரிமை கோரும் கட்சிகளிடம் இருந்து அவரை மீட்டெடுத்து, அவர் யாருக்கு மெய்யாகத் தேவைப்படுகிறாரோ அவர்களிடம் அவரைச் கொண்டுசேர்க்க வேண்டும்.

வகுப்புவாதமும் சாதிய ஏற்றத்தாழ்வும் ஆணவக் கொலைகளும் பெருகிக்கொண்டிருக்கும் இன்றையச் சூழலுக்கு, முன்னர் எப்போதையும்விட தீவிரமாக அம்பேத்கர் தேவைப்படுகிறார். அந்த அம்பேத்கர், அனைத்துக் கட்சிகளையும் கடந்து நிற்கிறார். கட்சிகளுக்கு அவர் தேவைப்படலாம்; அவருக்குக் கட்சி தேவைப்படாது. இடது என்றோ வலது என்றோ அவரை முத்திரை குத்தவேண்டிய தேவை இல்லை. எந்த முகாமிலும் அவரைச் சிரமப்பட்டுத் திணிக்கவேண்டிய தேவை நம்மில் யாருக்கும் இல்லை. அவ்வாறு திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை, நாம் பொருட்படுத்தவேண்டிய அவசியமும் இல்லை. ஆடம்பர அருங்காட்சியகங்களும் ஐ.நா விழா கொண்டாட்டங்களும் அவருக்குத் தேவைப்படாது. அவர் அடையாள அரசியலுக்கும் அப்பாற்பட்டவர்.

அம்பேத்கரை எல்லோரும் ஏற்க முடியாது போனாலும், அவர் எல்லாருக்குமானவர்தான். அவரை வலுக்கட்டாயமாக மறுதலிப்பவர் களுக்குக்கூட ஏதோ ஒரு கட்டத்தில் அவர் தேவைப்படுவார். மிக வாஞ்சையோடு அவரை அரவணைப்பவர்களோடும்கூட அவர் முரண்படவே செய்வார்.

அம்பேத்கர், ஓர் இடத்தில் தன்னை இப்படி அறிமுகப்படுத்திக் கொள்கிறார்..

`நான் ஒரு கல். என்னை எதைக் கொண்டும் உருக்கிவிட முடியாது. ஆனால், என்னால் ஆறுகளின் திசைவழியைக்கூட மாற்ற முடியும்.'

மீண்டும் பழைய கேள்விக்கு வருவோம். அம்பேத்கர் ஏன் அவர் வாழ்ந்த காலத்தைவிட இப்போது மிகப் பிரமாண்டமாக வளர்ந்து, மாபெரும் உயரத்தைத் தொட்டிருக்கிறார்? அம்பேத்கர் மாறவில்லை. நாம்தான் மேலும் மேலும் குறுகி, சிறுத்து படுபாதாளத்தில் விழுந்துகிடக்கிறோம். நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்கும்போது அம்பேத்கரின் ஆளுமை பலமடங்கு உயர்ந்து காட்சியளிக்கிறது!

வியாழன், 17 அக்டோபர், 2019

பஞ்சமி நிலங்கள் / தலித் உரிமை களத்தின் 'நிஜ அசுரன்'.!


பஞ்சமி நிலங்கள் / தலித் உரிமை களத்தின் 'நிஜ அசுரன்'.!

தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "அசுரன்" திரைப்படம் பஞ்சமி நிலங்கள் குறித்து சில இடங்களில் பேசுவதாகவும்,அதன் தாக்கத்தால் சமூக வலைத்தளங்களில் பஞ்சமி நிலம் வரலாறு,பஞ்சமி நிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கிறது...

இந்திய சாதிய கட்டமைப்பில் விளிம்புநிலை மக்களுக்கு ஏன் நிலங்கள் வழங்க வேண்டும் என்று பஞ்சமி நிலங்களின் "X-Factor"ஆக விளங்கிய ஜெ.எச்.ஏ.திரமென்ஹீர் அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த போது,பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் அளித்த சென்னேரி பறையர் இன மக்களின் நிலை குறித்த அறிக்கையில் (Notes On Pariah) குறிப்பிட்டு இருந்தது...

 ‘’கணத்த இதயத்துடன் இதை குறிப்பிடுகிறேன்.சென்னேரி பகுதி பறையர் இன மக்கள் வழக்கமான மனிதர்களை விடவும் கணிசமாக என்று கூற இயலாத அளவுக்கு கீழ் நிலையில் உள்ளனர்.அவர்களில் பெரும்பாலனோர் மோசமான ஊட்டச்சத்து கொண்டவர்களாக,படுபயங்கரமான குடிசையில்,மோசமான ஆடைகளை அணிந்து,தொழுநோய் மற்றும் மற்ற கொடுரமான நோய்களை கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.அவர்களுடைய குடிசைகள் பன்றிகள் வசிக்கும் இடங்களை போன்றும், கல்லாதவர்களாகவும்,யாராலும் கவனிக்கப்படாத,இரக்கப்படாத மனிதர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இது அனைவரும் அறிந்த உண்மைதான் என்றாலும்,நான் இவ்வாறு இந்த மனிதர்களைப் பற்றி கூறுவதற்காக மதராஸ் மாகாண வருவாய் துறை மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.இந்தியா நாட்டினுடைய அல்ல,ஆனால் இங்கிலாந்து மக்களின் பொது மனசாட்சி இந்த மகிழ்ச்சியற்ற பரிதாபத்துக்குரியவர்களின் நிலையை கண்டு,அதை தணிப்பதற்காக வெகுண்டு எழும்காலம் வெகுதொலைவில் இல்லை.’’

 “பறையர்களிடம் இருக்கும் பொருட்கள் மிகவும் பழமையானது. (மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து வாங்கி வந்த பொருட்கள் போல). மேல் சாதி இந்துக்கள் இவர்களுக்கு மிகக் கேவலமான வேலைகளையே கொடுக்கின்றனர். இந்து மதம் இவர்களது ஆன்மீக வாழ்விற்கோ அல்லது பொருளாதார முன்னேற்றத்திற்கோ எந்தவிதத்திலும் பயனளிக்கவில்லை. இந்துக்கள் இவர்களை மனிதக்குலத்தின் மிகத்தாழ்ந்த இனமாகவே கருதுகிறார்கள். மிக மோசமான சுகாதாரமற்ற நிலையில் வாழ்கிறார்கள்”

“1844 ல் அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்னும் அடிமைகளாக இருந்த பறையர்கள் படியாட்கள் என்ற முறையில் மீண்டும் அடிமைகளாக்கபடுகின்றனர். இவர்கள் தாங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக தங்களையும் தங்கள் வாரிசுகளையும் மொத்தமாக அடிமைகளாக்கிக்கொள்கின்றனர். இதிலிருந்து விடுபட இவர்களுக்கு ஒரே வழிதான் இருந்தது. அதாவது மற்றொரு எஜமானிடம் கடன் வாங்கிக் கொடுத்துவிட்டு புது எஜமானிடம் மனித அடமானமாகப் போவதுதான் அந்த வழி. வேறு வழியில் விடுபட முயலும் பறையர்களை கிராமம் அல்லது தாலுக்கா நீதிமன்றத்தில் உடன்பாட்டை மீறினார்கள் என்று (!) ‘உடன்பாட்டு மீறல் சட்டத்தின்’கீழ் எஜமானர்கள் வழக்கு தொடுத்து தண்டனை வாங்கிக்கொடுக்கிறார்கள். மிராசுதாரர்களாக பிராமணர்களும் வெள்ளாளர்களும் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களே நிலங்கள் அனைத்தையும் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து உள்ள இடைச்சாதியினரும் நிலங்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் கடைசியிலுள்ள பறையர்கள் எல்லோருமே நிலமற்ற அடிமைகளாக இருக்கிறார்கள். அப்படியே பறையர்கள் புறம்போக்கு நிலத்திற்கு அரசிடம் விண்ணப்பம் செய்தாலும் அந்த நிலம் மிராசுதாரருக்கு வேண்டுமா அல்லது வேண்டாமா என்று அரசு கேட்கும்(!). மிராசுதாரர் வேண்டாம் என்று சொல்வது கிடையாது. அடுத்து பட்டாதாரரிடம் அந்த நிலம் வேண்டுமா என்று அரசு கேட்கும். அவரும் வேண்டாம் என்று சொன்னால்தான் அந்த புறம்போக்கு நிலம் பறையர்களுக்கு கிடைக்கும்.ஆனால் பறையர்கள் நிலம் வைத்திருக்க விரும்பி அரசைக்கேட்டால் கொடுக்க மாட்டார்கள் என்று எண்ணி புறம்போக்கு நிலத்தை எடுத்து அதைக் கஷ்டப்பட்டு சரிசெய்து விளை நிலமாக்கினால் அதுவரை அமைதியாய் இருக்கும் மிராசுதாரர்கள் கடைசியில் அந்த நிலத்தை அபகரித்துவிடுகின்றார்கள்.”

“சிறிது நிலம், சொந்தமான குடிசை, எழுதப்படிக்க தெரிந்திருத்தல், தனது உழைப்பில் சுதந்திரம், தன்மானம் ஆகியவற்றை அவர்களுக்கு கொடுத்தால் பறையர்களின் வாழ்வு இப்போதிருக்கும் மகிழ்ச்சியற்ற அடிமை நிலையிலிருந்து மாறுபட்டதாக இருக்கும்” என்று 5 அக்டோபர் 1891 அன்று கையெழுத்திட்டு தன் அறிக்கையை ஜெ.எச்.ஏ.திரமென்ஹீர் சமர்ப்பிக்கிறார். 1891 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்திற்கு பிறகு 1892 செப்டம்பர் 30 அன்று அரசாணையை (அரசாணை எண் 1010/ நாள் : 30.09.1892) வெளியிட்டது.இச்சட்டத்தின்படி “பஞ்சமி நிலம்” என்ற பெயரிலும் “டி.சி. நிலம் (Depressed Class Land)” என்ற பெயரிலும் இந்தியா முழுவதுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டு,தமிழகத்தில் மட்டும் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்பட்டது...

பஞ்சமி நிலம் குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஜெ.எச்.ஏ. திரமென்ஹீர் குறித்து நாம் நினைவு கூறுவது இன்றியமையாததாகும்...
இன்றைய காலக்கட்டத்தில் தலித்கள் சாதி இந்துக்களிடம் பஞ்சமி நிலங்களை வஞ்சகமாக இழந்து  கையருநிலையில் நிற்கிறோம்...இருப்பினும் இன்று இல்லை என்றாலும்,என்றாவது ஒருநாள் திரமென்ஹீர் விரும்பிய படி பஞ்சமி நிலங்கள் தலித் மக்களிடமே  நிச்சயம் பெற்று தரப்படும் என்பது மட்டும் உறுதி.!

வியாழன், 3 அக்டோபர், 2019

சென்னையை மீட்டுத் தந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி!.


சென்னையை மீட்டுத் தந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி!.

1968 ம் ஆண்டு அதுவரை 'மெட்ராஸ் ஸ்டேட்' என அழைக்கப்பட்டு வந்த சென்னை மாகாணத்திற்கு, தமிழ்நாடு என அழகான பெயர் சூட்டப்பட்டது. இதற்கான தீர்மானம், அன்றைய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, முதல்வர் அண்ணாவால் பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டார் அந்த தலைவர்.
அதிகாரம் தந்த கவுரவத்தினால், சென்னை மாகாணத்தை 'தமிழ்நாடு' என பெயர் மாற்றும் பெருமையை அண்ணா அடைந்தாலும், அந்த பெயர் மாற்றத்திற்குப் பின்னணியாக ஒருவரின் கடந்த காலபோராட்டங்கள் இருந்தன. அதுதான் அண்ணாவின் வானளாவிய பாராட்டுக்கு காரணம்.
அந்த பாராட்டுக்கும் பெருமைக்கும் உரிய அந்த தலைவர், ம.பொ.சி என்கிற மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்.

'தலைநகர் சென்னை' என இன்று நாம் போற்றிக்கொண்டாடும் சென்னை, ஒருநாள் நம்மை விட்டு செல்லும் நிலை வந்தபோது, பெரும்போராட்டங்களை நடத்தி, அதை நமக்கு மீட்டுக்கொடுத்த பெருந்தகை இவர்தான் என்பது இன்றைய தலைமுறையினர் அறியாத சேதி.
தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்!
இந்தியாவிற்கு சுதந்திரம் கைக்கெட்டும் தொலைவில் இருந்தபோது, தெலுங்கு பேசும் மக்களுக்காக தனி ஒரு மாநிலம் வேண்டும் என அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த ஆந்திரர்களிடமிருந்து கலகக்குரல் எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் கூட்டங்களில் பேசிய ம.பொ.சியை,   'கிராமணியே திரும்பிப்போ...!' என தாக்குதல் நடத்தி  விரட்டினர் அந்த மக்கள். மேலும் எதிர்ப்பு காட்டும்விதமாக,  "ஆந்திரம் பிரிக்கப்பட்டால் சென்னையையும் நாங்களே பெறுவோம்” என சவால் விடுத்தனர் அவர்கள் .

பொட்டி ஸ்ரீராமுலு என்ற தெலுங்கு மொழியுணர்வாளர், அதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.  58 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப்பின் அவர் மரணமடைய, பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அவரது மரணத்திற்கு பரிசாக ஹைதராபாத்தை தலைநகராகக் கொண்டு ஆந்திர மாநிலத்தை அப்போதைய காங்கிரஸ் உருவாக்கி ஒப்படைத்தது ஆந்திர மக்களுக்கு. 1953 அக்டோபரில் ஆந்திரம் உருவானது.

சவால் விட்டபடி மாநிலத்தை பிரித்துக்கொண்ட ஆந்திரமக்களின் அடுத்த இலக்கு சென்னை. 1956 ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 'மதராஸ் மனதே' என்ற கோஷத்துடன், ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டுப் போராட்டங்கள் மேற்கொண்டனர்.
வட சென்னை ஆந்திராவின் தலைநகராகவும், தென்சென்னை 'சென்னை மாகாணத்தின்' தலைநகராகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் 'அபாய' கோரிக்கை. அரசியல் களத்தில் இது பல அதிர்வுகளை ஏற்படுத்தின. அப்போது சென்னையை காக்க தமிழகத்தில் இருந்து புறப்பட்ட ஒரே தலைவர் ம.பொ.சி. எல்லா வழிகளிலும் தனது போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து, தமிழகத்தின் தலைநகரான சென்னையை மீட்டுக்கொடுத்தார்.
குமரியும், திருத்தணியும் நமதென்றானது!

திருப்பதியும், திருத்தணியும் ஆந்திரர் வசம் செல்ல இருந்த நிலையில், தனது வலுவான போராட்டங்கள் மூலம் அதையும் முடக்கினார். ஆனாலும் திருத்தணியை மட்டுமே நம்மால் தக்கவைக்கமுடிந்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும், செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்தபோதிலும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன. இப்படி தமிழர்கள் வாழ்வின் நில வளங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை காக்க போராடியத் தலைவர் ம.பொ.சி. சென்னையை காக்க அவரிட்ட முழக்கம், 'தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்' என சென்னையை காக்கும் போரில் இளைஞர்களை எழுச்சியடைச்செய்தவர்.

சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில், 1906  ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார் ம.பொ.சி. மிகவும் வறுமையான சூழலில் பிறந்ததால், 3 ம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டு நெசவுத் தொழிலில் கூலியாளாக வேலை செய்தார்.  பின்னர் அச்சுக் கோர்க்கும் பணியில் நீண்ட வருடங்கள் பணிபுரிந்தார். மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே பின்னாளில் ம. பொ. சி. என்று ஆயிற்று.
31 ம் வயதில் திருமணம். காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு,  சிறைவாசம் சென்ற ம.பொ.சி,  அக்காலத்தில் காங்கிரஸின் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். போராட்டங்களின் விளைவாக,  தன் ஆயுட்காலத்தில் எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் கழித்தவர் ம.பொ.சி.
தமிழரைக்காக்கும் போரில் தமிழரசு கழகம்!

1946 ம் ஆண்டில், கட்சியில் இருந்தபடியே தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார். ஒருகாலத்தில் காங்கிரஸை எதிர்க்கிறவர்கள் யாரையும் தன்னுடைய எதிரியாக வரித்துக்கொண்டு அவர்களை எதிர்த்து நின்றவர் ம.பொ.சி. ஆனால் ஒருகட்டத்தில் காங்கிரசின் பாட்டாளி விரோதப் போக்கினாலும், காந்திய கொள்கைகளை கைகழுவிடும் போக்கினாலும் அதிருப்தியடைந்தார். அதன் விளைவாக உருவானதுதான் தமிழரசு கழகம்.

கொண்ட கொள்கையில் உறுதியும் துணிவும் மிக்கவர் ம.பொ.சி. இதற்கு கள்ளுக்கடை மறியலின்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் கூறலாம்.

கள்ளுத்தொழிலில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுவந்த சமயம், கள்ளுக்கடை மறியலை அறிவித்தது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கொள்கையை நெஞ்சில் நிறுத்திக்கொண்டவரான ம.பொ.சி, தன் கொள்கைக்காக வீதிவிதியாக சென்று கள்ளுக்கடைகள் முன் மறியல் செய்தார். கள்ளுக்கடைகள் மூடப்பட்டால் முதல் ஆபத்து அவரது குடும்பத்தினருக்குத்தான் என்றாலும், தன் கொள்கையிலிருந்து பின்வாங்கவில்லை அவர்.

உச்சகட்டமாக, கள் தொழிலில் அந்நாளில் பிரபலமாக விளங்கிய அவரது தாய்மாமன் கடைமுன்னேயே மறியல் நிகழ்த்தி, உறவினர்களின் வெறுப்பை சம்பாதித்தார்.  ஆனால் ஒருபக்கம் தொழிலுக்காக கள்ளு இறக்குவதும் மறுபக்கம் புகழுக்காக மறியலில் ஈடுபடுவதாகவும் கட்சிக்குள்ளாகவே ம.பொ.சிக்கு எதிரான குரல் எழுந்தபோது, மனம் உடைந்தார்.

1939 ம் ஆண்டு, காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, வ.உ.சிக்கு சிலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உதவி கேட்டுச் சென்றபோது, கட்சியின் பெரிய மனிதர்கள் நழுவிக்கொண்டது அதிர்ச்சியளித்தது அவருக்கு. எனினும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, அன்றைய ஹாமில்டன் வாராவதி சந்தையில் வசித்த எளிய மனிதர்களிடம் கையேந்தி,  சில தொழிலாளர் சங்கங்களின் உதவியோடு அந்த சிலையை நிறுவினார்.
கப்பலோட்டிய தமிழனின் வரலாற்றைக் கட்டி எழுப்பியவர்

பின்னாளில் வேறு பல காரணங்களுடன் அவர் காங்கிரசுடன் முரண்டபடநேர்ந்தது. ஆகஸ்ட் 8, 1954 ம் ஆண்டில், ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகினார். தமிழரசு கழகம் முன்னைவிட வேகம் பெற்று இயங்கியது. கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி யின் புகழ்பரப்பும் பணியை செய்தவர் ம.பொ.சி.. அவரது வரலாற்றை பற்றி நுால் எழுதி,  வ.உ.சியின் தியாகங்களை உலகறிய செய்தவரும் அவர்தான் . ம.பொ.சி எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூல், வ.உ.சியின் பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இந்த நூலை தழுவித்தான் கப்பலோட்டிய தமிழன் என்னும் சிறந்த திரைப்படம் உருவானது என்பார்கள்.

3 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ம.பொ.சி, பின்னாளில் சங்க இலக்கியத்தில் தேர்ந்தவராக விளங்க களம் அமைத்துக்கொடுத்தது சிறைவாசம். தன் சிறைவாசத்தைச் சிலப்பதிகாரம், பாரதியின் படைப்புகள் உள்ளிட்ட இலக்கியங்களை படிக்க பயன்படுத்திக்கொண்டார். பாரதியின் மீது தணியாத காதல் கொண்ட ம.பொ.சி, அவரைப்பற்றி படைத்த நுால்கள் திறனாய்வுக்கு ஒப்பானவை.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி!

1950 ல் சென்னை, ராயப்பேட்டை காங்கிரஸ் திடலில் முதன்முதலாக சிலப்பதிகார மாநாடு நடைபெற்றது. இதற்கு பெரும்பங்காற்றியவர் ம.பொ.சி. ரா.பி.சேதுப்பிள்ளை, டாக்டர் மு.வரதராசனார், காமராஜர் உள்ளிட்ட  பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களையும் மாச்சர்யங்களின்றி  அழைத்து விழாவை நடத்தினார் ம.பொ.சி. அனைத்துக்கட்சி பிரபலங்கள், தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட  தமிழ் கலாச்சார விழாவாக அது நடந்தேறியது. தனது தமிழரசு கழகம் மூலம், சிலப்பதிகார விழாவை தொடர்ந்து நடத்தினார். ம.பொ.சியின் தமிழ்க்கொடையை பாராட்டி,  பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை அவருக்கு 'சிலம்பு செல்வர்' என்னும் பட்டத்தை வழங்கினார். அவரது மறைவிற்குப்பிறகும் மகள் மாதவி அதை தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ம.பொ.சி 1967-71 காலகட்டத்தில் சட்டமன்ற மேலவைத் துணைத் தலைவராக பணியாற்றியபோதுதான் சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது. அது தொடர்பான தீர்மானம் சட்டமன்றத்தில் அண்ணா தலைமையில் நிறைவேற்றப்பட  இருந்த சமயம், ஒரு சிக்கல் எழுந்தது. அதாவது வட இந்தியர்களுக்கு ழகர உச்சரிப்பு வராது என்பதால், தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் tamilnad அதாவது 'டமில் நாட்'  என உச்சரிப்புக்கு வசதியாக மாற்ற ராஜாஜி, திமுக அமைச்சரவைக்கு ஆலோசனை தந்தார்.

இதை ஏற்றுக்கொள்வதாக அண்ணா முடிவெடுத்தபோது ம.பொ.சி அதை எதிர்த்தார். தமிழின் அழகிய ஓசையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல் நாடு என்பது nadu என்றே ஆங்கிலத்தில் இடம்பெறவேண்டும் என வாதிட்டார்.
காங்கிரஸ், திமுகவுக்கு அடுத்தபடியாக திரையுலகப்பிரமுகர்கள் பலர் ம.பொ.சியின் தமிழரசு கழகத்தில் உறுப்பினர்களாகவோ அல்லது ஆதரவாளர்களாகவோ இருந்தனர். பழம்பெரும் இயக்குநர் ஏ.பி.என், அவ்வை டி.கே. சண்முகம் பிரபல தயாரிப்பாளர் ஜி.உமாபதி இன்னும்பலர்.

சட்டமன்ற மேலவை உறுப்பினராக 1952 முதல் 54 வரையிலும், சட்டமன்ற மேலவைத் தலைவராக 1972 முதல் 1978 வரையிலும் ம.பொ.சி பணியாற்றினார். 1986 நவம்பர் முதல் மூன்று ஆண்டு காலம் தமிழ் வளர்ச்சி உயர்நிலைக் குழுத் தலைவராகவும் பணியாற்றியவர்.

1966 இல் ம.பொ.சியின் ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு மத்திய அரசு அவரது பொதுத்தொண்டை பாராட்டி “பத்மஸ்ரீ” விருதினை வழங்கி கவுரவித்தது. இது தவிர சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தினரிடமிருந்து டாக்டர் பட்டம் பெற்றார்.
தமிழக சட்டமன்ற மேலவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி, 1978 முதல் மேலவை கலைக்கப்பட்ட 86 ஆம் ஆண்டுவரை அதன் தலைவராக இருந்தார். அவர் தலைவர் பொறுப்பு வகித்த காலத்தில் மேலவை சிறப்பு பெற்று இயங்கியது.

“அரசியல்வாதி ஒவ்வொருவருக்கும் முக்கிய தேவை தத்துவஞானம். தத்துவஞானம் இல்லாத அரசியல்வாதி தவறுகள் செய்ய அஞ்சமாட்டார். தத்துவஞானமானது அரசியல்வாதியின் ஆசைகளை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தும். ஆசாபங்கம் ஏற்படுகின்றபோது அதனை தாங்கிக் கொண்டு தருமநெறியில் ஊன்றி நிற்கின்ற ஆற்றலை தரும்.இதனை என் வாழ்க்கை அனுபவத்திலே நான் கண்டு வருகின்றேன்“ என்று ம.பொ.சி தன் வாழ்க்கைவரலாற்றில் குறிப்பிட்டார்.

சிலம்புச் செல்வரின் இந்த கூற்று எக்காலத்திற்கும் உகந்த கருத்து என்பதை சமீபகால  அரசியல் வரலாறுகளிலிருந்து நாம் நேரடியாகவே கண்டுவருகிறோம்.

தமிழ், தமிழர், தமிழகம் என தன் இறுதி மூச்சுவரை தமிழ்த்தொண்டுபுரிந்த ம.பொ.சி 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ம் தேதி உடல்நலம் குன்றி தனது 89 வயதில் காலமானார்.